தேடுதல்

போதிக்கும் இயேசு போதிக்கும் இயேசு  

பொதுக் காலம் 19-ஆம் ஞாயிறு : கடவுளே, நம் உரிமைச் சொத்து!

நம் உள்ளத்திலும், அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்மால் உணரமுடியாமல், நம் அறிவையும் சிந்தனைகளையும் மழுங்கடிப்பதே விழிப்பற்ற மனநிலைதான்!
ஞாயிறு சிந்தனை 07082022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. சாஞா 18:6-9     II. எபி 11:1-2,8-19    III. லூக் 12: 32-48)

பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுளை மட்டுமே நமது உண்மைச் செல்வமாகக் கொள்ளவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. இன்றைய திருப்பாடலும், ‘ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்’ என்று எடுத்துரைக்கிறது. கடவுள் நம் உரிமைச் சொத்தாக வேண்டுமானால், நாம் இவ்வுலகக் காரியங்களை நிறைவேற்றவதில் மிகவும் விழிப்பாய் இருக்கவேண்டும் என்பதையும் நமக்குச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

கடவுள் தரிசனம்  வேண்டி பலகாலம் தவமிருந்த அந்த நாட்டின் மன்னருக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னர், “கடவுளே,  எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ, அதேபோல எனது மனைவியான அரசிக்கும், அரச குடும்பத்தினருக்கும், அமைச்சர்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நீங்கள் தரிசனம் தரவேண்டும்” என்று வரம் ஒன்று கேட்டார். “சரி அப்படியே ஆகட்டும்” என்று கூறிய கடவுள், “அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை, அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா. நான் தரிசனம் தருகின்றேன்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். சில நாள்களில் மன்னர், தனது அரச குடும்பத்தினரையும், அமைச்சர்களையும், மக்களையும் அழைத்துக்கொண்டு மலையை நோக்கிப் புறப்பட்டார். அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேறத் தொடங்கினர். சிறிது உயரம் சென்றவுடன், அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன. உடனே, மக்களில் பாதிபேர் செம்பு பாறைகளை உடைக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட மன்னர், “அனைவருக்கும் கடவுளின் தரிசனம் கிடைக்கப் போகின்றது, செம்பெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்” என்று உரக்கக் கூறினார். அதற்கு அவர்கள், “மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது” என்று கூறி, உடைத்த செம்பு பாறைகளை தலையில் வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினர். ‘எப்படியோ போங்கள்’ என்று கூறிவிட்டு, மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறத் தொடங்கினார் மன்னர்.

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும் வெள்ளித் துண்டுகளும் நிறைய இருந்தன. அதைத் பார்த்ததும் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று அதனை மூட்டை கட்டத் தொடங்கினர். அப்போது மன்னர், ”விலைமதிக்க முடியாத கடவுளின் தரிசனம் கிடைக்கபோகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்குப் பயன்பட போகின்றன” என்று மக்களுக்கு மறுபடியும் உரக்கச் சொன்னார். அதற்கு அவர்கள், மன்னா, இப்பொழுது கடவுளின் தரிசனத்தை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று கூறிவாறே, அவற்றை முடிந்த அளவு அள்ளிக்கொண்டு மீதமிருந்த மக்களும் திருப்பிச் சென்றனர். ‘உங்கள் தலையெழுத்து அவ்வளவுதான்’ என்று கூறிய மன்னர், இன்னுமிருந்த அரச குடும்பத்தினரோடு மலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இப்பொழுது சிறிது தொலைவில் தங்கமலை  தென்பட்டது. அதைக்கண்ட அரச குடும்பத்தினர் அனைவரும் அங்கே சென்றுவிட்டனர். இறுதியாக அங்கிருந்தவர்கள் அரசியும், அமைச்சர்களும், படைத்தளபதியும் மட்டுமே. ‘சரி வாருங்கள் செல்வோம்’ என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு முக்கால்வாசி மலையைக் கடந்து முடித்தார் மன்னர். அப்போது அங்கே அழகிய வைரமலை ஒன்று காணப்பட்டது. அதைக்கண்டதும், அரசி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் அனைவருமே ஓடிவிட்டனர். இறுதியாக, மலையின் உச்சியில் தன்னந்தனியாகப் போய் நின்றார் மன்னர். கடவுள் மன்னர் முன் தோன்றி, “எங்கே உன் மக்கள்” என்று கேட்டார். மன்னர் தலை குனிந்தவராக “இவ்வுலகப் பொருள்கள்மீதான அவர்களின் பேராசை, உம் தரிசனத்தைக் காணமுடியாமல் செய்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள் கடவுளே” என்றார். அதற்கு கடவுள் “நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று, கோடியில் ஒரு சிலரே தங்களைக் குறித்து விழிப்புணர்வு கொண்டுள்ளனர். அவர்கள் மட்டுமே என்னை உண்மைச் செல்வமாகக் கொள்கின்றனர். அப்படிபட்டவர்களுக்கே எனது தரிசனம் எப்போதும் கிடைக்கிறது. மற்றவர்கள் எல்லாம் சொத்து என்ற செம்பு, வெள்ளி, தங்கம், வைரம் போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டு மாய்ந்துபோகின்றனர் என்று கூறிவிட்டு மறைந்தார்.

இன்றைய இரண்டாம் வாசகம் ஆபிரகாமின் இறைநம்பிக்கை வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது. தன் வாழ்நாள் முழுதும் கடவுளை மட்டுமே தனது உரிமைச் சொத்தாகவும் உண்மைச் செல்வமாகவும் கொண்டிருந்தார் ஆபிரகாம். அவரது வாழ்வு முழுதும் கடவுளுடைய பேரன்பில் வலிமையாகக் கட்டப்பட்டிருந்தது. அவர் எப்போதும் எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே சார்ந்திருந்தார். ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த  இரண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கின்றோம். முதலாவதாக, ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” (தொநூ 12:1-3) என்று கூறியபோது, அவர் மறுப்பேதும் கூறாமல் ஆண்டவரை மட்டுமே நம்பி தனது பயணத்தைத் தொடங்கினார். இதன் காரணமாகத்தான், ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஒர் அந்நியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத்திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே என்று ஆபிரகாமின் இறைநம்பிக்கைகொண்ட வாழ்வு குறித்து எடுத்துரைக்கின்றார் புனித பவுலடியார்.

இரண்டாவதாக, “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்” (தொநூ 22: 2-3) என்று கடவுள் ஆபிரகாமை அழைத்தபோது, அமைந்த மனதுடன் மறுப்பேதுமின்றி தனது ஒரே மகனை பலிகொடுக்க முன் வருகிறார். அதனால்தான், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார் (எபி 11:19) என்கிறார் புனித பவுலடியார்.

இன்றைய நற்செய்தியில், உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (லூக் 12:32-34) என்று இயேசு கூறுவது நமக்கு மிகமுக்கியச் செய்தியாக அமைகிறது. நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் செல்வமே முதன்மை பெறுகிறது. அதவாது, உழைக்காமல் அதிகம் பணம் சம்பாதிக்கவேண்டும், பெரிய ஆளாகவேண்டும், பெயரும் புகழும் பெறவேண்டும் என்று பலர் எண்ணுவதாலேயே சமுதாயத்தில் அனைத்துத் தீமையானச் செயல்களும் தலைவிரித்தாடுகின்றன. குறிப்பாக, கடவுளின் சாயலிலும் உருவிலும் ஒரே இனமாகப் படைக்கப்பட்ட மனிதரிடத்தில் வேற்றுமை தீயை வளர்ப்பதே இந்தப் பேராசைதான். முதலையானது ஆற்றின் கரைக்கு வந்து குழியைத்தோண்டி முட்டையிட்டு அதனை மூடிவிட்டு மீண்டும் தண்ணீருக்குள் போய்விடும். ஆனால், அது தண்ணீருக்குள் இருந்தாலும் அதன் முழுக்கவனமும் அந்த முட்டைகள்மீதுதான் இருக்கும். அதாவது, யாராவது வந்து முட்டைகளை எடுத்துப் போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், அந்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியே வரும்வரை அம்முதலையானது ஆற்றின் ஓரத்திலேயே சுற்றிச் சுற்றி வரும். அவ்வாறே, மனிதரும் கடவுளை விடுத்து பணத்திற்கும் செல்வத்திற்கும் அடிமையாகும்போது அவர்களின் முழுக்கவனமும் எப்போதும் செல்வத்தின்மீதுதான் இருக்கும். அதனால்தான் இயேசு ஆண்டவரும், ‘உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்’ என்று நம்மை எச்சரிக்கின்றார். அப்படியென்றால், இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி எப்போதும் விழிப்பாய் இருப்பதுதான். விழிப்பாக இருக்கும் பணியாளர்தான் தன் தலைவனிடத்தில் நற்பெயர் பெறுவார் என்பதையும் இன்றைய நற்செய்தியில் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

மலையில் இருக்கும் குகை ஒன்றில் தியானம் செய்வதற்காக குருவும் சீடரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். நடக்கத் தொடங்கி அரை மணி நேரம் கடந்துவிட்டது. குரு மெளனமாகப் பின்னால் வர, சீடர் வேகமாக முன்னால் நடந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் குருவின் பார்வையில் மறைந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டார் சீடர்.  குரு மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தார். சில நிமிடங்கள் கடந்தன. விரைவாகச் சென்ற சீடர் தூரத்தில் சோர்வுடன் அமர்ந்திருந்தார். குரு கையில் ஒரு பச்சிலையுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் சீடரிடம் வந்ததும் தன் கையிலிருந்த பச்சிலையைச் சீடரிடம் கொடுத்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். சீடர் அதனை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மணம் வீசியது. அதன் மணம் சீடரின் மனதுக்கும் உடலுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. “குருவே இது என்ன இலை?” என்று சீடர் கேட்க, “இதன் பெயர் எலுமிச்சைப் புல். இது சாதாரண புல்லைப் போலத் தோன்றினாலும் எலுமிச்சை மணம் கொண்டது” என்று பதிலளித்தார். “குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று சீடர் கேட்க, புன்னகைத்தவாறே,,. கேள்...” என்றார் குரு.  

”ஆன்மீக உயர்வடைய ஒருவருக்கு குரு அவசியம்தானா?” “ஒருவருக்கு விழிப்புணர்வு கிடைக்கும் வரை அவருக்கு குரு அவசியமா” “விழிப்புணர்வு என்பது என்ன?” என்று சில கேள்விகளை எழுப்பினார் சீடர். “நான் கொடுத்த எலுமிச்சைப் புல்லை முகர்ந்தாய் அல்லவா? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சைப் புல்லைப் பற்றி உனக்குத் தெரியுமா?” என்று குரு கேட்க, “தெரியாது” என்றார் சீடர். “நான் வரும் வரை இங்கே அமர்ந்திருந்தாயே. உன் கால்களுக்கு அருகிலேயே அந்தப் புல் புதர் போல   வளர்ந்திருக்கிறது. உன் கால்களுக்குக் கீழே அந்தப் பொருள் இருப்பது கூடத் தெரியாமல், இன்னொருவர் அதை உனக்குத் தரும் வரை இங்கு நீ அமர்ந்திருக்கிறாய். நீ விழிப்புணர்வு கொண்டவனாக இருந்திருந்தால் உனக்கே அது தெரிந்திருக்கும்” என்றார் குரு. “அப்படியானால் விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை அல்லவா?” என்று சீடர் வினவ, “விழிப்புணர்வு வரும் வரை குரு தேவைதான். விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்” என்றார். அப்படியெனில் அனைவருக்கும் குரு தேவையா?” என்று சீடர் மீண்டும் கேட்க, “ஆம். அதனால்தான் ஆண்டாண்டு காலமாக இம்மலையில் எலுமிச்சைப் புல் வளர்கிறது, உன்னையும் என்னையும் போல பலர் இங்கே வந்து இதேகேள்வியையும் பதிலையும் விவரிக்கிறார்கள்” என்றார்.

நம் உள்ளத்திலும், அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்மால் உணரமுடியாமல் நம் அறிவையும் சிந்தனைகளையும் மழுங்கடிப்பதே விழிப்பற்ற மனநிலைதான்.  அதாவது, இவ்வுலக மாயையும், செல்வத்தின்மீதான பேராசையுமே கடவுளைக் காணும் நம் அகக் கண்களை மறைக்கின்றன. ஆகவே, நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமைபோல் கடவுளை மட்டுமே நாம் பெரும் செல்வமாகக் கொண்டிருந்தால், இயேசு கூறும் விழிப்புணர்வுள்ள பணியாளர்களாய் வாழ்ந்திட முடியும் என்பதை இக்கணம் உணர்வோம். அதற்கான அருள்வரத்தை இந்நாளில் இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2022, 14:38