மக்களுக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார் - பேராயர் Netto
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தேவைப்பட்டால் எனது தங்கும் மற்றும் இறைவேண்டல் செய்யும் இடத்தை பேராயர் இல்லத்திலிருந்து போராட்ட களத்திற்கு மாற்றிக்கொள்வேன், என்று கூறியுள்ளார் கேரளாவின் திருவனந்தபுர உயர் மறைமாவட்டப் பேராயர் Thomas Netto
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோடிக்கணக்கான டாலர் செலவில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்து வரும் போராட்டம் 34வது நாளை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் 23, இச்செவ்வாயன்று, அதன் எதிர்ப்பாளர்களிடம் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் பேராயர் Netto
மனிதகுலத்திற்கு விடுதலையைக் கொடுத்த கிறிஸ்துவையும் சிலுவையும் தங்கள் வாழ்க்கையில் எல்லாமுமாக மீனவர்களும் கிறிஸ்தவ சமூகமும் நம்புகிறார்கள், என்று எடுத்துரைத்துள்ள பேராயர் Netto அவர்கள், கிறிஸ்துவின் வழியில் நாங்கள் நீதிக்காகப் போராடுகிறோம் என்றும், எங்களிடம் இழப்பதற்கென்று எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.
தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்வதாக அறிவித்தப் பேராயர் Netto அவர்கள், என் மக்களுக்காக என் உயிரை தியாகம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன் என்றும் தனது உறுதியான மனதை வெளிப்படுத்தினார்.
ஆகஸ்ட் 21ல், இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ள கேரள கத்தோலிக்க ஆயர் பேரவை, கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு, அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென தான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் விண்ணப்பித்துள்ளது.
கேரளாவில் தனியாருக்குச் சொந்தமான அதானி (Adani) துறைமுகம், மற்றும், சிறப்பு பொருளாதாரப் பகுதிகள் அமைக்கும் திட்டம் கைவிடப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் பேராயர் மற்றும் அருள்பணியாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்