வழிசொல்லும் ஒளிச்சுடர்: இறைச்சிந்தனையில் வாழ..
மேரி தெரேசா: வத்திக்கான்
“அனைத்தையும் கடவுளன்புக்காகச் செய்யுங்கள், அப்போது நீங்கள் வாழ்வில் எந்தச் சுமையையும் உணரமாட்டீர்கள். நம் சொந்த சிலுவையை, அதாவது நம் துயரங்களை மற்றவர் மீது சுமத்தாமல், நாமே மனமுவந்து சுமக்கத் தொடங்கினால் அதன் பளுவை உணராமல் புனித மலையின் உச்சியில் நம்மைக் கண்டுகொள்வோம்”. இவ்வாறு கூறியவர் உருகுவாய் நாட்டு முதல் புனிதர் மரிய பிரான்செஸ்கா ருபாத்தோ (Maria Francesca Rubatto).
“மரியெட்டா” என்று குடும்பத்தில் செல்லமாய் அழைக்கப்பட்ட அன்ன மரியா ருபாத்தோ அவர்கள், 1844ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வட இத்தாலியின் தூரின் நகருக்கு தெற்கே 18 மைல்கள் தொலைவிலுள்ள Carmagnola என்ற நகரில் பிறந்தார். இவரது வாழ்வின் முதல் நாற்பது ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் நடக்கவில்லை. ஒருமுறை இவரை திருமணத்திற்குப் பெண் கேட்டு வந்திருந்தாலும், இவர் சிறுமியாக இருந்தபோதே தன் வாழ்வு முழுவதும் கன்னியாகவே இருப்பேன் என தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்திருந்தார். 1863ஆம் ஆண்டில் அன்ன மரியாவின் தாய் மரணடைந்தார். அதற்குப்பின் அன்ன மரியா தூரின் நகரில் வாழ்ந்த தனது அக்காவுடன் வாழத்தொடங்கினார். அச்சமயத்தில் அந்நகரின் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்த Marianna Scoffone என்ற மூதாட்டிக்குப் பணிப்பெண்ணாக வேலையில் சேர்ந்தார் இவர். இந்த மூதாட்டி அன்ன மரியா மீது அதிக அன்பு செலுத்தினார். நாள்கள் செல்லச் செல்ல அன்ன மரியாவை தன் மகள்போன்று நடத்தத் தொடங்கினார் அந்த மூதாட்டி. இது, அன்ன மரியா தன் வாழ்நாள்களைப் பிறரன்புப் பணிகளில் செலவழிக்க உதவியது. உள்ளூர் சிறாருக்கு மறைக்கல்வி வகுப்புகள் எடுத்தார். நோயாளிகள் மற்றும், ஏழைகளைச் சந்தித்து உதவினார். அந்த மூதாட்டியின் சொத்துக்களையும் நிர்வகித்து வந்ததோடு, அச்சொத்துக்களுக்குப் பாதுகாவலரும் ஆனார் அன்ன மரியா.
புதிய மறைப்பணி
அன்ன மரியா பராமரித்துவந்த மூதாட்டி Marianna Scoffone அவர்கள், 1882ஆம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார். அதற்குப்பின்னர் தன் அக்காவோடு வாழத்தொடங்கினார், அன்ன மரியா. அவ்வாறு வாழத்தொடங்கிய ஓராண்டுக்குள் அவரது வாழ்வில் மிகப்பெரும் திருப்பம் ஏற்பட்டது. லோவானோ என்ற கடற்கரை நகருக்கு விடுமுறைக்காகச் சென்ற அன்ன மரியா, அந்நகரிலிருந்த கப்புச்சின் சபையினர் ஆலயத்திற்குத் தினமும் சென்று சிறிதுநேரம் செபித்துவந்தார். ஒரு நாள் அவ்வாறு செபித்துவிட்டு வெளியே வந்தபோது, வழியில் புது துறவு இல்லத்திற்கென நடைபெற்ற கட்டுமானத்திலிருந்து கீழே விழுந்த ஒரு கல், அங்கு வேலைசெய்த ஆண்களில் ஒருவரின் தலையைக் காயப்படுத்தியது. அதைப் பாரத்த அன்ன மரியா, தனது பழைய அனுபவங்களை வைத்து, அந்த நபரின் காயத்திற்கு மருந்திட்டது மட்டுமன்றி, அவர் அதிலிருந்து குணம் பெறுவதற்கு உதவியாக, இரு நாள்கள் கூலியையும் அவருக்குக் கொடுத்தார். அந்த புதிய துறவு இல்லத்திற்குச் செல்லவிருந்த பெண்கள், அன்ன மரியாவின் இந்தப் பிறரன்புப் பணி பற்றிக் கேள்விப்பட்டனர். அதேநேரம், தங்களுக்கு ஓர் ஆன்மிக வழிகாட்டியையும் தேடிக்கொண்டிருந்த அப்பெண்கள், இது கடவுள் காட்டும் ஓர் அடையாளம் என்று உணர்ந்து அன்ன மரியாவை அணுகினர். அன்ன மரியா, அப்பெண்களின் விருப்பத்தை தனது ஆன்ம வழிகாட்டியோடு சேர்ந்து தெளிந்துதேர்வுசெய்தார். அதோடு தூரின் நகரில் மறைக்கல்வி வகுப்புகள் எடுத்தபோது அறியவந்த புனித ஜான் போஸ்கோவின் ஆலோசனையையும் அவர் கேட்டார். அதற்குப்பின்னர், நோயாளிகள் பராமரிப்பு, சிறாருக்கு கல்வி ஆகியவற்றுக்கு அர்ப்பணித்த ஒரு துறவுக் குழுமத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட புதிய பணியை ஏற்றார். இவ்வாறு 1885ஆம் ஆண்டில் அன்ன மரியா, இயேசுவின் மரிய பிரான்செஸ்கா என்ற புதுப்பெயரை ஏற்று, புதிதாக உருவான Loanoவின் கப்புச்சின் அருள்சகோதரிகள் என்ற சபையின் தலைமைச் சகோதரியாகப் பொறுப்பேற்றார். 1973ஆம் ஆண்டில் இச்சபையின் பெயர், அன்னை ருபாத்தோவின் கப்புச்சின் அருள்சகோதரிகள் என்று மாற்றப்பட்டது.
அன்ன மரியா என்ற இயற்பெயரைக்கொண்ட அன்னை இயேசுவின் மரிய பிரான்செஸ்கா ருபாத்தோவின் ஆன்மிகம் பிறரன்புச் செயல்களில் வெளிப்பட்டாலும், அவர் பல ஆண்டுகளாக Marianna Scoffoneவின் சொத்தை நிர்வாகம் செய்த அனுபவம், ஒரு துறவறக் குழுமத்தை நடத்துவதில், நிதியை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு உதவியது. இச்சபை விரைவிலேயே வட இத்தாலியின் மற்ற பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. 1892ஆம் ஆண்டில் அன்னை ருபாத்தோ, தென் அமெரிக்காவின் உருகுவாய் நாட்டிற்கு கப்பல் பயணம் மேற்கொண்டார். உருகுவாய் நாட்டின் மொந்தேவிதேயோவில் தன் சபை இல்லத்தை நிறுவினார். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சபையின் தலைவராகப் பணியாற்றிய இவர், தென் அமெரிக்காவில் பணியாற்றிய தன் சபை சகோதரிகளைப் பார்ப்பதற்காக ஏழு முறை அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கப்பல் பயணம் மேற்கொண்டார். தன் தலைமைப்பணிக் காலத்தில் இத்தாலி, உருகுவாய், அர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் பதினெட்டு துறவு இல்லங்களை நிறுவினார். தற்போது இச்சபையினர், இந்நாடுகள் தவிர தென் அமெரிக்க நாடான பெருவிலும், காமரூன், கென்யா, மலாவி, எத்தியோப்பியா, எரிட்ரியா ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலும் மறைப்பணியாற்றுகின்றனர்.
1904ஆம் ஆண்டில் அன்னை ருபாத்தோ அவர்கள், உருகுவாய் நாட்டில் தன் சபை சகோதரிகளைப் பார்க்கச் சென்ற சமயத்தில் நோயால் தாக்கப்பட்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி புற்றுநோயால் அவர் இறைபதம் சேர்ந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடல் ஏழைகள் மத்தியில் புதைக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இவரை அருளாளராக அறிவித்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை ருபாத்தோவை புனிதராக அறிவித்தார். இவ்வன்னையின் திருநாள் ஆகஸ்ட் 6ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இரண்டாயிரமாம் ஆண்டில் வாகன விபத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஓர் இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். அந்த இளைஞனின் குடும்பம், அன்னை ருபாத்தோவிடம் உருக்கமாக மன்றாடியது. எதிர்பாராதவிதமாகவும், மருத்துவர்களால் விவரிக்கமுடியாதபடியும் அந்த இளைஞன் குணமானான். இதனைப் புதுமை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்றார். இதுவே இவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு உதவியது. அன்னை ருபாத்தோ அவர்கள், உருகுவாய் நாட்டில் தனது வாழ்வின் பெரும்பகுதியை செலவழிக்காமல் இருந்தாலும், அவர் உருகுவாய் மக்களில் நல்தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று போற்றப்படுகிறார். 1993ஆம் ஆண்டில் இப்புனிதர் அருளாளராக அறிவிக்கப்பட்டபோது உருகுவாய் நாட்டினர் தங்களின் பாதுகாவலர் என்று அவரை அழைத்தனர். உருகுவாய் அரசும், இந்த இத்தாலியப் புனிதரின் நினைவாக தபால்தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
புனித ஆன் மரி ரிவியெ (Anne-Marie Rivier)
மரினெட் என்று பரவலாக அறியப்படும் ஆன் மரி ரிவியெர் (Anne-Marie Rivier) அவர்கள், 1768ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி பிரான்ஸ் நாட்டின் Montpezat என்ற ஊரில் பிறந்தார். 1770ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில், பிறந்து 16 மாதங்களே ஆன மரினெட் கீழே விழுந்ததில் மாற்றுத்திறனாளியானார். பக்தியுள்ள அவரது தாய் குழந்தை மரினெட்டை ஒவ்வொரு நாளும், வியாகுல அன்னையின் திருவுருவத்தின் முன்பாக வைத்து செபித்தார். தன் தாயின் செபத்தைக் கவனித்துக்கொண்டிருந்த மரினெட், புனித கன்னி மரியா தனக்குக் குணமளிப்பார் என்பதில் உறுதியாக நம்பினார். சிலுவையடியில் இறந்த தன் திருமகன் இயேசுவை மடியில் தாங்கியிருக்கும் அன்னை மரியா பற்றி தினமும் தியானித்தார். சிலுவையின் இந்த பேருண்மை மரினெட்டின் இதயத்தை நிரப்பியது. இறுதியில் 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மரினெட் நடக்கத் தொடங்கினார். நான்காண்டுகள் வியாகுல அன்னை மரியா பற்றித் தியானித்ததன் பயனாக மரினெட் கற்றுக்கொண்ட பாடம், அவர் அனைத்திற்கும் அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டத் தூண்டியது. மரினெட் தனது வேண்டுதல்களையும் நிறைவாகப் பெற்றுக்கொண்டார்.
பிரான்சில் பிரெஞ்சு புரட்சி தொடங்கியபோது அந்நாட்டில் எந்தவொரு மத நிகழ்வும் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டது. மரினெட் இரகசியமாக ஞாயிறு தினங்களில் மிகவும் எச்சரிக்கையோடு, அதேநேரம், ஒரு திருத்தூதராக, தன் இதயத்தில் பற்றியெரிந்த நம்பிக்கைத் தீயைக்கொண்டு கூட்டங்கள் நடத்தினார். 1794ஆம் ஆண்டில் Thueyts கிராமம் இவருக்கு அழைப்புவிடுத்தது. மரினெட்டும் அந்த அழைப்பை மனதார ஏற்றார். விரைவில் நான்கு பெண்கள் அவரோடு சேர்ந்தனர். நற்செய்தி என்னும் தீயால் பற்றியெரிய அப்பெண்கள் தங்களையே அனுமதித்தனர். அக்காலக்கட்டத்தில் அனைத்து துறவு இல்லங்களும் மூடப்பட்டிருந்தபோது மரினெட்டும், அவரோடு சேர்ந்திருந்த பெண்களும் தங்களுடைய இல்லத்தைத் தொடங்கினர். 1796ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, காணிக்கை அன்னை திருநாளில் மரினெட் அதாவது மரி ரிவியெரும், அவரோடு இருந்த நான்கு பெண்களும் தங்களையே கடவுளுக்கு அர்ப்பணித்தனர். அச்சமயத்தில் வறுமையால் துன்புற்றாலும் இந்த புதிய துறவு இல்லம் வேகமாக வளரத்தொடங்கியது.
இப்புதிய குழுமம் இளையோருக்கு கிறிஸ்தவ கல்வியைக் கற்றுக்கொடுப்பதற்கே முன்னுரிமை கொடுத்தது. எனினும் நாளடைவில் வயதுவந்தோருக்கும் அக்கல்வி வழங்கப்பட்டது. மரி ரிவியெர், ஏழைகள் மீது மிகுந்த அன்புகொண்டிருந்ததால், 1814ஆம் ஆண்டில் ஏழைச் சிறாருக்கென்று முதல் கருணை இல்லத்தைத் தொடங்கினார். இந்த இல்லம் வறிய நிலையில் இருந்தாலும்கூட மிகவும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தோரை வரவேற்பதை புனிதமாகக் கருதியது. எதுவுமே மரியின் திருத்தூது ஆர்வத்தை நிறுத்தவில்லை. பங்குத்தள மக்களிடம் பேசுமாறும், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கூட்டங்கள் நடத்தி அவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்துமாறும் அருள்பணியாளர்கள், மரியைக் கேட்டுக்கொண்டனர். தெளிவாக, சக்தியோடு, அதேநேரம் இதமாகப் பேசியது அனைவரையும் கவர்ந்தது. மரி ரிவியெரிடம் இருந்த அகவலிமையால் அவர் "இயேசு கிறிஸ்துவை அறியச்செய்வது அல்லது இறப்பது!" என உரத்த குரலில் சொல்லிவந்தார். 1838ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி இவர் இறைபதம் சேர்ந்தபோது 141 துறவு இல்லங்களைத் தொடங்கியிருந்தார். அவர் தொடங்கிய பணியைத் தடையின்றி ஆற்றுவதற்கு 350 அருள்சகோதரிகளும் அச்சமயத்தில் சபையில் இருந்தனர். 1982ஆம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரி ரிவியெரை அருளாளராக அறிவித்தபோது, இவர் "நம் காலத்தின் ஒரு திருத்தூதர்" என்று கூறினார்.
“எனது பிள்ளைகள் ஒரு நாள் கடல்களைக் கடப்பார்கள்” என மரி ரிவியெர் அவர்கள் இறைவாக்காகக் கூறியது, 1853ஆம் ஆண்டில் இச்சபை அருள்சகோதரிகள் கானடாவில் மறைப்பணியாற்றச் சென்றபோது உண்மையாகியது. 1873ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் நகரில் தங்களது முதல் இல்லத்தை இச்சபையினர் நிறுவினர். தற்போது இச்சபையினர் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, இஸ்பெயின் இத்தாலி, போர்த்துக்கல், மொசாம்பிக், ஜப்பான், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, செனகெல், பெரு, பிரேசில், காமரூன் புர்க்கினா ஃபாசோ என 19 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றனர். 2022ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரி ரிவியெர் அவர்களைப் புனிதராக அறிவித்தார். இவரது திருநாள் பிப்ரவரி 3ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.
"கடவுளின் பிரசன்னத்தில் வாழ்வதற்கும், அவரது திட்டத்தின் உணவால் பேணி வளர்க்கப்படுவதற்கும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியவர் புனித மரி ரிவியெர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்