தேடுதல்

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ 

தலைமைப் பொறுப்பில் ஆதிக்க மனப்பான்மை கூடாது

தலைத்திருஅவையின் தலைமை என்பது ஒருபோதும் ஆதிக்க மனப்பான்மை கொண்டதாக இருக்கக் கூடாது : கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஈராக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து துயரங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்கொண்டு வருவதால் அவர்கள் காணாமல் போகும் பேராபத்துக் குறித்து மீண்டும் ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார் பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ.

ஆகஸ்ட் 21 முதல் 27 வரை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்று வரும் கல்தேய ஆயர்பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் இவ்வாறு கருத்துத் தெரிவித்த கர்தினால் சாக்கோ அவர்கள், அரசு, சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளில் சிந்தனை வழியில் மாற்றம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கிறிஸ்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே ஈராக்கில் உள்ள இஸ்லாமிய பாரம்பரியம் நடத்துகிறது, மற்றும் அவர்களின் சொத்துக்களை அபகரிக்க அனுமதிக்கிறது, என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், மதம் மற்றும் இனம் சார்ந்து அல்லாமல், குடியுரிமையின் அடிப்படையில் ஒரு மக்களாட்சி அமைப்பைக் கட்டியெழுப்ப தற்போதைய அரசியலமைப்பையும் சட்டத்தையும் மாற்ற வேண்டிய அவசரத் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.

ஈராக் அரசியல் தலைவர்கள் தங்களின் தனிப்பட்ட மற்றும் பாகுபாடான நலன்களை ஒதுக்கி வைக்குமாறு கேட்டுக்கொண்ட கர்தினால் சாக்கோ அவர்கள்,  நாட்டில் பரவலான ஊழல், மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசு அமையவேண்டியதன் தேவையை எடுத்துக்காட்டியுள்ளார். 

தலத்திருஅவையின் தலைமைப் பொறுப்பு மற்றும் அதிகாரம் குறித்து, கல்தேய ஆயர்களுக்கு எடுத்துரைத்த கர்தினால் சாக்கோ,  பணிப்பொறுப்பு என்பது எப்போதும் தூய ஆவியானவரின் வழிநடத்துதலில்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,  திருஅவையின் வலிமை என்பது,  மற்றவர்களுக்குப் பணியாற்றுவதில்தான் அடங்கியுள்ளது என்றும்,  தலைத்திருஅவையின் தலைமை என்பது ஒருபோதும் எதேச்சை அதிகாரம் கொண்டதாக இருக்கக் கூடாது என்றும் நினைவுபடுத்தியுள்ளார் கர்தினால் சாக்கோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2022, 14:48