தேடுதல்

இறைவேண்டல் செய்யும் விசுவாசிகள் இறைவேண்டல் செய்யும் விசுவாசிகள்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 33-4-பேறுபெற்ற மக்களினம் நாம்!

நம் கடவுள் காக்கும் கடவுள், இரக்கத்தின் கடவுள், பரிவன்பின் கடவுள். அவர் எப்போதும் நம்மைக் குறித்து மட்டுமே சிந்திக்கின்றார்.
திருப்பாடல் 33-4

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அண்மையில் இணையத்தில் ஒரு மகன் தனது தந்தையின் பிறந்தநாளின்போது அவருக்கு மனம்திறந்து எழுதிய மடல் ஒன்றை வாசித்தேன். அது என் மனதை வருடியது. இங்கே அதை சற்று சுருக்கித் தந்துள்ளேன். இன்றைய நமது திருப்பாடல் சிந்தனைக்கு இது விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

“அன்புள்ள அப்பா, இன்று பிப்ரவர் 2-ஆம் தேதி. உங்களுக்குப் பிறந்த நாள். உங்களை முழுமையாக வாழ்த்துவதற்கு எனக்கு வயதில்லை. ஆனாலும் வணங்கி நிற்கிறேன். உங்களுக்கு மகனாய்ப் பிறந்ததுக்காகக் கடவுளுக்குப் பல கோடி நன்றி சொல்லுகிறேன். தந்தை மகன் உறவை தாண்டி, நாம் எவ்வளவோ மனம் விட்டுப் பேசியிருக்கின்றோம். நண்பர்களைப் போல பழகி இருக்கிறோம். சின்னச் சின்ன சண்டைகள் கூடப் போட்டதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் எனக்கு வில்லனாகவும் பிற்போக்கு வாதியாகவும் தெரிந்தீர்கள். ஆனால் இன்று, அதை நினைத்துப் பார்க்கும்போது நான் வெட்கத்திலாலும் வேதனையாலும் தலை குனிகின்றேன். காரணம், இன்று நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்ட பிறகு, அன்று வில்லனாகத் தெரிந்த நீங்கள். இன்று எனக்குக் கதாநாயகனாகத் தெரிகிறீர்கள்.  உங்கள் கஷ்டம் புரியாமல்  எனக்கு அது வேண்டும் ... இது வேண்டும்... என்று  அதிகாரமாய் நான் கேட்டவைகளை எல்லாம் நீங்கள் தேடி அலைந்து  வாங்கிக் கொடுத்து என் முகமலர்ச்சியில் உங்கள் இதயம் மகிழ்வீர்களே அப்பா! அப்போது நான் எத்தகைய சுயநலவாதியாக இருந்திருக்கின்றேன் என்பதை இப்போது நினைத்தாலும் என் விழிகளில் கண்ணீர் கொட்டுகிறது.

நான் உங்களுக்கு ஒரு நல்ல பிள்ளையாக இருந்தேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் நீங்கள் எனக்கு எப்போதும் ஒரு நல்ல தந்தையாகவே இருந்துள்ளீர்கள். உங்கள் கனவுகளை நான் நிறைவேற்றவில்லை என்பதை நான் நன்கு அறிந்தே வைத்திருக்கிறேன். ஆனாலும் அதைப் பற்றி என்னிடம் நீங்கள் எதுவும் சொன்னதில்லை. அவைகளை நியாயப்படுத்த காரணங்கள் பல என்னிடம் உள்ளன என்பது உங்களுக்கும் தெரியும். ஆனாலும் அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களிடம் மன்னிப்புக் கோருவதில் எனக்கு எந்த வெட்கமோ துக்கமோ கிடையாது. ஏமாற்றங்களாலும் துரோகங்களாலும் நான் வீழ்த்தப்பட்டு வாழ்க்கையில் தோற்றுப் போனவனாய் விரக்தியின் விளிம்பில் நின்றபோது, உங்கள் அரவணைப்பும் அன்பும் மட்டுமே எனக்கு அருமருந்தாக இருந்தது. அதுவே, மறுபடிம் நான் வாழ்க்கையில் எழுந்து நிற்கவும் வெற்றியடையவும் எனக்கு உறுதி தந்தது. உங்களைப் போல் தந்தை எனக்கு இருக்கு வரை, நான் ஆயிரம் முறை விழுந்தாலும் மறுபடியும் துணிவோடு எழுந்து நிற்பேன். நான் இது வரை உங்களிடம் கேட்டதில்லை. ஆனாலும் இன்று கேட்கிறேன். மறு ஜென்மம் என்பது ஒன்று இருக்குமேயானால், நீங்கள் எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்.  அப்போதுதான் நீங்கள் எனக்குச் செய்த அனைத்தையும் நான் உங்களுக்குச் செய்து, என் நன்றி கடனைத் தீர்க்க முடியும். நான் இதுவரை உங்களிடம் சொன்னதில்லை. ஆனாலும் இன்று சொல்லுகின்றேன்...... I Love U Paa.......” என்று முடிகிறது அந்தக் கடிதம்.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘ஆண்டவரின் திட்டங்கள் உயர்ந்தவை!’ என்ற தலைப்பில் திருப்பாடல் 33-இல் 10, 11 ஆகிய இரண்டு  இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 12 முதல் 15 வரையுள்ள  இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! (வசனம் 12-15)

மேற்கண்ட இறைவசனங்களில் யாவே இறைவனை நம் அன்புக் கடவுளாகப் பெற்றிட நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று பெருமை பொங்கக் குறிப்பிடுகிறார் தாவீது. அதாவது, இஸ்ரயேல் மக்களும் தானும், கடவுளைத் தெரிந்துகொள்ளவில்லை, மாறாக, கடவுளே தங்களைத் அவரின் சொந்த மக்களாகத் தெரிந்துகொண்டார் என்பதை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றார் தாவீது. இதனை மனதில் கொண்டுதான், ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர் என்று குறிப்பிடுகின்றார். மேற்கண்ட நிகழ்வில் நாம் கேட்டதுபோன்று, நம் கடவுள் நமது அன்புத் தந்தையாக விளங்குகின்றார். அவர் எப்போதும் நம்மீது பரிவிரக்கம் கொண்டிருக்கின்றார். அதனால்தான், ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர் (திபா 145:8,9) என்று இத்திருப்பாடல் 125-இல் அவரது பண்புநலன்களைப் போற்றுகிறன்றார் தாவீது.  நமது அன்றாட வாழ்வில், இவரை எனது அப்பாவாக, அம்மாவாக, நண்பராக, அக்காவாக, தங்கையாக, அண்ணனாக, பெறுவதற்கு நான் உண்மையிலேயே கொடுத்துவைத்தவன் என்று எப்போது நாம் கூற முடியும்? அவர்கள் நம்மீது கொண்டுள்ள உண்மையான அன்பையும், பாசத்தையும், கரிசனையையும், அக்கறையையும், நம்பகத்தன்மையையும், தியாகத்தையும் பார்க்கும்போதுதான் நம்மால் இவ்வாறு சொல்ல முடியும்.  இல்லையா..? ஆக, இத்தகைய பண்புநலன்கள் கடவுளிடம் துலங்குவதன் அடையாளமாகவே தாவீது அரசர், ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது என்று  குறிப்பிடுகின்றார்.

பழைய ஏற்பாடு முழுவதும் கடவுள் தன் மக்கள்மீது கொண்டுள்ள பேரன்பையும், கரிசனையையும் பார்க்கின்றோம். குறிப்பாக, இஸ்ரயேல் மக்கள் பாவத்தில் வீழ்ந்தபோதெல்லாம், அன்புநிறைந்த ஒரு தந்தையாக அவர்களை அக்கறையுடன் கண்டித்துத் திருத்துகின்றார். மேலும், அவர்கள் பேராபத்தில் சிக்கிக்கொண்டு நம்பிக்கை இழந்த நேரங்களில் எல்லாம் உடனிருந்து அவர்களைத் தேற்றுகிறார். அதிலும் சிறப்பாக, தங்களின் பாவச் செயல்களால் இஸ்ரயேல் மக்கள் கடவுளுடனான உடன்படிக்கையை மீறியபோதெல்லாம், கனிவன்புடன் அவர்களை வழிநடத்திவந்த அந்தச் சூழல்களை எல்லாம் நினைத்துப் புலம்பும் ஒரு தந்தையாகச் செயல்படுவதைப் பார்க்கின்றோம். இஸ்ரயேல் குழந்தையாய் இருந்த போது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள். ஆனால், பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்? உன்னை எப்படி அதிமாவைப் போலாக்குவேன்? செபோயிமுக்குச் செய்ததுபோல் உனக்கும் செய்வேனோ? என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. (ஒசே 11, 1-4, 8-9)

புதிய ஏற்பாட்டில் இயேசு ஆண்டவரும் இறைத்தந்தையின் அன்பை பல்வேறு உவமைகள் வழியாக எடுத்துக்காட்டியுள்ளார். அதேநேரத்தில், தானும் ஒரு தந்தையைப்போன்று வேறுபாடின்றி எல்லோரையும் ஏற்றுக்கொண்டு அன்பு செய்வதையும், துன்ப துயரங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் அனைவரையும் குணப்படுத்தி அவர்களுக்கு விடுதலை அளிப்பதையும் பார்க்கின்றோம். இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால், தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” (மத் 9:35-38) என்று இயேசு கூறுவதை வாசிக்கின்றோம்.

திருமணமே செய்துகொள்ளாமல்  தனது வாழ்வு முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர்தான் அன்புத்தலைவர் காமராஜர் என்பது நமக்குத் தெரியும். இவர் இல்லற வாழ்வில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, ஒரு தந்தைக்குரிய கடமை உணர்வோடு வாழ்ந்தவர். மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். எல்லாரும் எல்லாமும்  பெற்று நலமுடனும் வளமுடனும் வாழவேண்டும் என்று எண்ணியவர். இவர் கொண்டிருந்த எளிமையான வாழ்வாலும், நம்பகத்தன்மையாலும், உறுதியான மனதோடு மக்களுக்காக உழைத்ததாலும், கட்சிவேறுபாடின்றி அனைவராலும் தந்தை காமராஜர் என்று இன்றும் போற்றப்படுகிறார். இவரை எங்கள் தந்தையாகவும் தலைவராகவும் பெற்றதற்கு நாம் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள் என்று எல்லாரும் சொல்லக்கூடிய அளவிற்கு, அவர் நம் மனங்களில் உயர்ந்து நிற்கிறார். காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு கிராமத்தை அடைந்த அவர், ‘‘இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்று கேட்டார். அதற்கு முதலமைச்சரின் உதவியாளர், ‘‘இந்த ஊரிலுள்ள மக்கள் நம் கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. அதனால்தான் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார். இதைக் கேட்டு கோபமடைந்த காமராஜர், ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள், தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம். அது, அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால், அரசு எல்லோருக்கும் பொதுவானது. அது மக்களிடத்தில் வேறுபாடு காட்டக் கூடாது. ஆகவே, உடனே இந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றைத் திறக்கச் சொல்லுங்கள்” என்றார் காமராஜர்.

நம் தந்தையாம் கடவுள் காக்கும் கடவுள், இரக்கத்தின் கடவுள், பரிவன்பின் கடவுள்,  மற்றும் எல்லாருக்குமான கடவுள். அவர் எப்போதும் நம்மைக் குறித்தே சிந்திக்கின்றார். அவரிடம் ஒருதலை சார்பு என்பதே இல்லை. நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே அவர் நமக்கான திட்டங்களை உருவாக்கியவர். நாம் இந்த உலகத்திற்கு வந்த பின்பு அத்திட்டங்களின்படியே நம்மை வழிநடத்தும் தூயவர் அவர். இப்படிப்பட்டவரை நம் கடவுளாகப் பெற்றதற்கு உண்மையிலேயே பேறுபெற்றவர்கள்தாம். ஆகவே, அவரிடம் மட்டுமே எப்போதும் சரணடைவோம். அவரையே என்றென்றும் நம் உரிமைச் சொத்தாகக் கொள்வோம். அவருடன் எப்போதும் ஒன்றித்து வாழ்வதற்கான அருள்வரங்களை இந்நாளில் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2022, 14:36