விவிலியத் தேடல்: திருப்பாடல் 34-3. ஆண்டவரின் இனிமையை சுவைப்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஏழைகளுக்குச் செவிசாய்க்கும் இறைவன்!' என்ற தலைப்பில் திருப்பாடல் 34-இல் 5 முதல் 7 வரை உள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வார விவிலியத் தேடலில் அதனைத் தொடர்ந்து வரும் 8 முதல் 11 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையொலியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன் (வசனம் 8-11). ஆண்டவருக்கு அஞ்சுவோரையும், அவரது அன்பை நாள்தோறும் சுவைப்போரையும், அவரை நாடுவோரையும் கடவுள் என்றுமே கைவிடுவதில்லை என்பதே மேற்கண்ட இறைவசனங்களில் தாவீதின் எண்ணமாக வெளிப்படுகிறது.
இது ஓர் உண்மை நிகழ்வு. நமது நாட்டின் காஷ்மீர் மாநிலத்தில் இந்நிகழ்வு நடந்ததாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் தலைவரான இராணுவ அதிகாரியும் இமயமலையில் 3 மாதங்கள் தங்கிப் பணியாற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்விடத்தில் கடுங்குளிர் நிலவியது. இடையிடையே பெய்த பனி மழை, அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது. இந்த நேரத்தில், யாராவது ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அந்த இராணுவ அதிகாரியும் அவர்தம் வீரர்களும் ஆசைப்பட்டனர். ஆனாலும் அதற்கு வாய்ப்பில்லை என்றே அவர்கள் கருதினார்கள். இருந்தபோதிலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஏறத்தாழ ஒரு மணிநேரம் நடந்த பிறகு, வழியில் பாழடைந்த ஒரு சிறிய கடையைக் கண்டனர். அது ஒரு தேநீர் கடைப்போலவே காட்சியளித்தது. ஆனால், அக்கடைப் பூட்டப்பட்டிருந்தது.
நிலைமையைப் புரிந்துகொண்ட அந்த இராணுவ அதிகாரி, “நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். சரி பரவாயில்லை. நாமும் மூன்று மணி நேரம் தொடந்து நடந்து வந்திருக்கிறோம். இவ்விடத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுப்போம்” என்றார். அப்போது அவ்வீரர்களில் ஒருவர், "சார், இது ஒரு தேநீர்க் கடைதான். உள்ளே தேநீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும். நாம் பூட்டை உடைக்கலாமே” என்றார். அந்தத் தலைமை அதிகாரிக்கு இது ஒரு தர்ம சங்கடமான நிலை. சோர்வுற்றுள்ள தன்னுடைய வீரர்களுக்குத் தேநீர் கொடுக்க பூட்டை உடைப்பதா, அல்லது, இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தைச் செய்யாமல் இருப்பதா என்று குழப்பமடைந்தார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு, ஆபத்துக்குப் பாவமில்லை என்று கருதியவராய், வீரர்களிடம் பூட்டை உடைக்கச் சொன்னார். அவர்களின் நல்ல நேரம், கடையின் உள்ளே தேநீர் தயாரிப்பதற்குத் தேவைப்படும் அனைத்தும் இருந்தன. அங்கே சிறிது ரொட்டிதுண்டுகளும் பிஸ்கட்டும் இருந்தன. எல்லாரும் அதிக பசியாய் இருந்ததால் எல்லாவற்றையும் உண்டுவிட்டு, தேவையான அளவிற்குத் தேநீரும் அருந்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். நாம் இந்தக் கடையின் பூட்டை உடைத்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறோம். ஆனால், நாம் மோசமான திருடர்கள் அல்ல. நமது சூழல் அப்படி அமைந்துவிட்டது. நாம் இந்த நாட்டைக் காக்கும் பாரதத் தாயின் பிள்ளைகள். ஆனாலும் இப்படி நாம் செய்தது தவறுதான். ஆகவே, இந்தக் கடைக்காரருக்கு நாம் எதாவது செய்யவேண்டும் என்று எண்ணினார் அந்த உயர் அதிகாரி. எனவே, அவர் ஆயிரம் ரூபாயைத் தன் பர்ஸிலிருந்து எடுத்து, அங்கிருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு, தன் குற்ற உணர்ச்சித் துறந்து, புறப்பட்டார். அடுத்த மூன்று மாத காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஓடுக்கியப் பிறகு, மீண்டும் அதேவழியில் அவர்கள் திரும்ப பயணித்து வந்தனர். அதே தேநீர்க் கடை, ஆனால் இப்போது, அது திறந்திருந்தது. அதன் முதலாளியும் உள்ளே இருந்தார். அவர்கள் அனைவரையும் அழைத்து உட்காரச் சொல்லி, தேநீர் கொடுத்து நன்கு உபசரித்தார் அந்த முதலாளி.
எல்லோரும் தேநீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர். பின்னர் அந்த வயதானவரிடம், இப்படி ஓர் ஆளரவமற்ற இடத்தில் தேநீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கைச் சூழல் பற்றியும் அவர்கள் உரையாடினர். அவரிடம் பல அனுபவக் கதைகள் இருந்தன. அதுமட்டுமன்றி, அவர் கடவுள் மீது ஆழமான அன்பும் நம்பிக்கையும் கொண்டு தெய்வபயம் நிறைந்தவராய் வாழ்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். அப்போது அவ்வீரர்களில் ஒருவர், “ஐயா... கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி வறுமையான நிலையில் வைத்திருக்கவேண்டும்” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “அப்படிச் சொல்லாதீர்கள் மகனே… கடவுள் நிச்சயம் இருக்கிறார். அதற்கு என்னிடம் சான்றே இருக்கின்றது. மூன்று மாதத்திற்கு முன்பு, சில தீவிரவாதிகளால், எனது மகன் அதிகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். அப்போது, நான் எனது கடையை மூடிவிட்டு அவனை உடனே மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றேன். அங்கே மருத்துவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை. தீவிரவாதிகளுக்குப் பயந்து யாரும் எனக்குக் கடன் கொடுக்கவும் முன்வரவில்லை. ஆனாலும், என்மீது கடவுள் மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார் என்பதை எண்ணி அவரிடம் என் மகனைக் காப்பாற்றுமாறு கதறி அழுதேன். கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுதுகொண்டே என் கடையை வந்தடைந்தபொழுது, என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மனம் பதறியவனாய் கடையின் உள்ளே சென்று பார்த்தேன். அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை உங்களுக்கு என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அப்பணத்தைக் கொண்டுதான் மருந்து மாத்திரைகள் வாங்கி என் மகனைக் காப்பாற்றினேன். கடவுள் இருக்கிறார். அவர் என்னைப்போன்ற தெய்வ பயம் கொண்ட அவர்தம் பக்தர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் இருக்கமுடியும்” என்று கூறினார். அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது. அந்த இராணுவ அதிகாரி உடனே எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார். அந்த முதியவரை ஆரத் தழுவிக்கொண்டு, “உண்மைதான் ஐய்யா..., கடவுள் இருக்கிறார் என்று எனக்கும் தெரிந்துவிட்டது. ஐயா..., உங்கள் தேனீர் மிகவும் சுவையாக இருந்தது” என்று அவர் கூறியபோது அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன் (திபா 23:6) என்றும், ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர் (145:8,9) என்றும் ஆண்டரிடம் நாம் சுவைத்து மகிழக் கூடிய அவருடைய பண்புநலன்கள் குறித்து வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார் தாவீது. இதன் காரணமாகவே, ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர் என்று எடுத்துரைக்கின்றார். ஆண்டவரின் இனிமையைச் சுவைக்கும் விதமாக, மோசேயும் அவரது சுவைமிகு பண்புகளை எடுத்துக்காட்டுகிறார். “ஆண்டவர்! ஆண்டவர்!; இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் (விப 34:6-7). உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் (லுக் 6:36) என்றும், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத் 5:48) என்றும் இறைத்தந்தையின் சுவைக்கத்தக்கப் பண்புகளை இயேசுவும் எடுத்தியம்புகிறார்.
பழக்கடை ஒன்றிற்கு வரும் செல்வந்தர் ஒருவர் ஆப்பிள் பழம் ஒன்றை வாங்கிச் சாப்பிட்டார். “சீ.. என்னப்பா பழம் விக்கிற... சுவையே இல்லையே.... இதைப்போய் வாங்கிட்டு பணத்தை விரயம் பண்ணிட்டேனே...” என்று வருத்தப்பட்டார். அதேவேளையில், ஏழை ஒருவர் அக்கடைக்கு வந்து பணக்காரர் வாங்கிச் சாப்பிட்ட அதே பெட்டியிலிருந்து இன்னொரு ஆப்பிள் பழத்தை வாங்கிச் சாப்பிட்டார். ஆஹா... என்ன சுவை...! சாப்பிட சாப்பிட தேனாய்த் தித்திக்கின்றதே...! இன்னும் இரண்டு பழம் கொடுப்பா... என்று கேட்டு வாங்கிக்கொண்டுச் சென்றார். பழம் ஒரே வகையானதுதான். ஆனால் அதைச் சாப்பிடும் நபர்கள்தான் வித்தியாசமான சுவையை வெளிப்படுத்துகின்றனர். தனது தீய எண்ணங்களால் கட்டுண்டு கிடந்த மன்னர் சவுலுக்குக் கடவுள் கசப்பாய் தெரிந்தார். ஆனால் அதேவேளையில், நல்லெண்ணங்களால் நிறைந்திருந்த தாவீதுக்கு, கடவுள் சுவைப்பதற்கு இனிமையானவராகத் தெரிந்தார். ஆகவே, தாவீதைப்போல் நன்மைகள் நிறைந்த மனத்தவராய் எப்போதும் கடவுளை சுவைத்து மகிழ்வோம். அத்தகைய சுவைநிறைந்த அவரை அனைவருக்கும் வழங்கி மகிழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்