தேடுதல்

கர்தினால் தொம்கோ அவர்களின் இறுதி வழியனுப்பும் திருப்பலி கர்தினால் தொம்கோ அவர்களின் இறுதி வழியனுப்பும் திருப்பலி 

கர்தினால் தொம்கோ: ஆர்வமிக்க மறைப்பணியாளர், நம்பிக்கை மனிதர்

கர்தினால் தொம்கோ அவர்கள், தனது உண்மையான ஆன்மிகம், உறுதியான நம்பிக்கை, திருஅவைக்குப் பிரமாணிக்கம் போன்றவற்றால் திருப்பீடத் தலைமையகத்திற்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தவர் - கர்தினால் ரே

மேரி தெரேசா: வத்திக்கான்

நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் யோசேப்பு தொம்கோ அவர்கள், நம்பிக்கையின் மனிதராகவும், மறைப்பணியில் பற்றியெரியும் ஆர்வமுள்ளவராகவும் விளங்கினார் என்று, கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்கள் பாராட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 08 இத்திங்கள் காலையில் உரோம் நகரில் இறைபதம் சேர்ந்த 98 வயது நிரம்பிய கர்தினால் தொம்கோ அவர்களின் இறுதி வழியனுப்பும் திருப்பலியை, ஆகஸ்ட் 11, இவ்வியாழன் காலை 11 மணியளவில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் தலைமையேற்று நிறைவேற்றிய கர்தினால் ரே அவர்கள், தனது திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

கர்தினால் தொம்கோ அவர்கள்,  தனது உண்மையான ஆன்மிகம், உறுதியான நம்பிக்கை, திருஅவைக்குப் பிரமாணிக்கம் நகைச்சுவை உணர்வு, அமைதியான மனநிலை, தான் வெளியிட்ட தீர்ப்புகளில் சமநிலை காத்தல் போன்றவற்றால் திருப்பீடத் தலைமையகத்திற்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தவர் என்றும், கர்தினால் ரே அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை சுலோவாக்கியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற இளையோர் சந்திப்பில், அந்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கர்தினால் தொம்கோ அவர்களும் கலந்துகொண்டார் எனவும் கர்தினால் ரே அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், இத்திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் தொம்கோ அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா நிறையமைதியடையச் செபித்தார்.      

திருத்தந்தையின் இரங்கல் தந்தி

கர்தினால் தொம்கோ அவர்கள் இறைபதம் அடைந்ததைமுன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த இரங்கல் தந்தியில், கர்தினால் தொம்கோ அவர்களின் ஆழ்ந்த இறைநம்பிக்கை, ஞானம், நீண்டகாலப் பலனுள்ள பணி ஆகியவற்றை நினைவுகூர்ந்திருந்தார்.

மிகவும் மதிப்புமிக்க மற்றும், ஞானம்நிறைந்த சகோதரர் என்று கர்தினால் தொம்கோ அவர்களை நினைவுகூர்ந்திருந்த திருத்தந்தை, இவர், ஆழமான இறைநம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை, தாழ்ச்சி போன்ற நற்பண்புகளைக் கொண்டிருந்தவர் எனவும், திருஅவைக்கும், நற்செய்திக்கும் தியாக உணர்வோடு பணியாற்றியவர் எனவும் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2022, 14:13