தேடுதல்

கிர்கிஸ்தான் இளையோர் விழா கிர்கிஸ்தான் இளையோர் விழா 

மத்திய ஆசியாவில் முதன் முறையாக இளையோர் விழா

வருகிற செப்டம்பரில் (13-15,2022) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கஜகஸ்தானில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்திற்கு மத்திய ஆசிய இளையோர் தயாரிப்புக்களைத் தொடங்கியுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இம்மாதத் தொடக்கத்தில் மத்திய ஆசியாவில் முதன் முறையாக நடைபெற்ற கத்தோலிக்க இளையோர் விழாவில், அகமகிழ் நிகழ்வுகள் மற்றும், இறைவேண்டலில் சில நாள்கள் செலவழித்த இளையோர், கஜகஸ்தானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்கும் தயாரிப்புக்களில் ஈடுபட்டனர் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

கிர்கிஸ்தான் நாட்டின் Issyk-Kul நகரிலுள்ள இயேசு சபையினர் மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில், அந்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், இரஷ்யாவின் சைபீரியா போன்ற நாடுகளிலிருந்தும் அறுபது இளையோர் பங்குகொண்டனர்.

அவ்விழாவில், கிறிஸ்தவ தனித்துவம், திருஅவையில் உறுப்பினராக இருப்பது போன்றவை குறித்து அருள்பணியாளர்களும், மறைக்கல்வி ஆசிரியர்களும் தங்களின் அனுபவங்களை இளையோரோடு பகிர்ந்துகொண்டனர்.

"வெப்ப ஏரி" என்ற மலைப்பகுதிகளில் வாழ்கின்ற வயதுமுதிர்ந்தோர், புறக்கணிக்கப்பட்டோர், சிறார், மற்றும், சமுதாயத்தில் வாய்ப்பிழந்தோர்க்குப் பணியாற்றுவதற்கென ஆறு திட்டங்களை, இந்நிகழ்வில் இளையோர் உருவாக்கினர் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

இளையோரின் பங்குத்தளங்கள் மற்றும், அவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் சமூக மற்றும், பிறரன்புப் பணிகளை ஊக்கப்படுத்தும்வண்ணம் இந்த இளையோர் விழா நடத்தப்பட்டுள்ளது.

1990களிலிருந்து கிர்கிஸ்தானில் மறைப்பணியாற்றி வரும் இயேசு சபையினரின் குழுவில் இளமைத் துடிப்புள்ள மற்றும், சவாலைச் சந்திக்கக்கூடிய இளம் மறைப்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மத்திய ஆசியா மற்றும், சைபீரியாவில் மாறி மாறி பணியாற்றி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2022, 15:42