தேடுதல்

ஆயர் Rolando José Álvarez ஆயர் Rolando José Álvarez  

வீட்டுக்காவலில் உள்ள ஆயர்: காழ்ப்புணர்வு, அன்பால் பதிலளிக்கப்பட…

ஆயர் அல்வாரெஸ் அவர்களோடு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள நிக்கராகுவா ஆயர்கள், நாட்டில் சமய சுதந்திரம் மதிக்கப்படவேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் விடுத்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

நிக்கராகுவா நாட்டில் ஆறு நாள்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டு ஆயர் Rolando José Álvarez அவர்கள் உலகினருக்கு வெளியிட்டுள்ள காணொளிச் செய்தி ஒன்றில், உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கியுள்ள துணிச்சலால், வெறுப்பை அன்பாலும், நம்பிக்கையின்மையை நம்பிக்கையாலும், அச்சத்தை வலிமையாலும் மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவின் Matagalpa மறைமாவட்ட ஆயர் அல்வாரெஸ் அவர்கள் உட்பட அருள்பணியாளர்கள், மற்றும், சில பொதுநிலை கத்தோலிக்கர், Matagalpa நகரின் திருஅவை கட்டடத்திற்குள் ஆகஸ்ட் 4, கடந்த வியாழன் முதல், காவல்துறையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிக்கராகுவாவில் பூர்வீக இன மக்களுக்கு எதிராக நடத்திவரும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், இவ்வாண்டு ஜூலை மாதத்தில் அருள்சகோதரிகள், மார்ச் மாதத்தில் திருப்பீடத் தூதர் ஆகியோர் உட்பட, கத்தோலிக்கரை நாட்டைவிட்டு வெளியேற்றியது போன்ற அரசின் செயல்களுக்கு எதிராக, ஆயர் அல்வாரெஸ் அவர்கள் பொதுப்படையாகப் பேசியிருந்தார்.

மேலும், ஆயர் அல்வாரெஸ் அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர், Matagalpa மறைமாவட்டத்தின்கீழ் இயங்கும் பல்வேறு கத்தோலிக்க வானொலி நிலையங்கள் அரசால் மூடப்பட்டதற்கும் அவர் பொதுப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஆயர்கள் உட்பட சில வன்முறை குழுக்கள், வெறுப்பைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டு, நாட்டில் அமைதி மற்றும், நல்லிணக்கத்தைக் குலைத்து வருகின்றனர், அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என, நிக்கராகுவாவின் தேசிய காவல்துறை, ஆகஸ்ட் 5 கடந்த வெள்ளியன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து தன் காணொளிச் செய்தியில் கருத்து தெரிவித்துள்ள ஆயர் அல்வாரெஸ் அவர்கள், தான் விசாரிக்கப்படுவதற்கு காரணம் தெரியவில்லை எனவும், திருஅவை எப்போதும் அதிகாரிகளோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கின்றது எனவும், இத்தகைய அடக்குமுறைகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மேலும், ஆயர் அல்வாரெஸ் அவர்களோடு தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிக்கராகுவா ஆயர்கள், நாட்டில் சமய சுதந்திரம் மதிக்கப்படவேண்டும், மற்றும், அடக்குமுறைகள் நிறுத்தப்படவேண்டும் என அரசை விண்ணப்பித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2022, 16:19