தேடுதல்

பொதுக் காலம் 20ம் ஞாயிறு பொதுக் காலம் 20ம் ஞாயிறு  

‘நீதித் தீயைப் பற்றி எரியச் செய்வோம்!'

நாம் வாழும் இச்சமுதாயத்தில் வேற்றுமைகளை விதைத்து மனித மாண்பை சிதைத்தழிக்கும் அநீதிகளுக்கு எதிராக நீதித் தீயைப் பற்றி எரியச்செய்வோம்.
ஞாயிறு சிந்தனை 13082022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.   எரே 38: 4-6, 8-10    II.   எபி 12:1-4   III.   லூக் 12: 49-53)

வட அமெரிக்காவிலிலுள்ள எல்சால்வதோர் நாட்டில், 1980-ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்தான் பேராயர் புனித ஆஸ்கர் ரொமேரோ. அந்நாட்டுப் பணக்கார முதலாளிகளின் கொடுந்துயர்களுக்கு ஆளாகி, தேயிலைத் தோட்டங்களில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்தனர் ஏழை மக்கள். அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் நிலங்களை மீட்டெடுப்பதற்காகப் போராடிய இயேசு சபை அருள்பணியாளர் ருத்திலியோ கிராந்தே அவர்கள், அந்நாட்டு இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடுஞ் செயலைக் கண்ணுற்றதும், தன் வாழ்வையே மாற்றிக்கொண்டு ஒரு ஆயருக்குரிய தலைமைத்துவ பண்புகளோடு, அம்மக்களுக்காகப் பணியாற்றியவர் பேராயர் ரொமேரோ. அவர்களுக்காகத் தன் வாழ்வையே இழக்கத் துணிந்தவர். அன்றைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், எல்சால்வதோர் நாட்டு இராணுவத்திற்கு மில்லியன் கணக்கில் பணமும் ஆயுதங்களும் வழங்கி மறைமுகமாகப் போரைத் தூண்டிவிட்டார். அவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளும் வழங்க ஏற்பாடு செய்தார். இதனைக் கடுமையாகக் கண்டித்தார் பேராயர் ரொமேரோ. ஆனால், பயன் ஒன்றும் இல்லை. ஜிம்மி கார்ட்டரைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக வந்த ரொனால்டு ரீகனும் இராணுவ உதவியை தொடர்ந்து அதிகரித்து வந்தார். எல்சால்வதோர்  நாட்டில் எங்கு பார்த்தாலும் அடக்குமுறைகள், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர். கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் இராணுவ வீரர்களின் கூடாரமாயின. நற்கருணைப் பேழைகள் உடைக்கப்பட்டு திருநற்கருணை வீதிகளில் வீசி எறியப்பட்டன. வெகுண்டெழுந்த பேராயர் ரொமேரோ, இந்த அநீதிகளுக்கு எதிராக நீதித் தீயைப் பற்றவைத்தார். மக்களோடு மக்களாகக் களத்தில் இறங்கிப் போராடினார். இதன் விளைவாக 1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது பேராயர் ரொமேரோ சுட்டுக்கொல்லப்பட்டார். “ஒரு ஆயர் கொல்லப்படலாம்; ஆனால் மக்களை மையமாகக் கொண்ட திருஅவை ஒருபோதும் அழியாது” என்றார் இப்புனிதர். அன்று நிகழ்ந்த அநீதிகளுக்கு எதிராக இவர் பற்றவைத்த நீதித் தீ, இன்றும் அந்நாட்டில் பற்றி இருந்துகொண்டுதான் இருக்கின்றது. மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இன்று நாம் பொதுக் காலத்தின் 20-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அநீதிக்கு எதிராக நீதித் தீயை பற்றவைக்க வேண்டுமென நம்மை வலியுறுத்துகின்றன. ஒருவர் பொய்மைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உண்மையைப் பேசும்போதும், உண்மைக்கு ஆதரவாகச் செயல்படும்போதும், அவர் எண்ணிலடங்கா துன்ப துயரங்களை அனுபவிப்பதுடன், கொடூரச் சாவினையும் சந்திக்க நேரிடுகிறது என்பது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். இன்றைய முதல் வாசகத்தில் எடுத்துக்காட்டப்படும் இறைவாக்கினரான எரேமியாவின் வாழ்வு இதற்குச் சான்றாக அமைகிறது. அப்பகுதியை இப்போது வாசிக்கக் கேட்போம்.

அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள். அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார். பின்னர், அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்பவர், அரசரிடம் சென்று வேண்டிக்கொண்டதற்கு இணங்க எரேமியா காப்பாற்றப்படுகிறார்.

மேலும், “அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன் என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. (எரே 20:9) என்றும் கூறுகின்றார் எரேமியா. அவர் உண்மையை உரைத்ததாலேயே அத்தனை இன்னல்களையும் அனுபவிக்கின்றார். “நான் உண்மையானவனாய் வாழ்வதற்காக இந்த உலகம் எனக்கு அபராதம் போடுகிறது. பரவாயில்லை, பொய்மையின் தோள்களில் பயணிப்பதைவிட, உண்மையின் கால்களைப் பிடித்துக்கொண்டு உட்க்கார்ந்திருப்பதுக் கூட உத்தமமானதுதான்” என்று கூறுகின்றார் கவிஞர் மு.மேத்தா. 'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு' (குறள் 267) என்கிறார் திருவள்ளுவர். அதாவது, தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக வாழ்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள் என்பது இதற்கு விளக்கமாக அமைகிறது.

உலகில் நிகழும் அநீதிகளுக்கு எதிராக இறைவனே நீதித் தீயாக வெகுண்டெழுவதும், இந்நோக்கத்தை நிறைவேற்ற பலரை அழைப்பதையும் பார்க்கின்றோம். எகிப்தில் இஸ்ரயேல் மக்களுக்குர் பார்வோன் மன்னன் இழைத்திட்ட அநீதிகளுக்கு எதிராக நீதித் தீயைப் பற்றவைக்க வேண்டும் என்பதன் அடையாளமாக, கடவுள் எரியும் முட்புதரில் மோசேக்குத் தோன்றுகிறார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன் (விப 3:2,7).

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும், நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்ற வார்த்தைகள் வழியாக, யூதச் சமுதாயத்தில் நிலவிய அநீதிகளுக்கு எதிராக நீதித் தீயை மூட்ட வந்தாகக் கூறுகிறார் இயேசு. அதேவேளையில், இதனைச் செயல்படுத்துவதில் எரேமியா போன்று நெருக்கடிகளைத் தானும் சந்திப்பதாகவும் எடுத்துரைக்கின்றார் இயேசு. மேலும், மண்ணுலகில் அமைதியை அல்ல பிளவை உண்டாக்கவே வந்தேன் என்று இயேசு கூறுவதை நாம் தவாறாகப் பொருள் கொள்ளக் கூடாது. நன்மைக்கும் தீமைக்கும் இடையே கட்டப்படவேண்டிய பிளவுச் சுவரைப் பற்றி இயேசு இங்கே குறிப்பிடுகின்றார். பகைவனான சாத்தான் நம் உள்ளத்திலும், இல்லத்திலும், நம்மைச் சுற்றிலும் அமைதிக்கு எதிரான தீமைகளை விதைத்துவிடாத அளவிற்கு நாம் சுவர்களைக் கட்டவேண்டும் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். பொதுவாக, அநீதிக்கு எதிராக நீதித் தீயைப் பற்ற வைக்க விரும்பும் அனைவரும் நெருக்கடிகள், மனஉளைச்சல்கள், துயரங்கள், துன்புறுத்தல்கள், ஏளனப்பேச்சுகள், எள்ளிநகையாடல்கள், சித்ரவதைகள், கொடிய சாவுகள் ஆகிய அனைத்தையும் சந்திக்கவேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. விசைத்தறி தொழிலாளரான இவர் 1988-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 2002-ஆம் ஆண்டுமுதல் அக்ரஹாரம் கிளைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். அத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார். சமூக அக்கறையும் ஆர்வமும் கொண்ட இவர், அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்காகவும், ரேஷன் முறைகேடு மற்றும் சட்டவிரோதமாக காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தவும், சாயப்பட்டறை மற்றும் சாக்கடை கழிவுகள் ஆற்றில் கலப்பதை எதிர்த்தும் பலமுறைப் போராடினார். மேலும், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பிரச்சனைகளுக்காகவும் மக்களை திரட்டி பல போராட்டங்களை நடத்தினார். ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திட வழிவகைகள் செய்தார். காவிரி ஆற்றின் ஒரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நேரங்களில் பல்வேறு உதவிகளைச் செய்தார். நண்பர்களின் உதவியுடன் படிக்க வசதியற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டு புத்தங்கள் வாங்கிக் கொடுத்தார். குறிப்பாக, கந்துவட்டிக் கும்பலின் அக்கிரமங்களைக் கண்டு வேலுச்சாமி கொதித்தெழுந்தார். இக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என களமிறங்கிப் போராடினார்.  

இவர் வசித்து வந்த பகுதியில் பெண் தொழிலாளி ஒருவர், சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், வாங்கியப் பணத்தைத் திரும்பிச் செலுத்த முடியாத அந்தப் பெண் தொழிலாளியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்தகாரம் செய்து அதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர் சிவகுமாரும் அவரது நண்பர்களும். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தொழிலாளி, வேலுச்சாமியிடம் சென்று முறையிட்டார். இக்கொடுஞ் செயலால் கொதித்தெழுந்த வேலுச்சாமி, அப்பெண்ணைக் கூட்டிச் சென்று பள்ளிப்பாளையம் காவல் நிலையத்திலும் நாமக்கல் மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலத்திலும் புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில் வீடியோவை நீக்கவேண்டும், பாலியல் பலாத்காரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால்  வேலுச்சாமியைப் பழிவாங்கத் திட்டம் தீட்டியது அந்தக் கந்துவட்டிக் கும்பல், கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி அன்று, வேலுச்சாமி பள்ளிப்பாளையம் காவல் நிலையம் சென்றுவிட்டு திரும்புகையில் அவரைக் கொடூரமாகக் கொன்றது. இப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கின்றனர். பிறரின் நல்வாழ்விற்காகத் தன் குடும்பத்தையே தியாகம் செய்தவர் வேலுச்சாமி. நாமக்கல் பகுதியில் அநீதிக்கு எதிராக வேலுச்சாமி பற்றவைத்த நீதித் தீ இன்றும் சுடர்விட்டு ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.  

இன்றைய இரண்டாம் வாசகத்தில், “திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்று பவுலடியார் எடுத்துரைக்கின்றார். ஆகவே, இயேசுவின்மீது நம் கண்களைப் பதியவைத்து நமக்குறிய சமுதாயக் கடமைகளை நன்கு நிறைவேற்றுவோம். நாம் வாழும் இச்சமுதாயத்தில் வேற்றுமைகளை விதைத்து மனித மாண்பை சிதைத்தழிக்கும் அநீதிகளுக்கு எதிராக நீதித் தீயைப் பற்றி எரியச்செய்வோம். இதற்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2022, 13:18