கிழக்கு ஆப்ரிக்காவின் பசிக்கொடுமை புறக்கணிக்கப்படக் கூடாது
மேரி தெரேசா: வத்திக்கான்
கிழக்கு ஆப்ரிக்காவில் பசிக்கொடுமையால் துயருறும் மக்களுக்கு வழங்கும் நிதியுதவியை மேலும் அதிகரிக்குமாறு, தென் சூடான் மற்றும், கென்யா நாடுகளின் 40க்கும் மேற்பட்ட ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை ஆயர்கள், பிரித்தானிய அரசை விண்ணப்பித்துள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில் பசியால் வாடும் மக்களுக்கு உதவ, உலகளாவிய சமுதாயத்தையும் தூண்டுமாறு பிரித்தானிய அரசுக்கு அழைப்புவிடுத்துள்ள ஆங்லிக்கன் ஆயர்கள், கிழக்கு ஆப்ரிக்க மக்கள், நாற்பது ஆண்டுகளுக்குப்பின் தற்போது கடும் பஞ்சம், மற்றும், பசிச்சாவை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளனர்.
தென் சூடான் மற்றும், கென்யா நாடுகளின் 44 ஆங்லிக்கன் ஆயர்கள் பிரித்தானிய அரசுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், கென்யா, எத்தியோப்பியா, சொமாலியா ஆகிய நாடுகளில் ஒரு கோடியே 84 இலட்சம் மக்கள், கடும் உணவுப்பற்றாக்குறையால் பசிக்கொடுமையை எதிர்கொள்கின்றனர் என ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பு கூறியுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக மனிதநேய நாளுக்கு முந்திய நாள் நடைபெற்ற திருவழிபாட்டிற்குப்பின் பேசிய கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், கிழக்கு ஆப்ரிக்காவில் குறைந்தது ஈராண்டுகளாக மக்கள் எதிர்கொண்டுவரும் பசிக்கொடுமை, தற்போது வாழ்வை அச்சுறுத்தும் விதமாக மோசமடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
அப்பகுதி மக்கள் தேவையான உணவை வாங்குவதற்கு, பிரித்தானிய அரசும் மக்களும் உதவுமாறு அழைப்புவிடுக்கிறேன் எனவும், பேராயர் வெல்பி அவர்கள் கூறியுள்ளார்.
தென் சூடான் ஆங்லிக்கன் சபைத் தலைவரான ஆயர் Justin Badi Arama அவர்கள் கூறுகையில், கிழக்கு ஆப்ரிக்காவில் மக்கள் பசியால் இறக்கின்றனர் என்றும், நான்கு பேருக்கு மூவர் என இலட்சக்கணக்கானோர் பசிக்கொடுமையை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.(ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்