தேடுதல்

மன்னர் சவுல் மன்னர் சவுல்  

விவிலியத்தேடல்:திருப்பாடல் 33-5-படைபலமின்றி இறைபலத்தால் வெல்வோம்

நமது சொந்த பலம் மற்றும் அறிவை மட்டுமே நம்பியிருக்கும்போது, நாம் அழிவின் பாதாளக் குழிக்குள் விழுந்து மாய்ந்து விடுவோம்.
திருப்பாடல் 33-5

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், மக்களின் உரிமைச்சொத்தான கடவுள்! என்ற தலைப்பில் திருப்பாடல் 33-இல் 12 முதல் 15 வரையுள்ள  இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 16, 17 ஆகிய இரு இறைவசனங்களைக் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெறும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை. வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. (வசனம் 16-17). மேற்கண்ட இந்த இரு இறைவசனங்களிலும் தாவீது இரண்டு காரியங்களை நமக்குக் குறித்துக்காட்டுகிறார். முதலாவதாக, போர்களும் படைபலமும் மட்டுமே ஒரு மன்னரின் வெற்றிக்கு முக்கியமல்ல என்கிறார். இப்போது முதல் காரியம் குறித்து சற்று ஆழமாகச் சிந்திப்போம்.

ஃபிரான்ஸ் நாட்டை மாவீரன் நெப்போலியன் 1799-ம் ஆண்டு முதல் 1814-ம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். ஐரோப்பிய நாடுகளைத் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டு வரும் பேராசையால் பல போர்களில் ஈடுபட்டார். ஆனால், அவருடைய பேராசைக்கு வாட்டர்லு போர் முற்றுப்புள்ளி வைத்தது. 1812ஆம் ஆண்டு, நெப்போலியனின் படை ஆறு இலட்சம் போர் வீரர்களைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப் பெரும் படையாக உருவாகி இருந்தது. எதற்கும் அஞ்சாத போர் வீரர்கள்! இந்த நம்பிக்கையில் இரஷ்யாவிற்குள் துணிச்சலாகச் சென்றார் நெப்போலியன். அவர் செய்த மாபெரும் தவறு இந்தப் போர்தான். பல்லாயிரக்கணக்கான படைவீரர்களை மட்டுமே நம்பி அவர் இரஷ்யாவிற்குள் நுலைந்தார். அப்போது குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் தொடக்கத்தில் அதுகுறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவரது தளரா நம்பிக்கைக்கு முன்னால் எதுவும் துச்சம் தான்!  அளவுகடந்த ஆவலில் அவர் படை முன்னேறிச் சென்று,  ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றியது.  வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தன. இரஷ்ய மக்கள் நாட்டையே துப்புரவாகத் துடைத்து வைத்திருந்தனர். ஆதலால், பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய அவல நிலைக்கு நெப்போலியனின் படைவீரர்கள் தள்ளப்பட்டனர். முக்கியமாக, இரஷ்யாவின் குளிர் மிகவும் பயங்கரமான ஒன்று என்பதை நெப்போலியனும் அவரது படைவீரர்களும் அறிந்திருக்கவில்லை. எனவே, உயிரை வாட்டியெடுக்கும் அக்கடுங்குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வீரர்கள் சரிந்து விழுந்து இறந்தனர். ஒரே நாளில் மட்டும் 50000 வீரர்கள் உயிரிழந்தனர். இரஷ்யாவை நோக்கிச் சென்ற ஆறு லட்சம் படைவீரர்களில் உயிரோடு மீண்டு வந்தவர்கள் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேர் மட்டும்தான். இறுதியாக வாட்டர்லூ போரில் தோல்வியுற்ற நெப்போலியன் அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், ஆங்கிலேயர் அவரைக் கைது செய்து, புனித ஹெலினா தீவில் சிறை வைத்தனர். அங்கு நெப்போலியன் தம் இறுதிக்காலத்தைக் கழித்து மரணித்துப் போனார்.

தாவீது அரசர் இஸ்ரயேல் மக்களின் முதல் அரசரான சவுலின் தோல்விக்கு காரணமானவற்றை தன் மனக்கண் கொண்டு இந்த வரிகளை அவர் எழுதியிருக்க வேண்டும் என்றே நமக்கு எண்ணத்தோன்றுகிறது. நாம் நினைத்ததும் சவுலை குறிகூறிவிட முடியாது. காரணம், சவுலை இஸ்ரயேல் மக்களின்  முதல் அரசராக கடவுளே தேர்ந்தெடுத்தார். சவுல் அம்மோனியர்கள், பெலிஸ்தியர்கள், மோவாபியர்கள் மற்றும் அமலேக்கியர்கள் உட்பட பல எதிரிகளை தோற்கடித்தார். சிதறிய பூர்விக இனமக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வலிமையையும் ஆற்றலையும் அளித்தார். அவர் 42 ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்தார். சவுல் அரசர் மிகவும் வலிமை வாய்ந்தவராக இருந்தார். தாராள மனம் கொண்டிருந்தார். அவரது ஆட்சியின் தொடக்கத்தில் அவர் மக்களால் போற்றி மதிக்கப்பட்டார்.

ஆனால், அவர் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக விவேகமின்றி பல காரியங்களைச் செய்தார். அவரிடம் விளங்கிய பொறாமை உணர்வு, அவரை மூடத்தனத்திருக்கும் பழிவாங்கும் செயலுக்கும் ஆட்படுத்தியது. குறிப்பாக அவர் தன்னை அரசராக நிலைநிறுத்திய கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டார். கடவுள்மீது நம்பிக்கை வைப்பதைவிட தனது படைகள்மீதும் தான் கொண்டிருந்த ஆயுதங்கள்மீதும் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். மேலும், ஒரு சிறுவனாக, தாவீது பெலிஸ்தியர்களின் போர்த்தளபதியான கோலியாத்தைக் கொன்றொழித்தபோது, அதுகுறித்து பெருமைப்படாமல் அவர்மீது பொறாமைக் கொண்டார். அதுமட்டுமன்றி தாவீதை முற்றிலும் அழித்துவிடவும் தீர்மானித்தார். தாவீதின் வெற்றி குறித்து பெண்கள் ஆடிப்பாடுகையில் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என்று பாடினர். இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் ‘தாவீதுக்குப் பதினாயிரம் பேர்’ என்றனர். எனக்கோ ‘ஆயிரம் பேர் மட்டுமே’ என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்!” என்று கூறினார். அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார். (1 சாமு 18:7-9) மேலும், “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது! கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலை வழிபாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தீர்! அவரும் உம்மை அரச பதவியினின்று நீக்கிவிட்டார் (1 சாமு 15:22-23) என்று இறைவாக்கினர் சாமுவேல் சவுலிடம் கடவுளின் எண்ணங்களை எடுத்துரைப்பதைப் பார்கின்றோம்.

இரண்டாவதாக, "வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது" என்கிறார் தாவீது. பாரசீக மன்னர் அலெக்சாண்டரை இதற்கொரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். யாராலும் அடக்க முடியாத அவரது குதிரையின் பெயர் பூஸிபாலஸ் (Bucephalus). அதைத் தொட்டுப் பார்க்க, தட்டிக் கொடுக்க வகையில்லாது குப்புற விழுந்த வீரர்களின் குலை நடுக்கத்தைக் கண்டு கொல்லென சிரித்தார் அலெக்சாண்டர். மனிதனால் அடக்கியாள முடியாதது ஒன்றில்லை. ஆனால், மண்டையில் கொஞ்சம் மூளை வேண்டும். மனதில் ஓர் திடம் வேண்டும், செயலில் நம்பிக்கை வேண்டும், எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சுவதொழிய வேண்டும், என்பவையே அலெக்சாண்டருடைய கொள்கைகள். மனிதன் நிழல் தெரிந்தவுடனே காற்று வேகத்தில் கிளம்பிவிடும் அந்தக் குதிரையை காலையில் கிழக்கு நோக்கி நிறுத்தினார் அலெக்சாண்டர். நிழல் குதிரைக்கு முன்னால் போகாமல் பின்னால்போகவேண்டுமென்ற வழியைக் கையாண்டு குதிரைமேல் ஏறிக்கொண்டார். அவ்வளவு தான் ஒரே அடியில் கீழே விழும் பலவீனன் போல் வீழ்ந்துவிட்டது அக்குதிரை. அதன் முரட்டுத்தனம் ஒன்றும் அலெக்சாண்டரிடம் பலிக்கவில்லை. வீரத்தை மட்டுமல்ல விவேகத்தையும் பயன்படுத்தி குதிரையை அடக்கிவிட்ட அலெக்சாண்டரைப் பார்த்து "என்னுடைய இந்தச் சிறிய அரசு உனக்குப் போதாது' என்றார் பிலிப்பு. அன்றே, தான் மிகப்பெரிய மன்னராக வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதயமாகியது. அவரால் அடக்கியாளப்பட்ட குதிரை, அவர் சென்ற பல இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அந்தக் குதிரையின் பெயரைத் தான் இந்தியாவில் வெற்றி பெற்ற ஒரு நகரத்துக்கு வைத்திருந்தார். ஆனால் அந்தக் குதிரையும் இந்தியாவிலேயே இறந்துவிட்டது மட்டுமன்றி, அந்த குதிரையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரமும் நான்கைந்து ஆண்டுகளில் அழிந்துவிட்டது.

தேர்ப்படைகளும், குதிரைப் படைகளும் கடலில் அழிந்து மூழ்கிப்போயின என்று விடுதலைப்பயண நூலில் நாம் வாசிக்கின்றோம். மோசேயின் வழிநடத்துதலில் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் பார்வோனின் கை ஓங்கியபோது கடவுள் தன் வலிமையின் கரம்கொண்டு அவர்களின் தேர்ப்படைகளையும், குதிரைப்படைகளையும் செங்கடலில் மூழ்கச்செய்தார். ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை (விப 14:26-28).

அவ்வாறே ஆண்டவரை மட்டுமே முற்றிலும் நம்பி அவரின் துணையோடு அமலேக்கியருக்கு எதிராகப் போரிட்ட யோசுவா வெற்றிவாகை சூடுவதைப் பார்க்கின்றோம். மோசேயின் தளர்வுறாத கைகளால் எழுப்பப்பட்ட இறைவேண்டலே அவர்களுக்கு இந்த வெற்றியைத் தருகிறது. அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே மோசே, ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார் (விப 17:10-13).

தாவீது அரசர் எடுத்துக்காட்டும் இந்த இரண்டு காரியங்களிலும், நாம் எப்போதும் எல்லாவற்றிலும் கடவுளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்றும் அவருடைய அடைக்கலத்தை நாடவேண்டும் என்றும் விரும்புகின்றார். இதற்குப் பதிலாக நமது சொந்த பலம் மற்றும் அறிவை மட்டுமே நம்பியிருக்கும்போது, ​​நாம் அழிவின் பாதாளக் குழிக்குள் விழுந்து மாய்ந்து விடுவோம். ஆகவே, நாம் அன்றாடம் சந்திக்கும் அனைத்து எதிர்ப்புகளிலும் இறைபலம் கொண்டு வெற்றி காண இந்நாளில் இறைவனை நோக்கி மன்றாடுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2022, 14:00