தேடுதல்

பணிவுடன் இறைத்தந்தையை நோக்கி இயேசுவின் இறைவேண்டல் பணிவுடன் இறைத்தந்தையை நோக்கி இயேசுவின் இறைவேண்டல்  

பொதுக் காலம் 22ம் ஞாயிறு : ‘இறுமாப்பு அகற்றி பணிவை ஏற்போம்!'

தனிமனித வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையானது பணிவு என்னும் மனத்தாழ்மைதான் என்பதை உணர்வோம்..
ஞாயிறு சிந்தனை 28082022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. சீஞா 3: 17-18, 20, 28-29  II. எபி 12:18-19, 22-24a III. லூக் 14: 1, 7-14)

பொதுக் காலத்தின் 22-ஆம் ஞாயிறு இன்றுச் சிறப்பிக்கப்படுகிறது. நாம் எந்நிலையிலும் பணிவுடன் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் நமக்கு வழங்குகின்றன. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது எண்ணங்களை விரிவுபடுத்துவோம். குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். இறுமாப்புக்கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது. நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.  

ஒரு மனிதரின் நடவடிக்கைகள் மற்றும் பிறர் அவரைப்பற்றி கூறும் கருத்துக்களை வைத்து அந்த மனிதர் இறுமாப்புக் கொண்டவரா அல்லது பணிவு நிறைந்தவரா என்பதை நாம் கூறிவிட முடியும். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ‘‘ஏய் கிழவா, யாராவது இந்த வழியாகச் சென்றார்களா?’’ என்று மரியாதையின்றி இறுமாப்புடன் கேட்டான். அதற்கு அந்தத் துறவி ‘‘அப்படி யாரும் சென்றதாகத் தெரியவில்லை’’ என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து ‘‘ஐயா, இதற்கு முன் யாராவது இந்த வழியாகச் சென்றார்களா?’’ என்று  அதிகாரத்துடன் கேட்டார்.  அதற்கு அத்துறவியோ ‘‘ஆம், சற்று முன் இதே கேள்வியை ஒருவன் கேட்டுவிட்டுச் சென்றான்’’ என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவர் வந்து, ‘‘வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?’’ என்று பணிவுடன் கேட்டார். உடனே துறவி ‘‘மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்’’ என்று சொன்னார். அப்போது மன்னர் ‘‘துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சரும் சென்றதாகச் சரியாக சொல்கிறீர்கள்’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதற்குத் துறவி ‘‘இதை அறிவதற்குப் பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்’’ என்று சொல்லி, ‘‘முதலில் வந்தவனிடத்தில் இறுமாப்பும், அடுத்து வந்தவரிடத்தில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது’’ என்று பொறுமையாக விளக்கிக் கூறினார். தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும் (நீமொ 22:4) என்கிறது நீதிமொழிகள் நூல். மேலும், முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள் (எபே 4:2) என்கிறார் புனித பவுலடியார். ஒருவர் கொண்டிருக்கும் பணிவானது அவரை சமுதாய மாற்றத்திற்கும் இட்டுச் செல்கிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் கருப்பர் இன மக்களுக்கு எதிராக வெள்ளையர்கள் நிறவெறிக் கொள்கையைப் பற்றி எரியச் செய்தபோது, அதனை அணைப்பதற்காகத் தன் உயிரையே கையளித்தவர்தான் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். வெள்ளையர்களுக்கு கறுப்பர்களுக்குமிடையே அன்பும், அமைதியும், சமத்துவமும் விட்டுக்கொடுத்தலும், ஏற்றுக்கொள்ளுதலும் துலங்கிடவேண்டும் என்பதற்காக அவர் எவ்வளவோ பணிந்து போனார். பணிவும் விட்டுக்கொடுத்தலுமே புதியதொரு வாழ்வையும் உறவையும் கட்டமைக்க உதவுகின்றன என்பதை அவர் உறுதியான மனதுடன் நம்பினார். அதற்காக அருமையான கதை ஒன்றையும் எடுத்துரைத்தார். ஒருநேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய ஒரு குறுகலான பாலம் ஒன்று இருந்தது. அப்போது எதிர் எதிரே அந்தப் பாலத்தைக் கடக்க விரும்பிய ஆடுகள் பாலத்தின் இடையே சந்தித்தன. ‘நான்தான் முதலில் போவேன், ஆகவே, எனக்கு வழியை விடு’ என்று இரண்டு ஆடுகளும் முரண்டுபிடித்தன. சிறிதுநேரம் இந்தச் சண்டை தொடர்ந்தது. அப்போது அவற்றில் ஒர் ஆடு அறிவுத்தெளிவுப் பெற்று, “நாம் இருவருமே இப்படிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் நாம் போகவேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாது. ஆகவே, நான் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இப்போது நான் அப்படியே படுத்துக்கொள்கிறேன். நீ மெதுவாக என்மீது ஏறி அந்தப் பக்கம் சென்றுவிடு. நாம் இருவருமே பத்திரமாகச் சென்றுவிடலாம்” என்றுக் கூறியது. அத்திட்டத்தின்படியே அவைகள் செயல்பட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டன. மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் இந்த கதையைக் கூறியதன் காரணம் நமக்கு நன்றாக விளங்குகிறது. பணிவு விட்டுக்கொடுத்தலுக்கும், விட்டுக்கொடுத்தல் சமத்துவத்துக்கும், சமத்துவம் அறநெறிகளுக்கும், அறநெறிகள் புதுவாழ்விற்கும் நம்மை இட்டுச்செல்கின்றதன. அதனால்தான், "நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்" என்று கூறும் புனித பவுலடியார், கிறிஸ்துவின் தாழ்மையைப் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றார். கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் (பிலி 2:2, 6-9)

ஒருநாள் என்னைச் சந்திக்க வந்த என் உறவுக்காரர் ஒருவர், “எங்கள் பங்குத்தந்தை மிகவும் கோபக்காரராக இருக்கிறார். பங்கில் செய்யும் எந்த வேலையையும் பங்கு மக்களோடு கலந்து ஆலோசிக்காமல் செய்கிறார். நான் 15 ஆண்டுகளுக்கும் மேல் படித்துவிட்டு வந்திருக்கிறேன், ஆகவே, எனக்கு எல்லாமே தெரியும். நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டுமே தவிர, நீங்கள் சொல்வதை நான் கேட்கவேண்டிய அவசியமில்லை என்று இறுமாப்புடன் பேசுகிறார். எதற்கெடுத்தாலும் அவருக்கு முன்னால் பணியாற்றிய பங்குத் தந்தையைப் பற்றி இழிவாகப் பேசுகிறார். பங்குமக்களாகிய நாங்கள் அவரிடத்தில் எவ்வளவுதான் பணிந்துபோனாலும் அதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. எங்கள்மீது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் சாமி, நாங்கள் திருத்திக்கொள்கிறோம், இந்தப் பங்கின் வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்படுவோம் என்றெல்லாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிவிட்டோம். ஆனால் ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை”என்று மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார். மேலும்,“எங்கள் பங்கு மக்கள் எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லா குருக்களுக்கும் ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். ஆனால் இவர்தான் மிகவும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்”என்றும் கவலை தெரிவித்தார். அப்போது,“நீங்கள் அனைவரும் அவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கூறிய நான்,“சிறப்பாக குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியானியிடம் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பிவைத்தேன். தங்கள் பங்குமக்களின் நலன்களுக்காக இரவு பகலாக உழைக்கும் பல பங்குத் தந்தையர்கள் மத்தியில், இப்படிப்பட்ட சிலரின் பணிவற்ற ஆணவப் போக்குகள் எல்லோருக்கும் அவப்பெயரைக் கொண்டுவருகிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. எனது உறவுக்காரருடனான உரையாடலுக்குப் பிறகு, இந்த புனித ஜான் மரிய வியானியின் வாழ்வை நான் சற்று ஆராய்ந்துப் பார்த்தேன். உண்மையிலேயே கிறிஸ்துவின் பணிவை அப்படியே அணிந்துகொண்டவர் தான் இப்புனிதர். பங்குப்பணியாற்றும் அருள்பணியாளர்கள் மட்டுமல்ல அனைவருமே இவருடைய வாழ்வை அடிக்கடிப் படிக்கவேண்டும்.

ஜான் மரிய வியான்னிக்கு ஈர்ப்பான உருவம் கிடையாது. காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை. புனிதர்களான அகுஸ்தினார், அக்குவினாஸ் போல இறையியல் கருத்துக்களை வழங்கவில்லை. புனித இஞ்ஞாசியார் போல பெரிய சபையை நிறுவி மறைப்பணி செய்யவில்லை. புனித சவேரியார் போல நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்து நற்செய்தி அறிவித்ததில்லை. புனிதர்களான செபஸ்தியார், அருளானந்தர் போல திருமறைக்காக இரத்தம் சிந்தவில்லை. இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. தன்னை மற்றவர்கள் கழுதை என அழைத்ததாகவும், 'ஆனால், இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்று அவர் தன் சக மாணவர்களிடம் சொன்னதாகவும், அவருடைய சமகாலத்து ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார். 'இவருடன் அருள்பணித்துவநிலைப் பயிற்சிக்கு ஒன்பது பேர் இணைந்தனர். அவர்களில் ஒருவர் கர்தினாலாகவும், இருவர் ஆயர்களாகவும், மூவர் பேராசிரியர்களாகவும், மூவர் முதன்மைக் குருக்களாகவும் மாறினர். ஆனால், இவர் ஒருவர் மட்டுமே புனிதராக மாறினார்.

'எளிய வழியில் புனிதம்' என்றும், 'வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இப்புனிதர். நீடித்து நிலைக்கக் கூடிய எதுவுமே நீடித்த நேரம் எடுக்கிறது என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணித்துவநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. பன்னிரெண்டு வயதே நிரம்பிய மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிட்டார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்புக் கேட்டார். அப்போது மத்தியாஸின் உள்ளம் தங்கம் போல உருகியது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொண்டார். தான் மற்றவர்களால், 'கழுதை' என அழைக்கப்பட்டாலும், 'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்பதில் உறுதியாய் இருந்தார் வியான்னி. மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், 'கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!' என்று புரிந்து வாழ்ந்து, புனிதராக உயர்ந்தவர் மரிய வியான்னி.

இயேசு ஆண்டவர் தனது பணிவாழ்வு முழுவதும் எந்தவொரு இடத்திலும் ஆணவத்துடனோ, இறுமாப்புடனோ நடந்துகொள்ளவில்லை என்பதைப் பார்க்கின்றோம். மேலும், தான் இறைத்தந்தையின் ஒரே மகன், மீட்பர், போதகர், எல்லாம் வல்லவர், அருளடையாளங்களை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர் என்றெல்லாம் கூறிக்கொண்டு எந்த இடத்திலும் முதன்மையான இருக்கையைத் தேடவில்லை. மாறாக, சிலுவைமட்டும் தன்னைத் தாழ்த்திக்கொண்டவராகப் பார்க்கிறோம். அதனால்தான் இன்றைய நற்செய்தியில் பொதுவிருந்துகளில் பணிவாக நடந்துகொள்ளுங்கள் என்றும், தாழ்மையான மனநிலையில் உங்களுக்குக் கைம்மாறு செய்யமுடியாத ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் விருந்துக்கு அழையுங்கள் என்றும் நமக்கும் சேர்த்தே அறிவுறுத்துகின்றார் இயேசு.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125) என்ற திருக்குறளில் பணிவுடையவராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என்றுரைக்கின்றார் திருவள்ளுவர். ஆகவே, தனிமனித வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையானது பணிவு என்னும் மனத்தாழ்மைதான் என்பதை உணர்வோம். பணிவில் வளரும் பரந்த மனதைக் கொடுக்க இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2022, 13:33