தேடுதல்

இறைவேண்டல் இறைவேண்டல்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 34-1-அச்சமகற்றும் இறைவனின் துணை!

தாவீதைப் போல நாமும், அச்சமகற்றி பாதுகாப்பும் நலமும் அருளும் ஆண்டவரைத் துணையாகக் கொள்வோம்.
திருப்பாடல் 34-1

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நம்பினோரைக் கைவிடாதக் கடவுள்!’ என்ற தலைப்பில் திருப்பாடல் 33-இல் 20 முதல் 22 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வார விவிலியத் தேடலில் திருப்பாடல் 34 குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்குவோம்.

‘கடவுளின் கருணையைப் புகழ்தல்’ என்ற தலைப்பில் அமைந்துள்ள இத்திருப்பாடல், ‘தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது’ என்று துணைத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துணைத் தலைப்பானது, தாவீது அரசர் எந்தச் சூழலின் பின்ணியில் இத்திருப்பாடலை எழுதியிருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்தத் திருப்பாடல் எழுதப்பட்டதற்கான பின்னணியை நாம் முதலில் தெரிந்துகொள்வோம். மன்னர் சவுலுக்கும் தாவீதுக்கும் இடையே நடக்கும் தர்மயுத்தமே தாவீதின் அனைத்துத் துன்ப துயரங்களுக்கும் அடிப்படைக் காரணமாகின்றது. தாவீது மீது சவுல் கொண்டிருந்த பொறாமையும், கோபவெறியும், பழிவாங்கும் உணர்வும் தாவீதின் நிம்மதியைத் தொலைக்கச் செய்தன. இதனால், புலிக்குப் பயந்த  மானைப் போல, பல்வேறு இடங்களுக்கு ஓடிச் சென்று தஞ்சம் அடையவேண்டிய அகோர நிலை தாவீதுக்கு ஏற்பட்டது. ஒரு மிகப்பெரிய நாட்டில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் எத்தனையோ இருக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தாவீதைக் கொல்லவேண்டும் என மெனக்கெட்டு அலைகின்றார் மன்னர் சவுல். எனவே, இப்படிப்பட்ட கொடியமனம் கொண்ட சவுலிடமிருந்து தன் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடுகிறார் தாவீது. சவுலிடமிருந்துத் தப்பிச் செல்லும் தாவீது, காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்று தஞ்சமடைகிறார். அங்கும் விடாது ஆபத்து அவரைத் துரத்துகிறது. கோலியாத்தைக் கொன்றொழித்த தாவீதின் வீரத்தைக் கேள்விப்பட்டு சவுல் மன்னரைப்போல அவர்மீது பொறாமை கொள்கிறார் மன்னர் ஆக்கிஸ். ஆகவே, இந்த இக்கட்டான நிலையில், மன்னர் ஆக்கிசிடமிருந்துத் தப்பிப்பதற்காக ஒரு பைத்தியக்காரனைப் போல நடிக்கவேண்டிய மிகமோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார் தாவீது. அப்பகுதியை இப்போது வாசிப்போம்.

பிறகு, தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார். ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?” என்றனர். தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார். அப்பொழுது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், “இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தைக் காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?” என்று சினமுற்றான். (1 சாமு 21: 10-15). தாவீதின் வாழ்வில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வானது, இந்தத் திருப்பாடலில் மட்டுமே எடுத்துக்காட்டப்படுகிறது. மேலும், இம்மாபெரும் ஆபத்திலிருந்து தப்பிய தாவீது, ஆண்டவரைப் புகழும் விதமாக இத்திருப்பாடலை இயற்றுகிறார்.

இந்த வரலாற்றுப் பின்னணியை உள்ளத்திலே உள்வாங்கியவர்களாய் இத்திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடர்வோம். இத்திருப்பாடல் மொத்தம் 22 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இப்போது 1 முதல் 4 வரை உள்ள இறைவார்த்தைகள் குறித்துச் சிந்திப்போம். முதலில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். (வசனங்கள் (1-4).

இந்த நான்கு இறைவசனங்களிலும் இரண்டு சிந்தனைகள் மையப்படுத்தப்படுகின்றன. அதாவது, முதல் மூன்று இறைவசனங்களிலும், ‘கடவுளை நான் புகழ்வேன், போற்றுவேன், பெருமையாகப் பேசுவேன், அவருடைய பெயரைப் பெருமைப்படுத்துவேன்’ என்றெல்லாம் எடுத்துரைக்கும் தாவீது, நான்காவது இறைவசனத்தில், ‘என் மன்றாட்டுக்குப் பதில்மொழி தந்தார்’ என்றும், ‘எல்லாவிதமான அச்சத்தினின்றும் என்னை விடுவித்தார்’ என்றும் கூறுவதுடன், ‘ஏன் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும்’ என்பதற்கான காரணத்தையும் முன்வைக்கின்றார்.

கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் பலர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்பயணிகளில், கடவுள்மீது மிகுந்த பக்திகொண்ட பக்தர் ஒருவரும் இருந்தார். நன்றாக சென்றுகொண்டிருந்த அந்தக் கப்பல் திடீரென ஏற்பட்ட பெரும்புயலில் சிக்கி பல  துண்டுகளாக உடைந்து மூழ்கியது. அப்போது, உடைந்துபோன கப்பலின் ஒரு மரத்துண்டைப் பற்றிக்கொண்டு அந்த இறைபக்தர் மட்டும் எப்படியோ தப்பி அருகிலுள்ள தீவை அடைந்தார். “இறைவா… ஆளரவமற்ற இந்தத் தீவில் நான் தனிமையில் இருந்தாலும், நீர் என்னோடு இருக்கின்றீர். ஏதாவது ஒரு வழியில் எனக்கு நீர் உதவிபுரிந்து என்னைக் காபாற்றுவீர் என்று நான் நம்புகின்றேன்” எனக் கடவுளை நோக்கிக் கூறினார் அந்தப் பக்தர். ஆனால், அவருக்கு எந்தவொரு உதவியும் கிடைத்தபாடில்லை என்றாலும், கடவுள்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை. இப்படியே நாள்கள் கடந்து சென்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருள்களைக் கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றைக் கட்டினார். அங்குக் கிடைத்த பழங்களைக் கொண்டு தினமும் பசியாறிவந்தார். இப்படியே இன்னும் சில நாள்கள் கழிந்தன. ஆனால்,  தனது நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாமல் அவர் தினமும் இறைவனிடம் தொடர்ந்து இறைவேண்டல் செய்துவந்தார். ஒரு நாள் அந்தப் பக்தர் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவரது அந்த ஒரே குடிசையும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தார். ஆனாலும் நம்பிக்கை இழக்காதவராக, இதிலும் கடவுள் ஏதாவதொரு நன்மையை வைத்திருப்பார் என்று கூறித் தன்னைத் தேற்றிக்கொண்டார். அவரது இறைநம்பிக்கை வீண்போகவில்லை. சில மணித்துளிகளில் கப்பல் ஒன்று அவர் தங்கியிருந்த தீவை நோக்கி வந்துகொண்டிருந்தது.

அதனைக் கண்டதும், “எனது இறைவேண்டல்களைக் கேட்டு கடவுள் எனக்கு உதவியுள்ளார். அவர் என்னைக் கைவிடவில்லை. என்னைக் காப்பாற்ற அவர் யாரையோ அனுப்பியுள்ளார்” என்று கூறி உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் அந்தப் பக்தர். அப்போது, கப்பலிருந்து வந்த பணியாளர்கள் அவரைக் கப்பலுக்கு அழைத்துச் சென்றனர். கப்பலுக்குள் சென்றதும்,” நான் இந்தத் தீவில் தனியாக இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று அவர்களிடம் கேட்டார் அந்தப் பக்தர். அதற்குக் கப்பலின் தலைவர்,  “தூரத்திலிருந்து நாங்கள் பார்த்தபோது, இந்தத் தீவிலிருந்து புகை எழும்பியதைப் பார்த்தோம். மேலும், இத்தீவில் கரை ஒதுங்கிய யாரோ ஒருவர் உதவிவேண்டி இப்படி அபயக்குரல் எழுப்புகிறார் என்று எண்ணியே இங்கு வந்தோம்” என்றார். அப்போதுதான் இறைவன் குடிசையை பற்றி எரியச் செய்ததன் காரணம் அப்பக்தருக்குப் புரிந்தது. அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரிந்திருக்கவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவருக்குப் புரிந்தது. தன்மீது நம்பிக்கை வைத்து அனுதினமும் இறைவேண்டல் செய்யும் எந்தவொரு பக்தரையும் கடவுள் எப்போதும் கைவிடவே மாட்டார் என்று சொல்லி மீண்டும் இறைவனுக்கு  நன்றி கூறினார் அந்தப் பக்தர்.

கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன் (திபா 69:30) என்றும், நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;  தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர் (திபா 100:4,5) என்றும், ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். (திபா 138:1,3) என்றும், தாவீது வேறுசில திருப்பாடல்களிலும் ஆண்டவரின் நன்மைத்தனங்களுக்காக அவரைப் புகழ்ந்தேத்தி நன்றி செலுத்துகின்றார்.

தான் இளைஞனாக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, கடவுளைப் பாடிப்புகழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தாவீது. மேலும், கடவுள் தன்னைப் பயன்படுத்தி கோலியாத் என்ற மாபெரும் வீரனை வெற்றிகொள்ள வைத்தமைக்காக அவர் கடவுளுக்கு நன்றி செலுத்துவதையும் நாம் காண்கின்றோம். “நீர், உம் அடியானாகிய என்னைப் பெருமைப்படுத்தியதற்கு ஈடாக தாவீதாகிய நான் சொல்ல வேறு என்ன உளது? ஏனெனில், நீர் உம் அடியானை அறிந்திருக்கிறீர். ஆண்டவரே, நீர் உம் அடியான்பொருட்டு, உம் திருவுளப்படி இத்தகைய மாபெரும் செயல்கள் அனைத்தையும் செய்ததுமன்றி, இத்தகைய மாண்புமிக்க செயல்களையெல்லாம் அறிவித்தீர். ஆண்டவரே, உமக்கு ஒப்பானவர் எவருமில்லை; எங்கள் காதுகளினாலே நாங்கள் கேள்விப்பட்டதின்படி உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை. (1குறி 17: 18-20). சவுல் மன்னர், தாவீது மீது பொறாமைக்கொண்டு அவரைப் பழிவாங்கத் துடித்தாலும், ஆண்டவர் தாவீதுடன் இருப்பதையும் அவரை வழிநடத்துவதையும் அவர் கண்டுணர்ந்தார். இதன் காரணமாகவே, தாவீதுக்கு எதிராகத் தன் கைகளை ஓங்குவதற்கு மன்னர் சவுல் பெரிதும் அஞ்சினார். ஆனாலும் அவர் உள்ளத்தில் கோலோச்சிய தீய ஆவிக்கு அடிபணிந்தார். அதனால்தான்,

கடவுளுக்கு எதிராகச் செயல்பட்ட சவுல் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், கடவுள்மீது இறுதிவரை உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த தாவீதோ, அவர் வழங்கிய அரசப் பதவியையும், அவரது பாதுகாப்பையும், என்றுமுள அன்பையும் அருளையும் கொடையாகப் பெற்றுக்கொண்டார். ஆகவே, தாவீதைப் போல நாமும் அச்சமகற்றி பாதுகாப்பும் நலமும் அருளும் ஆண்டவரைத் துணையாகக் கொள்வோம். அதற்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2022, 15:04