உண்மையான அமைதி, நீதியைக் கொண்டிருக்கவேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்கிரைன் மீதான இரஷ்யாவின் பெரிய அளவிலான ஆக்கிரமிப்புக்கு உக்ரேனியர்கள் தங்களின் பணிகள் மற்றும் நம்பிக்கை வழியாகப் பதிலிறுப்பு செய்து வருகின்றனர் என்று பிலடெல்பியாவின் பேராயர் Borys Gudziak அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரஷ்யா உக்ரைன்மீது போரைத் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ள உக்ரைனின் கிரேக்கக் கத்தோலிக்க வழிபாட்டு முறைப் பேராயர் Gudziak அவர்கள், இப்போர் உக்ரைன் கத்தோலிக்கரை ஒன்றிணைந்து அமைதிக்காக இறைவேண்டல் செய்யத் தூண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
உரோமை பயணத்தின்போது வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இறைவேண்டல், தகவல் பரிமாற்றம், பிறரன்பு பணிகள் ஆகிய மூன்று வழிகளில் அமெரிக்காவின் உக்ரேனிய விசுவாசிகள், போருக்குப் பதிலளித்து வருவதாகக் கூறியுள்ளார் பேராயர் Gudziak.
அமைதி என்பது நீதியைக் கோருவதற்குத் தேவைப்படுகிறது என்றும், அமைதியைப் பெறுவதற்கு அவசியம் நீதி வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ள பேராயர் Gudziak அவர்கள், உண்மையில் அமைதி நிலவுவதற்கு நீதி பற்றிய தெளிவு இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதிக்கான எங்கள் இறைவேண்டல் நீதியை உள்ளடக்கியிருக்கிறது. தங்கள் உயிரைக் கொடுப்பவர்களுக்காகவும், அப்பாவிகளுக்காகவும் புலம்பெயர்ந்தோருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும், கைவிடப்பட்டவர்களுக்காகவும், கைம்பெண்களுக்காகவும், உலகத்தலைவர்களுக்காகவும், நாங்கள் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருகின்றோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Gudziak.
உக்ரைனில் தேவைகள் அதிகளவில் உள்ளன, அவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தவேண்டாம், தயவுசெய்து உதவிகளைத் தொடருங்கள் என்றும் விண்ணப்பித்த பேராயர் Gudziak அவர்கள், உக்ரைன் மக்கள் தங்களுக்கு உதவும் அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும், கடவுளின் நீதி ஒரு நாள் வெல்லும் என்ற உண்மையை அவர்கள் நம்புகிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்