தேடுதல்

கர்தினால் இரஞ்சித் கர்தினால் இரஞ்சித் 

நற்செய்தி காட்டும் விழுமியங்களின்படி பொதுநலனுக்காக வாழ்வோம்

அதிகாரம் மற்றும் செல்வத்தின் மீது பேராசை கொண்ட மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்குத் துரோகம் இழைத்ததால், நாடு படுகுழியில் விழுந்துள்ளது”: இலங்கை கர்தினால் இரஞ்சித்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி ஏற்படுத்தியுள்ள நெருக்கடி குறித்து தலத்திருஅவை தனது அதிர்ச்சியை வெளிப்படுத்துவதாக அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 31, ஞாயிறன்று நடைபெற்ற Modaraவின் புனித திருத்தூதர்கள் ஆலயத்தின் 150-வது யூபிலி விழாத் திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது, இவ்வாறு கூறியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை எப்போதும் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகாரம் மற்றும் செல்வத்தின் மீது பேராசை கொண்ட மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்கு துரோகம் இழைத்ததால், நாடு படுகுழியில் விழுந்துள்ளது என்று கூறியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்நாட்டிலுள்ள மத நம்பிக்கையாளர்கள் அனைவரும், நாட்டின் சமூக மற்றும் அரசியல் நிலைமைகளில் அக்கறை காட்டவும், நீதிக்காகப் போராடவும், மனித மாண்பைக் காக்கவும், சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த உயிர்ப்புப் பெருவிழாப் படுகொலைகள் பற்றி சுட்டிக்காட்டிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், உலகினர்முன் நாம் வெட்கப்படக்கூடிய அளவிற்கு நாட்டில் சட்டமும் நீதியும் இல்லை என்றும், பலம் வாய்ந்தோரின் பக்கம் சட்டம் சாய்ந்துள்ள நிலையில், சட்டவிரோதச் செயல்கள் அதிகம் தலைதூக்கியுள்ளன என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்நெருக்கடியான நிலையில், திருமுழுக்குப் பெற்றுள்ள ஒவ்வொருவரும் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டுமென அழைப்புவிடுத்துள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், அமைதி, நீதி, வெளிப்படைத்தன்மை, நேர்மை, பணி ஆகிய நற்செய்தி கோட்பாடுகள் மற்றும் விழுமியங்களின்படி ஒவ்வொருவரும் சமூகம் மற்றும் நாட்டின் பொது நலனுக்காக வாழ்வோம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2022, 13:57