தேடுதல்

திருத்தந்தை 7ம் இன்னசென்ட் கல்லறை திருத்தந்தை 7ம் இன்னசென்ட் கல்லறை 

திருத்தந்தையர் வரலாறு-திருத்தந்தையர் 9ம் போனிபாஸ்,7ம் இன்னசென்ட்

திருத்தந்தை 7ம் இன்னசென்ட் செய்த பெரிய தவறு, அவர் சகோதரர் மகனை கர்தினாலாக உயர்த்தியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்  

திருத்தந்தை 6ம் உர்பானைத் தொடர்ந்து பதவிக்கு வந்தார் திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸ். 1389ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி, Piero Tomacelli என்ற இயற்பெயர் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஜெர்மனி, இங்கிலாந்து, ஹங்கேரி, போலந்து மற்றும் இத்தாலியின் முக்கியப் பகுதிகள் மட்டுமே உரோமையத் திருத்தந்தையின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்டிருந்தன. மறுபக்கத்திலோ அவிஞ்ஞோனிலிருந்து திருத்தந்தை 7ம் கிளமென்ட் போட்டித் திருத்தந்தையாக கோலோச்சிக் கொண்டிருந்தார். திருத்தந்தை 9ம் போனிபாஸ் 1389ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், எதிர்திருத்தந்தை 7ம் கிளமென்டோ, ஒன்றாம் தேதியே பிரான்ஸ் இளவரசர் Anjouன் லூயியை இத்தாலியின் நேப்பிள்ஸின் (Naples) மன்னராக முடிசூட்டிவைத்துவிட்டார். ஆனால் திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸோ 1390ஆம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி, நேப்பிள்ஸின் உண்மையான மன்னர் மூன்றாம் சார்லஸின் மகன் லதீஸ்லாஸை மன்னராக முடிசூட்டினார். அது மட்டுமல்ல, அவிஞ்ஞோன் துருப்புக்களை நேப்பிள்ஸிலிருந்து விரட்டியடிக்க, அடுத்த 10 ஆண்டுகளுக்கு மன்னர் லதீஸ்லாசுக்கு உதவிக்கொண்டிருந்தார்.

  இத்திருத்தந்தை 9ம் போனிபாஸ் உரோம் நகரின் பல பாலங்களையும், கட்டடங்களையும் சீரமைத்தார். பொது மக்களுக்கு நிறைய வசதிகளைச் செய்து கொடுத்தாலும், மக்கள் திருஅவைக்கு எதிராக அவ்வப்போது எழுந்ததாலும், உரோம் நகரின் வன்முறைகளாலும் இவர் அடிக்கடி உரோம் நகரைவிட்டு வெளியேறி பெருஜியா, அசிசி என பல்வேறு இடங்களில் தங்கவேண்டியதாகியது. இதற்கிடையில் 1394ஆம் ஆண்டு செப்டம்பர் 16ல் அவிஞ்ஞோனிலிருந்து இருந்து ஆட்சி புரிந்துவந்த எதிர்திருத்தந்தை 7ம் கிளமென்ட் காலமானார். அடுத்த 12 நாள்களிலேயே, அதாவது செப்டம்பர் 28ம் தேதியே கர்தினால் Pedro de Luna என்பவர் எதிர்திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 13ம் பெனடிக்ட் என்ற பெயரையும் எடுத்துக்கொண்டார். இருப்பினும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட திருத்தந்தைக்கே முக்கிய நாடுகளின் அரசர்களின் ஆதரவு இருந்தது. உண்மைத் திருத்தந்தை 9ம் போனிபாஸ்தான் 1391ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி சுவீடனின் Bridgetஐ புனிதையாக அறிவித்தார். இத்தாலியின் Ferrara (1391)  மற்றும் Fermo (1398) பல்கலைக்கழகங்களைத் தோற்றுவித்தவர் இவரே. தூய்மையானவராகச் செயல்பட்ட திருத்தந்தை 9ம் போனிபாஸ், 1404ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி ஓர் ஏழையாகவே மரணமடைந்தார்.

திருத்தந்தை 7ம் இன்னசென்ட்

திருத்தந்தை 9ம் போனிபாஸ்க்குப்பின் திருஅவையின் தலைமைப் பீடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை 7ம் இன்னசென்ட். ஏறத்தாழ 1336ஆம் ஆண்டு இத்தாலியின் Sulmonaவில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் இவர். இத்தாலியின் புகழ்பெற்ற சட்டமேதை Lignano என்பவரிடம் பயின்ற Cosimo de' Migliorati என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை பெருஜியாவிலும் பதுவாவிலும் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். திருத்தந்தை 6ம் உர்பான் இவரை தன் பிரதிநிதியாக இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க, அங்கேயே 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1386ஆம் ஆண்டில் இத்தாலியின் பொலோஞ்ஞா ஆயராகவும் 1387ஆம் ஆண்டில் ரவேன்னா பேராயராகவும் நியமிக்கப்பட்டார். பின்னாளில் திருத்தந்தையான 7ம் இன்னசென்ட், 1389ஆம் ஆண்டில் திருத்தந்தை 9ம் போனிபாஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர். சிறந்த கல்விமானாகவும், பக்திமானாகவும் விளங்கிய இவர் 1404ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி கர்தினால்களால் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 7ம் இன்னசென்ட் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார்.

   மேற்கத்திய கிறிஸ்தவப் பிரிவினை இடம்பெற்றுக் கொண்டிருந்த இக்காலக்கட்டத்தில், ஒரு பக்கம் அவிஞ்ஞோனில் எதிர்திருத்தந்தை 13ம் பெனடிக்ட் ஆட்சிசெய்துகொண்டிருக்க, மறுபக்கமோ திருத்தந்தை 7ம் இன்னசென்ட், தன் பணிகளைத் தொடங்க வேண்டியதாகியது. திருஅவைக்குள் இருக்கும் மோதல்கள் போதாது என்பதுபோல், உரோமைய மக்களும், திருத்தந்தையின் அரசு நிர்வாகப் பணிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஆன்மீகப் பணிகளோடு திருத்தந்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது. இக்கிளர்ச்சிகளை அடக்க நேப்பிள்ஸ் மன்னர் லதீஸ்லாஸ் விரைந்து வரவேண்டியதாகியது. அவ்வாறு வந்து உதவி செய்த மன்னர் லதீஸ்லாஸோ, திருத்தந்தைக்கு சில கட்டளைகளையும் பிறப்பித்தார். அதாவது எதிர்திருத்தந்தையோடு இத்திருத்தந்தை எவ்வித உடன்பாட்டிற்கும் முன்வரக்கூடாது, அப்படியே வந்தாலும், அது நேப்பிள்ஸ் மன்னரின் அதிகாரங்களைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது என்பதே அந்த உத்தரவு. இது போதாதென்று உரோம் நகரிலும் தன் ஆட்சியை விரிவுபடுத்த விரும்பினார் நேப்பிள்ஸ் மன்னர். இதற்கிடையில், திருத்தந்தை 7ம் இன்னசென்ட்டும் ஒரு பெரிய தவறைச் செய்தார். அதாவது தன் நெருங்கிய உறவினர், அதாவது தன் சகோதரன் மகன்  Ludovico Migliorati என்பவரை கர்தினாலாக உயர்த்தினார்.

  நல்ல ஒரு திருத்தந்தையாக இதுவரை செயல்பட்டுவந்த திருத்தந்தை 7ம் இன்னசென்டின் வாழ்வில் இந்த நியமனம் ஒரு பெரிய கறையாகியது. எப்படி என்று பார்ப்போமா? உரோமையர்கள் திருத்தந்தைக்கு எதிராக எழுந்ததைப் பொறுக்காத இந்த உறவினரான புதிய கர்தினால், அந்த கிளர்ச்சியாளர்களுள் முக்கியமானவர்களைப் பிடித்து தன் வீட்டிற்கு கொண்டுவந்து அவர்களைக் கொல்ல முயன்றார். இதற்கும் திருத்தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனினும், மக்களின் கோபத்திற்கு அஞ்சி, திருத்தந்தை 7ம் இன்னசென்ட் அவர்கள், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோட வேண்டியதாகியது. சில காலம் இவர்  Viterbo நகரில் தங்கினார். 1406ஆம் ஆண்டில் உரோமையர்கள் கெஞ்சி கேட்டுக்கொண்டதிற்கிணங்க, உரோம் நகர் திரும்பினார். அவிஞ்ஞோனிலும் உரோமையிலுமாக திருஅவை இருவேறு தலைமைகளின்கீழ் செயல்பட்டு வருவதை நீக்கி, ஓன்றிப்பைக் கொண்டுவரவேண்டும் என திருத்தந்தை 7ம் இன்னசென்ட் விரும்பினாலும், அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை. ஏனெனில், உரோம் நகரின் பதட்டநிலைகள், எதிர்திருத்தந்தை 13ம் பெனடிக்ட் மீதான நம்பிக்கையின்மை, நேப்பிள்ஸ் மன்னர் லதீஸ்லாசின் விரோதமனப்பான்மை ஆகியவைகளைச் சமாளிக்கவே திருத்தந்தைக்கு நேரம் போதாமல் இருந்தது. 1406ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி காலமானார் திருத்தந்தை 7ம் இன்னசென்ட்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2022, 14:43