தேடுதல்

மரண தண்டை விதிக்கப்பட்ட நபர் கை விலங்குடன்  மரண தண்டை விதிக்கப்பட்ட நபர் கை விலங்குடன்  

மரண தண்டனைக்கு எதிரான ஆசியத் திருஅவையின் குரல்

ஒருவர் பெரும் பாவத்தைச் செய்திருந்தாலும், அவரது மனித மாண்பு ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியில் கத்தோலிக்கத் திருஅவை உறுதியாக நம்புகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மரண தண்டனை நிறைவேற்றல் என்ற வன்செயல், அமைதியான சமுதாயத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப உதவாது என்று, ஜப்பான், மியான்மார், மற்றும், சிங்கப்பூர் நாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மரண தண்டனைக்கு எதிராக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, ஜப்பான் ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி பணிக்குழு.

இந்த ஆசிய நாடுகளில் கடந்த சில மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து ஜூலை 31, இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவற்ற இச்செயல் புதியதொரு வன்முறைக்கே இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது, அப்பணிக்குழு.

கடந்த வாரத்தில், மியான்மாரில் நான்கு அரசியல் கைதிகளுக்கும், ஜூலை 26, கடந்த செவ்வாயன்று, ஜப்பானில், 2008ஆம் ஆண்டில் ஏழு பேரை கத்தியால் குத்திக் கொலைசெய்த Tomohiro Kato என்பவருக்கும், சிங்கப்பூரில் கடந்த ஐந்து மாதங்களில் ஐந்து பேருக்கும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில், மரண தண்டனை குறித்த திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனைகள் பற்றிய சிந்தனைகளை, தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜப்பானின் நீதி மற்றும், அமைதி பணிக்குழு, டோக்கியோ தடுப்புக்காவல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 39 வயது நிரம்பிய Tomohiro Kato அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து தன் ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் ஜூலை 26ம் தேதி, ஆறு மரண தண்டனை கைதிகளுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அதே நாளில், 2022ஆம் ஆண்டில் Kato அவர்களது விலைமதிப்பற்ற வாழ்வும் அரசின் கரங்களால் பறிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ள அந்தப் பணிக்குழு, எந்தவொரு வாழ்வும் வாழத் தகுதியானதே என்ற கத்தோலிக்கரின் உறுதிப்பாட்டை மீண்டும் புதுப்பிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மனிதரும் விலைமதிப்பற்றவர் என்றும், அம்மனிதர் பெரும் பாவத்தைச் செய்திருந்தாலும், அவரது மனித மாண்பு ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை, கத்தோலிக்கத் திருஅவை, இயேசு கிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்ட நற்செய்தியின் ஒளியில் உறுதியாக நம்புகிறது என்று, ஜப்பான் ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி பணிக்குழு கூறியுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2022, 15:20