தேடுதல்

Zaporizhzhia அணு மின் நிலையம் Zaporizhzhia அணு மின் நிலையம்  

Zaporizhzhia அணு மின் நிலையத் தாக்குதலுக்கு திருப்பீடம் கண்டனம்

Zaporizhzhia அணு மின் நிலையப் பகுதியை, இராணுவச் செயல்பாடுகள் அற்றதாக அறிவிப்பதற்கு, ஐ.நா.வின் IAEA நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி - உக்ரைன் பேராயர் Shevchuk

மேரி தெரேசா: வத்திக்கான்

இவ்வாரத்தில் குண்டுவீச்சுக்களால் தாக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் Zaporizhzhia (NPP) அணு மின் நிலையம் அமைந்திருக்கும் பகுதியை, இராணுவச் செயல்பாடுகள் அற்றதாக அறிவிப்பதற்கு, ஐ.நா.வின், பன்னாட்டு அணு சக்தி நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார், உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk.

இந்த அணு மின் நிலையம் தாக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த இப்பன்னாட்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும், எதையும் மிகைப்பட அறிவிக்காமல் உண்மை நிலவரம் குறித்துப் பேசியுள்ளனர் என்றும், அவர்கள், இத்தாக்குதல், அணுப் பயங்கரவாதப் பிரச்சனையை உலகுக்கு முன்வைத்துள்ளது என கூறியிருக்கின்றனர் என்றும் பேராயர் Shevchuk அவர்கள் கூறியுள்ளார்.

உக்ரைனில் போர் தொடங்கி ஆகஸ்ட் 13, இச்சனிக்கிழமையோடு 171 நாள்கள் ஆகியுள்ளநிலையில்,  நாட்டின் நிலவரம் குறித்து ஒவ்வொரு நாளும் காணொளி வழியாக விளக்கிவருகின்ற பேராயர் Shevchuk அவர்கள், ஆகஸ்ட் 11, இவ்வியாழனன்று மட்டும் ஐரோப்பாவின் மிகப் பெரிய Zaporizhzhia அணு மின் நிலையம் நான்கு முறை குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த அணு மின் நிலையம், இரஷ்யாவுக்கு உரியதாக இருக்கவேண்டும், அல்லது, அப்பகுதியை அணுக்கதிர்வீச்சுப் பகுதியாக மாற்றுவோம் என்றுரைத்துள்ள இரஷ்ய இராணுவ அதிபரின் வார்த்தைகளால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது என்றும், அப்பகுதியிலிருந்து இரஷ்யா தன் படைகளை அகற்ற மறுத்துள்ளது என்றும், உக்ரைன் தலத்திருஅவைத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் Zaporizhzhia அணு மின் நிலையப் பகுதியில் இரஷ்யா தன் இராணுவத்தை நிறுத்தி, ஐரோப்பாவுக்கும், உலகம் முழுவதற்கும் அச்சுறுத்தலை உருவாக்கி வருவது குறித்து, திருப்பீடம் கண்டனம் தெரிவித்திருப்பதற்கும், பேராயர் Shevchuk அவர்கள் நன்றி கூறியுள்ளார்.

இத்தகைய இக்கட்டான சூழல்களில், கத்தோலிக்கத் திருஅவை மற்றும், திருப்பீடம் ஒலிக்கும் உண்மையின் குரல், நவீன உலகில் கொந்தளிக்கின்ற கடல் போன்று உள்ளது என்று கூறியுள்ள பேராயர் Shevchuk அவர்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள நம் சகோதரர், சகோதரிகளுக்கு மனிதாபிமான உதவிகள் ஆற்றப்படவேண்டியதன் அவசியத்தையும்  எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2022, 14:48