கஜகஸ்தான் திருத்தூதூப் பயணம், மிகப்பெரிய ஆசிர்வாதம்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கஜகஸ்தான் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், அந்நாட்டு கத்தோலிக்கருக்கும், நாட்டினர் எல்லாருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம் என்று, அஸ்தானா பேராயர் Tomasz Peta அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 13, வருகிற செவ்வாய் முதல் 15, வியாழன் வரை, தனது 38வது வெளிநாட்டுத் திருத்தூதூப் பயணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கஜகஸ்தானுக்குச் செல்லவிருப்பதையொட்டி, வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார், பேராயர் Tomasz Peta.
கஜகஸ்தானின் மிகப்பெரிய மற்றும், ஒரே உயர்மறைமாவட்டமாகிய அஸ்தானாவின் பேராயர் Peta அவர்கள், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கியத்துவம், அந்நாட்டில் கத்தோலிக்கம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் போன்றவை குறித்து அப்பேட்டியில் தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.
இம்மாதம், 14, 15 ஆகிய இரு நாள்களில், கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் நடைபெறவிருக்கும் ஏழாவது உலக மற்றும், பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் மாநாட்டில் திருத்தந்தை கலந்துகொள்வது, கடவுள், அமைதியின் ஊற்றைச் சுட்டிக்காட்டுவதன் ஓர் அடையாளமாக உள்ளது என்றும் பேராயர் Peta அவர்கள், கூறியுள்ளார்.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், எப்போதுமே, குறிப்பாக, கத்தோலிக்கர் சிறுபான்மையினராக வாழ்கின்ற அந்நாட்டில், வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக அமையும் எனவும் பேராயர் Peta அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள உலகளாவிய சூழலை நோக்கும்போது திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், உலக அளவில் அமைதி மற்றும், ஒப்புரவை ஊக்குவிப்பதாக இருக்கும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள பேராயர் Peta அவர்கள், நூர்-சுல்தான் பேராலயத்தில் Great Steppe அன்னை மரியா திருப்படத்தை திருத்தந்தை ஆசிர்வதிக்கவிருப்பதற்கு நாங்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
Ozyornoye நகரில், அமைதியின் அரசி தேசிய திருத்தலத்தில் வைக்கப்படும் இத்திருப்படம், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தை நினைவுபடுத்தும் எனவும், திருத்தந்தையோடு ஆன்மிக அளவில் ஒன்றித்து, உலக அமைதி மற்றும், திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிப்போம் எனவும், பேராயர் Peta அவர்கள் கூறியுள்ளார்.
கஜகஸ்தான் மக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, புனித பேதுருவின் வழிவருபவராக, திருஅவையின் தலைவராக நோக்குகிறார்கள் என்றும், அவரை மகிழ்வு மற்றும், நம்பிக்கையோடு வரவேற்க காத்திருக்கிறார்கள் என்றும், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்தானா பேராயர் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான் நாட்டின் ஒரு கோடியே 90 இலட்சம் மக்களில் ஏறத்தாழ எழுபது விழுக்காட்டினர் முஸ்லிம்கள், 25 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், மற்றும், ஒரு விழுக்காட்டினர் கத்தோலிக்கர். மேலும், கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினோர் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.
2001ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கஜகஸ்தான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு அங்கு வாழ்கின்ற கத்தோலிக்கரை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அதே நோக்கத்திற்காக அந்நாட்டிற்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்