2022-ஆம் ஆண்டிலாவது வறுமையை அகற்றுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பு 2022ஆம் ஆண்டிலும்கூட மக்கள் வறுமையால் துயருறுவதைப் பார்ப்பது தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று, கப்புச்சின் சபையைச் சார்ந்த 87 வயது நிரம்பிய அருள்சகோதரர் Kevin Crowley அவர்கள் கூறியுள்ளார்.
அயர்லாந்து நாட்டின் Dublin நகரில், வறியோருக்கு உணவளிப்பதற்கென்று மையம் ஒன்றை உருவாக்கி அதன் இயக்குநராக, கடந்த 50 ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வுபெறும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார், அருள்சகோதரர் Kevin Crowley
மக்கள் வாழும் இல்லங்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும், மக்கள் தங்குமிடங்களின்றி மிகவும் அவதியுறுகின்றனர் என்றும், அவர்களின் குடும்பத் தேவைகளை நிறைவு செய்வது சாத்தியமற்றதாகவும், பெரிய நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார் அருள்சகோதரர் Kevin Crowley.
குறைந்த விலையில் வீடுகள் கட்டப்படும் வரை, வீடற்றவர்களுக்கு மட்டுமல்ல, புதிய வீட்டில் கால்பதிக்க விரும்பும் இளம் தம்பதியினருக்கும் நெருக்கடி ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ள அருள்சகோதரர் Kevin Crowley, வாடகை வீடுகளுக்குச் செலவழிப்பதில்தான் மக்களின் அச்சம் அதிகம் வெளிப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
மக்கள் ஒவ்வொரு நாளும் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்கின்றனர், குறிப்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உணவுப் பொட்டலங்களைப் பெறுவதற்காகப் பசியோடு வருகின்றனர் என்றும், இவர்களில் அன்னையர்களும் குழந்தைகளும் உணவுக்காக வரிசையில் நிற்பது தனக்குக் கவலை அளிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார் அருள்சகோதரர் Kevin Crowley.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டப்ளின் நகரில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றியபோது, அருள்சகோதரர் Kevin, அவரது குழுவினர் மற்றும் அங்கு வரும் ஏழை மக்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்