தேடுதல்

அருள்பணியாளர் மற்றும் அருள்சகோதரிகளுடன் மும்பை பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ அவர்கள்   அருள்பணியாளர் மற்றும் அருள்சகோதரிகளுடன் மும்பை பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ அவர்கள்  

நாம் மிகப்பெரும் பாரம்பரியத்தை கொண்டுள்ளோம் : பேராயர் மச்சாடோ

"மகாத்மா காந்தி உண்மை, அன்பு மற்றும் அகிம்சை ஆகியவற்றின் சிறந்த மற்றும் துணிச்சலான சாட்சியாக இருந்தார்" : பேராயர் மச்சாடோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில், மதச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு மும்பையின் வசை பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 7,இஞ்ஞாயிறன்று, கிறிஸ்தவ போதகரையும் அவரது இரண்டு நண்பர்களையும் தாக்கியதாக உத்மான் என்பவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, கிறிஸ்தவர்களின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு காவல்துறை ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டி இந்து மத அடிப்படைவாதிகள் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ள நிலையில் பேராயர் மச்சாடோ இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவின் பல்சமய கொள்கை, பன்முகக் கலாச்சாரத் தன்மை, நாட்டின் ஆன்மிகம் ஆகியவை உயிர்களைப் பாதுகாக்கவும், மக்களிடையே அமைதியை மேம்படுத்தவும், நமது பொதுவான இல்லமாகிய  படைப்பில் அக்கறை காட்டவும் உதவ வேண்டும் என்று கூறியுள்ள பேராயர் மச்சாடோ அவர்கள், நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரம் அனைவருக்குமானது என்றும் அது எல்லோரையும் பாதுகாப்பதாக அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் மதச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்று விளக்கிய பேராயர் மச்சாடோ அவர்கள், ஒரு மதத்தின் நம்பிக்கையைப் பின்பற்றுவதும் அதனைப் பரப்புவதும் அடிப்படை உரிமையாகும், இது மீறப்படும்போது, சட்டத்தைப் பயன்படுத்தலாம், மற்றும் இதுகுறித்து நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நாம் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்றும், முக்கியமாக, நமது மத மரபுகள் வேறுபட்டவை, அவ்வேறுபாடுகள் மோதல்களுக்கும் சர்ச்சைகளுக்கும், தப்பெண்ணங்களுக்கும் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார் பேராயர் மச்சாடோ. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2022, 14:04