சிரியா, தர்மம் எடுக்கும் நாடாக மாறிவிட அனுமதிக்காதீர்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் சிரியா நாட்டை மறக்கவேண்டாம் என, சிரியாவில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
பல ஆண்டுகளாக போர் இடம்பெற்ற சிரியா மறக்கப்பட்டநிலையில் உள்ளவேளை, அந்நாட்டில் கத்தோலிக்கர் நடத்தும் மருத்துவமனைகள், மக்களுக்குத் தேவையான நலவாழ்வு உதவிகளை வழங்கி வருவதைக் குறிப்பிட்ட கர்தினால் செனாரி அவர்கள், தற்போது சிரியா, புரையோடிய அரசியல், சமூக மற்றும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
“சிரியாவில் கள மருத்துவமனைகள் திட்டம்” என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, செப்டம்பர் 2, இவ்வெள்ளியன்று உரோம் நகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கர்தினால் செனாரி அவர்கள், உக்ரைனில இடம்பெற்றுவரும் போரால், சிரியா மறக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
"சிரியாவில் கள மருத்துவமனைகள் திட்டம்“ என்ற வத்திக்கானின் நலவாழ்வு திட்டத்தை நிர்வகித்துவரும் AVSI அமைப்பின் பொதுச் செயலர் Giampaolo Silvestri அவர்களும், Latakiaவில் ASVI அமைப்பின் மருந்தகம் ஒன்றின் தலைவராகப் பணியாற்றும் பிரான்சிஸ்கன் அருள்பணி Fadi Azar அவர்களும், சிரியா குறித்து கூறியதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் செனாரி அவர்கள், சிரியா மக்களிடையே நம்பிக்கை குறைந்து வருகின்றது என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் மருந்தகங்களின்முன் நின்று உதவி கேட்கிறார்கள் எனவும், எனவே நாடுகள் மத்தியில் சிரியா தன் இடத்தை இழந்து போவதை உலகம் அனுமதிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்ட கர்தினால், சிரியாவை, பிச்சை எடுக்கும் நாடாக மாறிவிட அனுமதிக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
சிரியாவில் ஒரு கோடியே 35 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், 1 கோடியே 15 இலட்சம் மக்களுக்கு நலவாழ்வு வசதிகள் கிடையாது என்றும், இவர்களில் 40 விழுக்காட்டினர் சிறார் என்றும், ஐ.நா.வின் அண்மை ஆய்வு ஒன்று கூறுகின்றது.
திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், மற்றும், கத்தோலிக்க மருத்துவமனைகளின் உதவியோடு, AVSI அமைப்பு, கள மருத்துவமனைகள் திட்டத்தின் வழியாக, சிரியாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளது, 2024ஆம் ஆண்டுக்குள் 1,40,000 பேருக்கு இத்தகைய சிகிச்சை வழங்குவதற்கும் அவ்வமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்