தேடுதல்

மியான்மாரில் குண்டுவீச்சால் தாக்கப்பட்ட பள்ளி மியான்மாரில் குண்டுவீச்சால் தாக்கப்பட்ட பள்ளி  (AFP or licensors)

மியான்மாரில் அமைதிக்கு அழைப்புவிடுக்கும் திருத்தந்தைக்கு நன்றி

பள்ளிகள், ஆலயங்கள், வழிபாட்டுத்தலங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள், சமூக நிறுவனங்கள் போன்றவை மீது தாக்குதல்கள் இடம்பெறக் கூடாது என்பதை ஆயர்கள் வலியுறுத்தி வருகின்றனர் – யாங்கூன் துணை ஆயர் நோயெல்

மேரி தெரேசா: வத்திக்கான்

தொடர்ந்து ஆயுத மோதல்கள் இடம்பெற்றுவரும் மியான்மாரில், கத்தோலிக்கர் மிகுந்த வேதனையோடு வாழ்ந்து வருகின்றனர், மற்றும், நாட்டினர் அனைவரும் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்று, யாங்கூன் உயர்மறைமாவட்ட துணை ஆயர் Noel Saw Naw Aye அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

செப்டம்பர் 25, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மார் நாட்டில் அமைதி நிலவ விண்ணப்பித்தது குறித்துப் பேசிய ஆயர் Noel அவர்கள், மியான்மாரின் இப்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்து, அந்நாட்டில் வன்முறை ஒழிய அழைப்புவிடுத்துவரும் திருத்தந்தைக்காக கத்தோலிக்க சமுதாயம், எப்போதும் நன்றியுணர்வோடு நினைத்து செபித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

ஆயர்களாகிய நாங்கள், ஒருபுறம் நாட்டை ஆட்சிசெய்கின்ற இராணுவத்திற்குப் பதில்கூறவேண்டியுள்ளது, மறுபுறம் துன்புறும் மக்களைப் பராமரிக்கவேண்டியுள்ளது என்றுரைத்த ஆயர் நோயெல் அவர்கள், நாங்கள் எப்போதும் மக்கள் சார்பாகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறைகளும், மக்களின் கடுந்துன்பங்களும் அகற்றப்படும்வண்ணம், அரசியல் தலைவர்கள் மற்றும், இராணுவத்தின் தலைவர்கள் உரையாடலில் ஈடுபடுமாறு அழைப்புவிடுத்து வருகிறோம் என்றும் ஆயர் நோயெல் அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

கத்தோலிக்கராகிய  நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, போர் மற்றும், வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம், வன்முறையற்றநிலை, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றைப் போதிக்கிறோம் மற்றும், நற்செய்திப் போதனைகளின்படி வாழ முயற்சிக்கிறோம் என்றும் யாங்கூன் துணை ஆயர் தெரிவித்துள்ளார்.

இன்றைய உலகில் பள்ளிகள் மீது குண்டுகள் வீசும் போக்கைப் பார்த்து வருகிறோம் என்றும், உலகிலும் மியான்மாரிலும் மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை நினைத்துப் பார்க்கிறேன், ஈராண்டுகளுகுக மேலாக கடுமையான ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெறும் மியான்மாரில் பலர் பலியாகியும், புலம்பெயர்ந்தும் உள்ளனர் என்று, திருத்தந்தை இஞ்ஞாயிறன்று, இத்தாலியின் மத்தேரா நகரில் நிறைவுசெய்த 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டின் இறுதியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2022, 12:52