தேடுதல்

அரசுக்கு எதிரான போராட்டத்தில்  இலங்கை மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை மக்கள்  

அரசு எதிர்ப்பாளர்கள் நசுக்கப்படுவது குறித்து தலத்திருஅவை கவலை

இலங்கை, ஐ.நா.வின் மனித உரிமைகள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதை அந்நாட்டு கிறிஸ்தவ இயக்கம்(CSM) நினைவுபடுத்தியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் இரணில் விக்ரமசிங்கே அவர்கள் அரசுத்தலைவராகப் பதவியேற்றதற்குப்பின்னர், முக்கிய அரசு எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அந்நாட்டுத் தலத்திருஅவை கவலை தெரிவித்துள்ளது.

அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும், அப்போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் நிறுத்தப்படவேண்டும், மக்களின் தற்போதைய, மற்றும், நீண்டகாலப் பிரச்சனைகள் தீரக்கப்படவும், அவர்களின் மனக்குமுறல்கள் கேட்கப்படவும் வேண்டும் என்று, இலங்கை கத்தோலிக்க அருள்பணியாளர்களும், துறவியரும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஜூலை 31, இஞ்ஞாயிறன்று, அந்நாட்டின் 23 துறவு சபைகளின் 1,600க்கு மேற்பட்ட அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மற்றும், அருள்சகோதரர்கள் இணைந்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள அவசரகாலத் தடை, அடக்குமுறை நடவடிக்கைக்கு முன்னோடியாக உள்ளதாகத் தெரிகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் Galle Face Green பகுதியில் தினமும் கூடி போராட்டம் நடத்துபவர்களுக்கு எங்களது ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதாக உறுதியளிக்கிறோம் என்றும், அதேபோல் அனைத்துக் குடிமக்களும், வெளிநாட்டு அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஆதரவளிக்குமாறு விண்ணப்பிக்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள மக்களின் சுதந்திரம் மதிக்கப்படவேண்டும் என்று அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள கிறிஸ்தவ இயக்கம்(CSM), ஐ.நா.வின் மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதையும் நினைவுபடுத்தியுள்ளது.

போராட்டத்தில் முன்னணியில் நின்ற கத்தோலிக்க அருள்பணி Amila Jeevantha அவர்கள், கைது வாரண்ட் பெற்றதற்குப்பின்னர் அவரது ஆலயத்தை காவல்துறை பார்வையிட்டுள்ளது எனவும், செய்தியாளர் Veranga Pushpika என்பவர், பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும், அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2022, 14:38