தேடுதல்

கைதுசெய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் Oscar Danilo Benavidez Tinoco கைதுசெய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் Oscar Danilo Benavidez Tinoco  

நிக்கராகுவா நாட்டில் மேலும் ஒரு அருள்பணியாளர் கைது!

அருள்பணியாளர் Tinoco அவர்களுக்காக அனைவரும் இணைந்து இறைவேண்டல் செய்வோம் : Siuna மறைமாவட்டம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நிக்கராகுவாவின் தலத்திருஅவைக்கும், அதன் அதிபர் Daniel Ortega அரசுக்கும் இடையே அதிகரித்துவரும் பதட்டநிலைகளுக்கு மத்தியில் அருள்பணியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக Siuna மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15, இத்திங்களன்று தூய ஆவியார் பங்குத்தளத்தின் அருள்பணியாளர் Oscar Danilo Benavidez Tinoco அவர்கள்  வடக்கு நிக்கராகுவாவில் உள்ள Mulukukuவில் திருப்பலி நிறைவேற்றிய பிறகு கைதுசெய்யப்பட்டதாக, Siuna மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், கைதுசெய்யப்பட்ட அருள்பணியாளர் Tinoco அவர்கள், தலைநகர் மனாகுவாவில் உள்ள El Chipote தடுப்புக்காவல் மற்றும் வதை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும், Siuna மறைமாவட்டம் கூறியுள்ளது.

இந்தக் கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவரின் பணிகளைத் தடைசெய்யும்வண்ணம் அவர கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், நிக்கராகுவாவின் மனித உரிமை மையமும் தெரிவித்துள்ள அதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் Tinoco அவர்களுக்காக அனைவரும் இணைந்து இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளை அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது Siuna மறைமாவட்டம்.

ஜூலை மாதத் தொடக்கத்தில், இவ்வரசானது புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு சபையினரை நாட்டைவிட்டு வெளியேற்றியதுடன், நிக்கராகுவாவுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் Waldemar Stanislaw அவர்களையும் வெளியேற்றியது.

இதற்கிடையே, நிக்கராகுவாவில் பொது நலன், மற்றும் அமைதியைத் தேடுவதில், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து, புரிந்துணர்வு வழிகளைக் காணுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் திருப்பீடம் அழைப்பு விடுப்பதாக அமெரிக்க நாடுகள் நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Juan Antonio Cruz Serrano அவர்கள் கேட்டுக்கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2022, 14:14