தேடுதல்

உக்ரைன் குடும்பத்தினர் உக்ரைன் குடும்பத்தினர் 

உக்ரேனிய அன்னையரோடு தலத்திருஅவை தோழமை

உக்ரைனில் அழிவையும் மரணத்தையும் சோர்வின்றி விதைத்துவரும் இரஷ்யாவிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக, உக்ரைன் நாட்டு ஆண்கள் நாட்டிலே தங்கிப் போரிட்டுவருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்திவரும்வேளை, நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்களின் கணவர்களை விட்டுவிட்டு, பிள்ளைகளோடு புலம்பெயரும் அந்நாட்டு அன்னையரோடு தலத்திருஅவை தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் போர் தொடங்கி ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியோடு 170 நாள்கள் ஆகியுள்ளநிலையில், நாட்டின் நிலவரம் குறித்து தினமும் அறிக்கை வெளியிட்டுவரும் அந்நாட்டு கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் உரோம் செயலகம், ஆகஸ்ட் 12 இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

உக்ரைனில் அழிவையும் மரணத்தையும் சோர்வின்றி விதைத்துவரும் இரஷ்யாவிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக, உக்ரைன் நாட்டு ஆண்கள் நாட்டிலேயே தங்கிப் போரிட்டுவரும்வேளை, அன்னையர் மட்டும் தங்கள் பிள்ளைகளோடு நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இவர்களை இவ்வறிக்கையில் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ள உக்ரைன் ஆயர்கள், அவ்வன்னையருக்காகச் செபிப்பதாகவும், அவர்கள், அந்நியப் பூமியில் வாழ்கின்றபோது தங்களின் பிள்ளைகளை கிறிஸ்தவத்தில் வளர்க்கவும், நாட்டுப்பற்று மற்றும், கலாச்சார உணர்வை ஊட்டவும், கல்வியறிவு வழங்கவும் வேண்டும் என்று விண்ணப்பம் விடுத்துள்ளனர்.

சமுதாயம், மனிதருக்காக இருக்கின்றது. எனவே சமுதாயத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பவேண்டும், இதற்கு பொது நலன்மீது அக்கறை அவசியம் என்பதையும் உக்ரைன் தலத்திருஅவையின் உரோம் அலுவலகம் எடுத்துரைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2022, 14:22