பொருள் மற்றும் ஆன்மீக உதவிகளை வழங்கும் கிறிஸ்தவ சபையினர்
மெரினா ராஜ் - வத்திக்கான்
வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உணவு, உடை, நீர் போன்ற அடிப்படைத் தேவைகளோடு ஆன்மீகபலம் தரும் இறைவார்த்தைகளையும் அளிப்பதாக கிறிஸ்தவ சபைப் போதகர் Amjad Niamat அவர்கள் கூறினார்
லாகூரில் உள்ள இயேசுவின் திருஇருதய பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும், புனித பிரான்சிஸ் உயர் நிலைப் பள்ளி சகோதரிகள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், ஏனைய கிறிஸ்தவ சபையினரோடு இணைந்து அப்பகுதியில் உள்ள ஆலயங்களில் வெள்ள நிவாரண முகாம்களை அமைத்துள்ளனர் என்றும், வெள்ள நிவாரணம் பெறும் மக்கள் பேரிடர் விளைவுகள் குறித்த விழிப்புணர்வும், இறைவார்த்தைகளை வாசிப்பதனால் உள்மன அமைதியும் பெறுகின்றனர் என்றும் கூறினார் போதகர் Amjad Niamat,
பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் அதிக அளவு உருகுதல், வெப்பநிலை அதிகரிப்பு, வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்றவற்றை அனுபவித்துவரும் பாகிஸ்தானில் தற்போது வரலாறு காணாத வெள்ளத்தினால் 3 கோடியே 30 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதில் 453 குழந்தைகள் உட்பட 1330 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கால நிலை மாற்றத்தால் அதிக அளவு பாதிக்கப்படும் 10 நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது என்றும், நீர் தொடர்புடைய பேராபத்துக்களைச் சந்திக்கும் 17 நாடுகளில் 14வது இடத்தில் அது இருக்கின்றது என்றும் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் இவ்வாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்