துறைமுக எதிர்ப்பிற்கு ஆதரவு: கர்தினால் ஆலஞ்சேரி
மெரினா ராஜ் - வத்திக்கான்
நாட்டின் மத்திய மற்றும் மாநில அரசுகள், பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முன் சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்யும் குழுவை நியமிக்க வேண்டும் எனவும், துறைமுக கட்டட பணிகளால் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி, தென் கேரள மா நிலத்தில் நடைபெற இருக்கும் 5 நாள் நடைபயண நிகழ்வைத் தொடங்கிவைத்துள்ளார் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
சீரோ மலபார் வழிபாட்டு முறை தலைவரான கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அதானி விழிஞ்சம் என்னும் தனியார் துறைமுகத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் ஐந்துநாள் விழிப்புணர்வு நடைபயணத்திட்டத்தை தொடங்கிவைத்த நிகழ்வில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் இலத்தீன் உயர்மறைமாவாட்டத்தைச் சேர்ந்த ஆயர்கள் மற்றும் குருக்கள் தலைமையில் கத்தோலிக்க மீனவர்களுக்காக கடந்த ஜூன் 20 முதல் நடைபெறும் இத்துறைமுக எதிர்ப்பு போராட்டத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் ஆலஞ்சேரி.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் பெரிய திட்டங்களை செயல்படுத்தும்போது, நன்கு சிந்தித்து, சரியாக திட்டமிட்டு, அனைவரின் அனுமதியும் பெற்று மக்களை இடமாற்றம் செய்கின்றனர் எனவும், கேரளாவில் நடைபெற்று வரும் பணிகளால் எந்தவிதமான முன்னறிவிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் மக்கள் இடமாற்றம் செய்யப்படுவதால், வீட்டுவசதி, தண்ணீர், மின்சாரம், சாலைகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார் கர்தினால் ஆலஞ்சேரி.
கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு மக்களின் கோரிக்கைகளை ஆய்வுசெய்ய ஒப்புக்கொண்டாலும் துறைமுகத் திட்டத்தின் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டது எனவும், இதே நிலை நீடித்தால் கேரளா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். கர்தினால் ஆலஞ்சேரி.(UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்