திருத்தந்தையர் வரலாறு: திருத்தந்தை 2ம் பயஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இத்தாலியின் சியென்னா (Siena) நகர் அருகே Corsignanoவில் 1405ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி பிறந்த இவரின் இயற்பெயர் எனெயா சில்வியோ தெ பிக்கொலோமினி (Enea Silvio de' Piccolomini) என்பதாகும். 18 குழந்தைகளுள் மூத்தவராகப் பிறந்த இவர், 18ம் வயதில் சியென்னா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற நாள்களில் சுகபோக வாழ்க்கையில் திளைத்தார் என வரலாறு கூறுகின்றது. 1425ஆம் ஆண்டில் சியென்னாவின் புனித.பெர்னார்டு அவர்களின் போதனையை இவர் கேட்டு, மனந்திருந்தி துறவு வாழ்வை மேற்கொள்ள விரும்பினார். ஆனால் இவரின் நண்பர்கள் அதனை அனுமதிக்கவில்லை. அதன்பின் இவர் இரு ஆயர்களிடமும் கர்தினால் Niccolò Albergatiயிடமும் பணிபுரிந்தார். ஒரு பொது நிலையினராக நிர்வாகப் பணிகளில் உதவிய இவர், 1435ஆம் அண்டில் கர்தினாலால் ஸ்காட்லாந்திற்கு பிரதிநிதியாக அனுப்பப்பட்டார். இவ்வுலக இன்பங்களை அதிகம் விரும்பிய சில்வியோ தெ பிக்கொலோமினிக்கு ஸ்காட்லாந்திலும், பிரான்சின் Strasburgலும் திருமணத்திற்கு வெளியே இரு குழந்தைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எதிர்திருத்தந்தையர் வாழ்ந்த காலத்தில் இருந்த இவர், திருத்தந்தை 4ம் யூஜினுக்கு எதிராகச் செயல்பட்டவர்களோடு கைகோர்த்துக் கொண்டு பணியாற்றினார். 1439ஆம் ஆண்டு எதிர்திருத்தந்தை ஐந்தாம் பீலிக்ஸ்(Felix V) அவர்கள், சில்வியோ தெ பிக்கொலோமினி அவர்களை தன் செயலராகத் தெரிந்துகொண்டார். இதற்கிடையில், மன்னர் மூன்றாம் பெரடரிக், இவரின் இலக்கிய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, அரசவைக் கவிஞராக நியமித்தார். எதிர்திருத்தந்தை ஐந்தாம் பீலிக்ஸ், உண்மை திருத்தந்தை 4ம் யூஜினோடு இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டபின், சில்வியோ தெ பிக்கொலோமினி அவர்களின் தவறுகளும் மன்னிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
பொது நிலையினராக இருந்து திருஅவை நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு உழைத்த சில்வியோ தெ பிக்கொலோமினி அவர்கள், 1446ஆம் ஆண்டு வியென்னாவில் துணைத்திருத்தொண்டராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1447ஆம் ஆண்டில் இத்தாலியின் Trieste ஆயராகவும், 1450ஆம் ஆண்டில் சியென்னா ஆயராகவும் பொறுப்பேற்றார். மன்னர் மூன்றாம் பெரடரிக்குடன் தொடர்ந்து நல்லுறவில் இருந்த இவர், 1452ஆம் ஆண்டு மன்னர், பேரரசராக முடிசூட்டப்பட உரோம் நகர் சென்றபோது அவருடன் பயணித்தார். திருத்தந்தை 3ம் கலிஸ்துஸ், இவரை 1456ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி கர்தினாலாக உயர்த்தினார். 1458ஆம் ஆண்டு திருத்தந்தை 3ம் கலிஸ்துஸின் மரணத்திற்குப்பின் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரண்டாம் பயஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். முந்தைய திருத்தந்தையைப் போலவே இவரின் எண்ணமும், துருக்கியர்களின் ஆக்ரமிப்பைத் தடுத்து நிறுத்துவதாக இருந்தது. ஆனால், எவ்வித ஆதரவும் ஐரோப்பிய மன்னர்களிடமிருந்து கிட்டவில்லை. இதற்கிடையில், இத்தாலியின் நேப்பிள்ஸ் முடியாட்சிக்கான போராட்டத்தில் திருத்தந்தை 2ம் பயஸ் அவர்கள் ஒருதலைச்சார்பாக நின்றது, திருத்தந்தையுடன் சில அரசுகளின் ஒத்துழையாமைக்கு வழிவகுத்தது. சிலுவைப்போர் நடத்துவதற்கு மன்னர்களைத் தூண்டவேண்டுமெனில், தானே அதற்குத் தலைமை தாங்கவேண்டும் என எண்ணிய இத்திருத்தந்தை, இத்தாலியின் கிழக்கு நோக்கிப் பயணமானார். ஆனால் 1464ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி இத்தாலியின் அங்கோனா (Ancona) நகரில் காலமானார்.
திருத்தந்தை 2ம் பயஸ், திருஅவையில் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வித்திட்டுள்ளார். ஐரோப்பாவை இஸ்லாமியர்கள் ஆக்ரமிப்பதற்கு எதிராகப் போராட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். துறவு இல்ல வாழ்விலும் சீர்திருத்தங்களைப் புகுத்தினார். சியென்னாவின் புனித கத்தரீனா அவர்கள், இத்திருத்தந்தையால்தான் புனிதராக அறிவிக்கப்பட்டார். எத்தனையோ பணிச்சுமைகள் இருந்தபோதிலும், இலக்கிய மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க சேவையாற்றியுள்ளார் திருத்தந்தை 2ம் பயஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்