கஜகஸ்தாவின் தலைநகர் நுர்-சுல்தான் கஜகஸ்தாவின் தலைநகர் நுர்-சுல்தான்  

அமைதி மற்றும் ஒற்றுமையின் அடையாளமான திருப்பயணம்

“உலகரங்கில் அதிகாரப்பூர்வமான குரலைக் கொண்ட சிறந்ததொரு மனிதரைச் சந்திக்க மக்கள் மிகுந்த ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளனர்”- ஆயர் Dell’Oro.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருப்பீடச் செய்தித் தொடர்பகமும், கஜகஸ்தானின் அரசுத்தலைவரும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அமைதி மற்றும் ஒற்றுமைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்களிப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார், அந்நாட்டின் Karagandaவின் ஆயர் Adelio Dell’Oro

SIR என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறியுள்ள ஆயர் Dell’Oro அவர்கள், திருப்பீடத்தின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் திருத்தந்தை எம் நாட்டிற்கு வருவது உறுதியாகி இருக்கிறது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட்ட தனது அருள்பணித்துவ வாழ்வின் 50-ஆம் ஆண்டு விழாவில், மிலான் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மற்ற அருள்பணியாளர்களுடன், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தையுடன் நடைபெற்ற இரண்டு மணி நேரச் சந்திப்பின்போது, கஜகஸ்தான் நாட்டிற்கு வருவதற்குத் திருத்தந்தை விருப்பம் தெரிவித்ததாகவும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் Dell’Oro

கஜகஸ்தான், 130க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் ஒரு நாடு என்று தனது நாட்டைக் குறித்து நினைவுகூர்ந்துள்ள ஆயர் Dell’Oro அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையில் மதங்களுக்கிடையே மிகப்பெரிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்பைவிட இன்று, மக்கள் உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள் என்றும், உலகரங்கில் அதிகாரப்பூர்வமான குரலைக்கொண்ட சிறந்ததொரு மனிதரைச் சந்திக்க மக்கள் மிகுந்த விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கின்றனர் என்றும் எடுத்துக்கூறியுள்ளார் ஆயர் Dell’Oro.

ஆசியக் கண்டத்திலுள்ள கஜகஸ்தான், உலகின் மிகப் பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் முஸ்லிம்கள், மற்றும், 26 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2022, 13:39