திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 12ம் கிரகரி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஏறக்குறைய 1327ஆம் ஆண்டு இத்தாலியின் வெனிஸ் நகரைச் சேர்ந்த பிரபுக் குடும்பத்தில் பிறந்த திருத்தந்தை 12ம் கிரகரியே (இயற்பெயர் Angelo Corrario), திருத்தந்தை 7ம் இன்னசென்டிற்குப்பின் திருஅவையை வழிநடத்திச் சென்றார். 1380ஆம் ஆண்டு இவர் Castelloவின் ஆயராக நியமிக்கப்பட்டார். இவர் கிறிஸ்தவத்தில் இருந்த பிரிவினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மிகவும் ஆர்வம் கொண்டு உழைத்ததாலேயே, திருத்தந்தை 7ம் இன்னசென்டிற்கு பின்னர் 1406ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 12ம் கிரகரி என்ற பெயரையும் எடுத்துக்கொண்டார். திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்த கர்தினால்கள் அனைவரும், யார் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கிறிஸ்தவப் பிரிவினையை அகற்றி ஒரே குடையின்கீழ் வருவதற்கென எதிர்திருத்தந்தை 13ம் பெனடிக்ட் முடிதுறக்க முன்வரும் பட்சத்தில் புதிய திருத்தந்தையும் முடிதுறக்க இசைவு அளிக்கவேண்டும் என்ற வாக்குறுதியை இவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். நம் திருத்தந்தை 12ம் கிரகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவ்வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை வெளியிட்டு புதுப்பித்துக் கொண்டார்.
1406ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், அதாவது தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நாள்களிலேயே, தன் தேர்வு குறித்து எதிர்திருத்தந்தை 13ம் பெனடிக்டிற்கு தெரிவித்த திருத்தந்தை 12ம் கிரகரி, கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பிற்காக தான் முடி துறக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். எதிர்திருத்தந்தையும், முடிதுறக்க தானும் சம்மதிப்பதாகத் தெரிவித்து இருவருக்கும் இடையே ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். சவோனாவில் இருதரப்பினரும் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் அச்சந்திப்பு வரலாற்றில் இடம்பெறவே இல்லை. திருத்தந்தை 12ம் கிரகரியின் உறவினர்களும், நேப்பிள்ஸ் மன்னர் லதீஸ்லாஸும் (Ladislaus) இச்சந்திப்பிற்குத் தடையாக இருந்தனர் என சில வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. இதற்கிடையில், கர்தினால்கள் கூட்டத்தில் வழங்கிய ஒரு வாக்குறுதியை மீறினார் திருத்தந்தை 12ம் கிரகரி. அதாவது, புதிய கர்தினால்கள் எவரையும் நியமிக்க மாட்டேன் என வழங்கிய வாக்குறுதியை மீறி, தன் உறவினர்கள் 4 பேரை (தன் உடன்பிறப்புகளின் மகன்களை) கர்தினால்களாக அவர் நியமித்தார். இதனால் அதிருப்தியுற்ற 7 கர்தினால்கள், எதிர்திருத்தந்தை 13ம் பெனடிக்டின் கர்தினால்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, இரு திருத்தந்தையர்களையும் நீக்கிவிட்டு, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் கர்தினால்கள் அவையைக் கூட்டுவது குறித்து ஆலோசித்தனர்.
அந்தக் கர்தினால்கள் ஒன்றிணைந்து இத்தாலியின் Pisa நகரில் அவை ஒன்றைக் கூட்டி, இரு திருத்தந்தையர்களும் அங்கு வருமாறு பணித்தனர். ஆனால் இருவரும் அவர்களின் அழைப்பை மதிக்கவில்லை. சில காலம் பொறுத்துப் பார்த்த கர்தினால்கள், தங்கள் 15வது அவைக் கூட்டத்தில், இரு திருத்தந்தையர்களையும் நீக்குவதாக அறிவித்து, 1409ஆம் ஆண்டு ஜுன் 26ல் 5ம் அலெக்ஸாண்டர் என்பவரை புதிய திருத்தந்தையாகத் தேர்வு செய்தனர். இதற்கிடையில், மேலும் 10 புதிய கர்தினால்களை உருவாக்கிய திருத்தந்தை 12ம் கிரகரி, Cividale del Friuli நகருக்கு அருகே ஆயர்கள் அவையைக் கூட்டினார். அதில் வெகு சில ஆயர்களே கலந்துகொண்டனர். பல கர்தினால்கள் இவரை கைவிட்டுவிட்டுச் சென்றாலும் இவரே தொடர்ந்து உண்மையான திருத்தந்தையாகச் செயலாற்றினார். இவரை மன்னர் ரூபர்ட் (Rupert), நேப்பிள்ஸ் மன்னர் லதீஸ்லாஸ், சில இத்தாலிய சிற்றரசர்கள் ஆதரித்தனர். இதற்கிடையில், Cividale del Friuliயில் இடம்பெற்ற ஆயர் மாநாட்டில் 1415ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4ம் தேதி, திருத்தந்தையின் சார்பில் ஆயர் அவையில், அவையின் செயல்பாட்டிற்குரிய அனுமதி கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்தார் திருத்தந்தையின் பிரதிநிதி, கர்தினால் தொமினிச்சி. அதேவேளை, மாலதெஸ்தாவின் மன்னரும், திருத்தந்தையின் நெருங்கிய நண்பருமான சார்லஸ், திருத்தந்தையின் சார்பில் சமர்ப்பித்த கடிதத்தில், திருத்தந்தை 12ம் கிரகரி அவர்கள், தன் பதவி விலகலை அறிவித்திருந்தார். ஆயர் அவையில் கூடிய கர்தினால்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அவரால் உருவாக்கப்பட்டிருந்த கர்தினால்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த இந்த கர்தினால்கள், திருத்தந்தையை Portoவின் ஆயராகவும், Anconaவிலிருந்து செயல்படும் நிரந்தர, சட்டபூர்வ பிரதிநிதியாகவும் நியமித்தனர். அடுத்த திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அதாவது இரண்டே ஆண்டுகளில், 1417ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி Recanati எனுமிடத்தில் காலமானார் திருத்தந்தை 12ம் கிரகரி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்