தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் மால்கம் இரஞ்சித் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் மால்கம் இரஞ்சித் 

இலங்கை குடும்பங்களுக்கு திருத்தந்தை வழங்கிய உதவிக்கு நன்றி

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று கிறிஸ்தவ ஆலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ நானூறு குடும்பங்களுக்கு, ஒரு இலட்சம் யூரோக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.   

இலங்கை, தற்போது எதிர்கொண்டுவரும் கடுமையான பொருளாதார, அரசியல், மற்றும், நிதி நெருக்கடிகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்துள்ள, அந்நாட்டின் கொழும்புப் பேராயர் கர்தினால் இரஞ்சித் அவர்கள், பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது திருத்தந்தை காட்டியுள்ள அன்பிற்கு நன்றி கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று கத்தோலிக்க, மற்றும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை ஆலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர், மற்றும், 400 குடும்பங்களுக்குமேல் பாதிக்கப்பட்டன.

இவ்வாண்டு பிப்ரவரியில் உரோம் நகருக்கு வந்தபோது திருத்தந்தையைச் சந்தித்து நாட்டின் நிலவரத்தையும், 2019ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றியும் விவரித்தேன் எனவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி செய்ய திருத்தந்தை முன்வந்தார் எனவும், தனக்கு ஒருவர் ஒரு இலட்சம் யூரோக்களை நன்கொடையாக அளித்தார், அதில் 50 ஆயிரம் யூரோக்களைத் தர இயலும் என திருத்தந்தை கூறினார் எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், இலங்கைக்கு இவ்வாண்டு ஏப்ரலில் திரும்பியபோது, உயர்மறைமாவட்ட வங்கிக் கணக்கில், திருத்தந்தையிடமிருந்து ஒரு இலட்சம் யூரோக்கள் வந்த விவரம் இருந்தது என்றுரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் துன்புறும் குடும்பங்களுக்கு அப்பணத்தைப் பகிர்ந்து கொடுக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

தலத்திருஅவை, பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியாகவும் உதவிசெய்து வருவதோடு, தற்போதைய பொருளாதார, அரசியல், மற்றும், நிதி நெருக்கடிகளால் துயருறும் மக்களுக்கும் உதவி வருகிறது என்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள், வத்திக்கான் செய்திகளிடம் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2022, 15:21