தேடுதல்

கேரளாவின் அதானி துறைமுகம் கேரளாவின் அதானி துறைமுகம்  (AMIR COHEN)

கேரள துறைமுகத் திட்டத்திற்கு ஆயர்கள் எதிர்ப்பு

கேரளாவில் துறைமுக கட்டுமானப் பணிகளால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும். வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும் - பேராயர் சூசை பாக்கியம்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோடிக்கணக்கான டாலர் செலவில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகத் திட்டம், ஆயிரக்கணக்கான மீனவர்களின் வருங்காலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று, அம்மாநில மூத்த ஆயர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் தனியாருக்குச் சொந்தமான அதானி (Adani) துறைமுகம், மற்றும், சிறப்பு பொருளாதாரப் பகுதிகள் அமைக்கும் திட்டம் கைவிடப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10, இப்புதனன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் மூத்த ஆயர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

இப்பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு உரையாற்றிய, திருவனந்தபுரம் முன்னாள் பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், அத்துறைமுக கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும்படுமாறு அரசுக்கு விண்ணப்பம் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் சட்டமன்ற கட்டடத்திற்கு முன்பாக, பாரம்பரிய மீனவப் படகுகள், மற்றும் மீன்பிடி வலைகளோடு போராட்டத்தை மேற்கொண்ட மீனவர்களோடு, பேராயர் சூசை பாக்கியம், தற்போதைய திருவனந்தபுரம் பேராயர் தாமஸ் நெட்டோ, துணை ஆயர் கிறிஸ்துதாஸ் இராயப்பன், இன்னும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் போன்றோரும் சேர்ந்து, கேரள அரசை விண்ணப்பித்தனர்.

இதனை நீதிக்கான போர் என்று விவரித்துள்ள பேராயர் சூசை பாக்கியம் அவர்கள், துறைமுக கட்டுமானப் பணிகளால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் மற்றும், வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.  

மேலும், கேரள அரசின் இந்நடவடிக்கையால் ஏறத்தாழ 400 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன எனவும், இவர்கள், இந்தியாவின் சுதந்திர நாளைச் சிறப்பிக்க உரிமையைக் கொண்டிருக்கின்றனரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார், ஆயர் இராயப்பன். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2022, 14:16