தேடுதல்

பேராயர் பீட்டர் சுங் பேராயர் பீட்டர் சுங்  

கொரிய தீபகற்பத்தில் ஒப்புரவு, ஒன்றிப்புக்கு தலத்திருஅவை அழைப்பு

தென் கொரியாவில் ஆகஸ்ட் 16-22 வரை அமைதியின் காற்று என்ற தலைப்பில் இடம்பெறும் உலக இளையோர் அமைதி திருப்பயணத்தில் பங்குபெற அனைவருக்கும் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

வட மற்றும், தென் கொரிய நாடுகள் பிளவுபட்டு இருப்பதால், அந்நாடுகளில் வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்ளும் வேதனைகள், கடவுளின் அருளால் மறையும் நாள் விரைவில் வரும் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், தென் கொரியாவின் செயோல் பேராயர் பீட்டர் சுங் (Peter Chung).

ஆகஸ்ட் 15, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவுக்கென செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, Pyongyang திருத்தூது நிர்வாகியுமான, செயோல் பேராயர் பீட்டர் சுங் அவர்கள், வட மற்றும், தென் கொரிய நாடுகளுக்கு  இடையே உண்மையான ஒப்புரவும், இரு நாடுகளின் ஒன்றிப்பும் இறையருளால் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

அன்னை மரியாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, நம்பிக்கை, ஒப்புரவு ஆகியவற்றின் பாலங்களை அதிகமதிகமாகக் கட்டியெழுப்பவேண்டிய திருஅவையின் பங்கு குறித்தும் வலியுறுத்திக் கூறியுள்ள பேராயர் சுங் அவர்கள், பெருந்தொற்றுக் காலத்தில் கடவுளைவிட்டுத் தொலைவில் இருந்த மக்களை மீண்டும் அவரிடம் கொண்டுவரவேண்டிய திருஅவையின் கடமை குறித்தும் எடுத்தியம்பியுள்ளார்.

திருஅவை, அன்பு மற்றும், ஒன்றிப்பின் பாலமாகச் செயல்படுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதன் வழியாக, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மனம் உடைந்திருந்த மக்களைக் குணப்படுத்த முடியும் என்பதையும், பேராயர் சுங் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்னை மரியாவின் விண்ணேற்பு விழாவான ஆகஸ்ட் 15ம் தேதியன்று, தென் கொரியாவில் தேசிய சுதந்திர நாளும் சிறப்பிக்கப்படுகின்றது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, கொரியா, ஜப்பானின் 35 ஆண்டுகால காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தது. இந்நாள், ஒளிக்குத் திரும்புதல் என்னும் பொருள்படும் 'Gwangbokjeol'  என்றழைக்கப்படுகின்றது. இது, 'Gwang'  அதாவது ஒளி, 'Bok' அதாவது திரும்புதல், 'Jeol' அதாவது விழா நாள் என்ற மூன்று சொல்லாடல்களைக் கொண்டுள்ளது. 

உலக இளையோர் அமைதி  திருப்பயணம்

இதற்கிடையே, தென் கொரியாவில் ஆகஸ்ட் 16, வருகிற செவ்வாய் முதல் 22ம் தேதி வரை அமைதியின் காற்று என்ற தலைப்பில் இடம்பெறும் உலக இளையோர் அமைதி  திருப்பயணம் என்ற நிகழ்வில் பங்குபெற, மதம், இனம் என்ற பாகுபாடின்றி அனைத்து இளையோருக்கும் அழைப்புவிடுத்துள்ளது, தென் கொரியத் தலத்திருஅவை.

இரு கொரிய நாடுகளுக்கு இடையே அமைதி, ஒப்புரவு மற்றும், ஒன்றிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி அவை, இந்நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2022, 14:54