வழிசொல்லும் ஒளிச்சுடர்... ஆன்ம தாகத்தை தணிக்க உதவும் நீரூற்றுகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
பரந்த வெளியில் படுத்திருந்தார் ஞானி ஒருவர். அந்த ஞானியின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண குதிரையில் வந்திறங்கினார் பேரரசர் அலெக்சாந்தர். இவன் யார் என்ற பார்வையில் ஏறெடுத்துப் பார்த்தார் ஞானி. நான்தான், இந்த அகிலத்தையே வென்ற மாவீரன் அலெக்சாந்தர் என்றார் பேரரசர். உடனே ஞானி சப்தமாகச் சிரித்தார். இந்த உலகை வென்றவன் எவனுமே இல்லையே என்றார் ஞானி. அதற்கு அலெக்சாந்தர் நான் இந்தியாவையே வெற்றிகண்டுவிட்டேன் என்றார். இன்னும் சப்தமாகச் சிரித்த ஞானி, தனது மான் தோலை அலெக்சாந்தரிடம் கொடுத்து இதைப் போட்டு அதிலே உட்கார் என்றார். மான் தோலை விரித்து அதிலே அமர்ந்தார் பேரரசர். பின்னர் ஞானி எழுந்திரு என்றார். பேரரசர் எழுந்ததும் மான் தோல் விரிப்பு பழையபடி சுருண்டுகொண்டது. பார்த்தாயா அலெக்சாந்தர். நீ விரித்து அமர்ந்துகொண்டாய். ஆனால் நீ எழுந்தவுடன் அது சுருண்டுகொண்டது. நீ படையுடன் வந்தாய். நாடுகள் உனக்கு அடிபணிந்தன. நீ போனதும் அவை பழையபடி நிமிர்ந்துவிடும் என்றார் ஞானி. இதைக் கேட்டதும் அலெக்சாந்தர் ஞானியைப் புதிராகப் பார்த்தார். ஞானி அன்புடன் அலெக்சாந்தரிடம் இவ்வாறு கூறினார்..
அலெக்சாந்தர், ஆறு பெருக்கெடுத்து ஓடும். ஆனால் அதில் உனக்குத் தேவையானது ஒரு விழுங்குதான். ஆற்றுத் தண்ணீரைக் கைநிறைய அள்ளிக்குடி, அதில் தவறில்லை, ஆனால் ஒட்டுமொத்த ஆறையும் உனது என்று சொந்தம் கொண்டாடதே. பாத்திரம் நிறைய நீரை ஊற்றலாம். அது நிரம்பிய பின்னும் அதில் நீரை ஊற்றினால் அந்த தண்ணீர் வீணாய்க் கீழே வடிந்துவிடும். களஞ்சியம் முழுவதும் நெல் இருந்தாலும் நீ உண்ணப்போவது ஒரு பிடிதான். அரண்மனை முழுவதும் ஆடைகள் இருந்தும் நீ உடுத்தப்போவது ஒன்றைத்தான். உலகம் முழுவதும் நிலம் இருப்பினும் கடைசியில் நீ உறங்கப்போவது ஆறடியில்தான். உன் அரண்மனை முழுவதும் தங்கம் இருந்தும் அது உன்னைக் காக்கவில்லை, நீதான் அதைக் காக்கிறாய்.. ஞானி, வாழ்க்கைத் தத்துவம் பற்றி இவ்வளவு கூறியும், அலெக்சாந்தரால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. குழப்பத்துடன் அந்த இடத்தைவிட்டுச் சென்றார் அலெக்சாந்தர். ஆயினும் பேரரசர் அலெக்சாந்தருக்கு இறக்கும் இறுதிக் கட்டத்தில் ஞானம் பிறந்தது.
புனித சார்லா து ஃபுக்கு (5செப்.1858 – 1 டிச.1916)
அன்பு உள்ளங்களே, புனித சார்லா து ஃபுக்கு (Charles Eugène de Foucauld de Pontbriand) அவர்கள், பிரெஞ்சு நாட்டு படைவீரர், நாடுகாண் பயணி, புவியியல் மேதை, மக்களின ஆய்வாளர், கத்தோலிக்க அருள்பணியாளர், அல்ஜீரியா நாட்டு சஹாரா பாலைநிலத்தில் Tuareg இன மக்கள் மத்தியில் வாழ்ந்தவர், 1916ஆம் ஆண்டில் அவரது 58வது வயதில் கொலைசெய்யப்பட்டவர். இயேசுவின் சிறிய சகோதரர்கள் சபை உருவாகத் தூண்டுதலாக இருந்தவர். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்த புனித சாரலஸ் து ஃபுக்கு அவர்கள், தன் வாழ்வின் ஒரு கட்டத்தில், ஆடம்பரமான உலக வாழ்வில் திருப்தி அடையாது, கடினமான தவ வாழ்வு வாழ்கின்ற டிராபிஸ்ட் துறவியர் சபையில் சேர்ந்தார்.
1858ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பிரான்ஸ் நாட்டு Strasbourg நகரில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த சார்லஸ் து ஃபுக்கு அவர்கள், தனது ஆறு வயதில் பெற்றோரை இழந்தார். பின்னர் தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்த இவர், பிரெஞ்சு இராணுவத்தில் தளபதியாக இருந்த தாத்தாவைப் பின்பற்றி, இராணுவத்தில் சேர்ந்தார். தாத்தாவின் இறப்பிற்குப்பின் அவர் விட்டுச்சென்ற பரம்பரைச் சொத்தை வைத்து உயர்கல்வி கற்றார் சார்லஸ். அல்ஜீரியாவில் பணியாற்றிய பிரெஞ்சு படைப்பிரிவில் இவர் சேர்க்கப்பட்டார். “பின்னோக்கிப் பார்க்காதே” என்ற விருதுவாக்கைக் கொண்ட பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர், பாரிசில் படித்தபோது பணக்கார இளைஞனாகவே வலம்வந்தார். அதேநேரம் அல்ஜீரியா, மொராக்கோ நாடுகளின் கலாச்சாரம், புவியியல் அமைப்பு ஆகியவை பற்றி மிகுந்த ஆர்வத்தோடு கற்றறிந்தார். அந்நாடுகள் பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வை அங்கீகரிக்கும்வண்ணம், 1885ஆம் ஆண்டில் பாரிஸ் புவியியல் சமுதாய விருதாக, தங்கப் பதக்கத்தை இவர் பெற்றார். இராணுவப் பணியில் சோர்வுற்று, தனது 23வது வயதில் படைப்பிரிவை விட்டு விலகினார். பின்னர் நாடுகாண் பயணியாக, அல்ஜீரியா, மொராக்கோ, சஹாரா, பாலஸ்தீனம் போன்ற பகுதிகளுக்குச் சென்றார் சார்லஸ்.
அப்பயணங்களை முடித்து பிரான்ஸ் நாட்டிற்குத் திரும்பிய சார்லஸ் து ஃபுக்கு அவர்கள், கத்தோலிக்க நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, பிரான்சில் 1890ஆம் ஆண்டு சனவரி 16ம் தேதி, Trappist துறவு சபையில் சேர்ந்தார். சிரியாவுக்கும், துருக்கிக்கும் எல்லையிலுள்ள Akbès துறவு இல்லத்திற்கு இவர் அனுப்பப்பட்டு அங்கு ஏழு ஆண்டுகள் வாழ்ந்தார். அத்துறவு இல்லத்தைச் சுற்றி வாழ்ந்த கிராமங்களின் ஏழ்மை நிலை மிகவும் பரிதாபமாக இருப்பதை உணர்ந்த இவர், டிராபிஸ்ட் சபையின் ஏழ்மை, கடுந்தவம், பொதுநலம் ஆகியவற்றை கூடுதலாக வாழ விரும்பி, 1897ஆம் ஆண்டு நாசரேத்து மற்றும், எருசலேம் நகரங்களுக்குச் சென்று ஏழைகளின் கிளாரா சபை இல்லத்தில் வேலையாளாகவும், சுமைதூக்கியாகவும் பணியாற்றியதோடு செப வாழ்வையும் மேற்கொண்டார். அக்காலக்கட்டத்தில் இவர் எழுதிய தியானங்கள், இவரது ஆன்மீகத்திற்கு மூலைக்கல்லாக அமைந்தன. இவர் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்படவேண்டும் என்ற ஆலோசனையை ஏற்று, Akbès துறவு இல்லத்திற்கு மறுபடியும் சென்று தன்னைத் தயாரித்தார். தனது 43வது வயதில் 1901ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் Viviersல் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் சார்லஸ் து ஃபுக்கு.
அதற்குப்பின்னர், அக்காலத்தில் பிரெஞ்சு காலனியாக இருந்த அல்ஜீரியா நாட்டு சஹாராவிலுள்ள டிராபிஸ்ட் சபையின் Béni துறவு இல்லம் சென்று அங்கு கடுந்தவ வாழ்வு வாழ்ந்தார். அச்சமயத்தில், புது சபை ஒன்றைத் தொடங்க விரும்பினார். ஆனால் அதில் யாரும் சேர முன்வரவில்லை. அதனால் ஒரு தனி ஆசிரமத்தில், "இயேசுவின் சகோதரர் சார்லஸ்" என்ற துறவறப் பெயருடன், போதனை அல்ல, வாழ்வுமுறையே எடுத்துக்காட்டு என்ற திருத்தூது ஆர்வத்தோடு Berber இனத்தவர் மத்தியில் வாழ்ந்துவந்தார். இந்த இனத்தவர் அல்ஜீரியா, நைஜர், மாலி, லிபியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளனர். சஹாரா பாலைநிலத்தில் வாழ்ந்துவந்த Berber மக்கள் Tuaregh எனவும் அழைக்கப்படுகின்றனர். இம்மக்களோடு நன்கு உறவாட விரும்பி, அவர்களின் கலாச்சார மரபுகள், மற்றும், மொழியை ஏறத்தாழ 12 ஆண்டுகள் கற்றார் சார்லஸ். அதன் பயனாக Tuareg-பிரெஞ்சு அகராதியை முதன் முதலில் வெளியிட்டார். நூற்றுக்கணக்கான Tuareg கவிதைகளை இவர் சேகரித்தார். இக்கவிதைகளை ஆசிரமத்திற்குக் கொண்டுவந்து தருகின்றவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் அறிவித்து அவற்றைச் சேகரித்தார். Tuareg இன மக்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள சார்லஸ் து ஃபுக்கு அவர்களின் எழுத்துக்கள் உதவுகின்றன எனச் சொல்லப்படுகிறது.
அல்ஜீரியாவின் தென் பகுதியிலுள்ள Tamanghasseல் Tuareg மக்களோடு சார்லஸ் வாழ்ந்துவந்தார். இப்பகுதி, Ahaggar (Hoggar) மலைத்தொடர்களுக்கு மேற்கே, சஹாராவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. 1916ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று, பழங்குடியின குழு ஒன்றால், அவரது துறவு ஆசிரமத்திலிருந்து இழுத்துவரப்பட்டு தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். 2005ஆம் ஆண்டில் அருளாளராக அறிவிக்கப்பட்ட சார்லஸ் து ஃபுக்கு அவர்களை, 2022ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக அறிவித்தார். இப்புனிதரின் திருநாள் டிசம்பர் ஒன்றாந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. இப்புனிதரின் வாழ்வுமுறை, உயிருள்ள நீரூற்றுப்போன்றது. தாகத்தைத் தணிக்க அதில் தண்ணீர் எடுத்தாலும், மீண்டும் மீண்டும் அந்த ஊற்றுக்கு நம்மை வரச்செய்யும். அந்த நீரூற்று புதிய வாழ்வைப் பிறப்பிப்பதற்கு நமக்காக எப்போதும் காத்திருக்கிறது என்று புனித சார்லஸ் து ஃபுக்கு அவர்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. நம் வாழ்வு முழுவதும் கூரை மேலிருந்து நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும். நம் முழு ஆளுமையும், நம் செயல்கள் அனைத்தும் இயேசுவை சுவாசிக்கவேண்டும், நான் இயேசுவுக்குச் சொந்தம் என முழுவாழ்வும் சப்தமாகச் சொல்லவேண்டும். நம் வாழ்வு முழுவதும் இயேசுவை அறிவிப்பதாக, அவரைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கவேண்டும் என்று கூறியவர் புனித சாரலஸ் து ஃபுக்கு.
புனித ஜூஸ்தீனோ ரூசோலில்லோ (18, சன.1891 – 2 ஆக.1955)
2022ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக அறிவித்த பத்துப் பேரில் ஒருவர் புனித ஜூஸ்தீனோ ரூசோலில்லோ (Giustino Russolillo). இவர் 1891ஆம் ஆண்டு இத்தாலியின் நேப்பிள்ஸ் புறநகர் பகுதியான Pianuraவில் பிறந்தார். Pozzuoliவில் படிப்பை முடித்து 1913ஆம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்பட்டார். அந்நிகழ்வின்போது, அருள்பணித்துவ மற்றும், துறவு வாழ்வுக்கு இறையழைத்தலை ஊக்குவிப்பதற்கு துறவு சபை ஒன்றை உருவாக்கவேன் என்ற உறுதிமொழியையும் இவர் எடுத்தார். அதற்கு அடுத்த ஆண்டில் ஆண்கள் குழு ஒன்றிக்கு மறைக்கல்வி வகுப்பு எடுத்தபோது அவர்களில் சிலரில் உண்மையான இறையழைத்தல் இருப்பதைக் கண்டார் அவர். அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்து அவர்கள் அருள்பணியாளர்களாக உதவியதோடு தொடர் பயிற்சியும் அளித்தார். இறையழைத்தலை ஊக்குவிப்பதற்கென்று சிறிய குழு ஒன்றை உருவாக்க இவர் முயற்சித்தார். ஆனால் அது வெகுகாலம் நிலைத்திருக்கவில்லை.
ரூசோலில்லோ அவர்கள், 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி Pianuraவிலுள்ள புனித ஜார்ஜ் பங்குத்தள பொறுப்பை ஏற்றார். அதற்கு அடுத்த அக்டோபர் மாதம் 18ம் தேதி இறையழைத்தல் அருள்பணியாளர்கள் சபையையும், 1921ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இறையழைத்தல் அருள்சகோதரிகள் சபையையும் ஆரம்பித்தார். 1947ஆம் ஆண்டில் இறையழைத்தல் அருள்சகோதரிகள் சபையும், 1948ஆம் ஆண்டில் இறையழைத்தல் அருள்பணியாளர்கள் சபையும், திருத்தந்தையின் அங்கீகாரம் பெற்றன. இவர் 1955ஆம் ஆண்டில் இரத்த புற்றுநோயால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். Russolillo அவர்கள் ஆரம்பித்த சபைகள், தற்போது பிரேசில், அர்ஜென்டீனா, சிலே, ஈக்குவதோர், கொலம்பியா ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், நைஜீரியா, மடகாஸ்கர், தென்னாப்ரிக்கா ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலும், இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆகிய வட அமெரிக்க நாடுகளிலும், இந்தியா, பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பணியாற்றுகின்றன. அச்சபையின் மடகாஸ்கர் நாட்டு அருள்சகோதரர் Emile Rasolofo அவர்கள், இவரின் பரிந்துரையால் அற்புதமாய் குணமானார். இதுவே, ஜூஸ்தீனோ ரூசோலில்லோ அவர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட உதவியது. ஏனென்றால் அருளாளர் ஒருவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு புதுமை ஒன்று நடைபெற்றிருக்கவேண்டும்
புனித அன்னை தெரேசா சொன்னார்: வாழ்க்கை என்பது சாகும்வரை அல்ல, நீ மற்றவர் மனதில் வாழும் வரை என்று.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்