தலத்திருஅவை: புலம்பெயர்ந்துள்ள மியான்மார் மக்களுக்கு உதவுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
மியான்மார் நாட்டில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற காயா மாநிலத்தில் இராணுவத்திற்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுமாறு, தலத்திருஅவை அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தாக்குதல்களால் குறைந்தது ஒரு இலட்சத்து எழுபதாயிரம் குடிமக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், இவர்களில் அதிகமானோர் ஆலயங்களிலும், கிறிஸ்தவ நிறுவனங்களிலும் புகலிடம் தேடியுள்ளனர் என்றும் கூறியுள்ள காயா மாநிலத்தின் Loikaw மறைமாவட்ட அதிகாரிகள், அடிப்படை வாழ்வாதாரங்களின்றி துன்புறும் இம்மக்களுக்கு உதவுமாறு நன்கொடையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காயா மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் அடைக்கலம் தேடியுள்ளவேளை, கிராமங்களிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கியிருக்கும் மற்ற மக்கள், தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்ப இயலாத நிலையில் உள்ளனர் எனவும், அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயா மாநிலத்தின் மூன்று இலட்சம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர். அம்மாநிலத்தில் மியான்மார் இராணுவத்தின் பீரங்கிக் குண்டுவீச்சுகள், மற்றும், வான்வழித் தாக்குதல்களால் ஏழு கத்தோலிக்க ஆலயங்கள் சேதமடைந்துள்ளன. இன்னும், 38 பங்குத்தளங்களில் 16, கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன என செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மியான்மார் இராணுவம் குடிமக்களுக்கு எதிராக குறைந்தது 668 வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்றும், இவை ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்கள் போன்று உள்ளன என்றும், போர்கள் குறித்து கண்காணிக்கும் ACLED என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மாரில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால், 12 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. கணித்துள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்