தேடுதல்

அலெப்போ ஆயர் Antoine Audo அலெப்போ ஆயர் Antoine Audo  

அலெப்போ, வறுமை எனும் குண்டுவீச்சு பிரச்சனையை எதிர்கொள்கிறது

சிரியாவில் 11 ஆண்டுகளாக இடம்பெற்ற போர், மற்றும் பொருளாதாரத் தடைகள், அலெப்போ நகரை வறுமைக்குள் விட்டுச்சென்றிருக்கின்றன

மெரினா ராஜ் - வத்திக்கான்

வேலையின்மை, எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை என, பல பிரச்சனைகளைச் சந்தித்துவரும் சிரியாவின் அலெப்போ நகரில் 80 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்று, அந்நகர் ஆயர் Antoine Audo அவர்கள் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு வரை வன்முறை, இராணுவக் குழுக்கள், மற்றும் குண்டு வீச்சுக்கள் எதுவும் இல்லாத சிரியா, இப்போது வறுமை என்னும் குண்டுவீச்சு பிரச்சனையை எதிர்கொள்வதாக, கல்தேய கத்தோலிக்க ஆயர் Antoine Audo அவர்கள், தான் மேற்கொண்ட லெபனோன் பயணத்தின்போது கத்தோலிக்கச் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

செல்வந்தர்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழைகள் ஆதரவற்றவர்களாகவும் மாறிவரும் சூழலில் பட்டப்படிப்பை முடிக்கும் சிரியா இளையோர், எதிர்காலம் கருதி சிரியாவை விட்டு வேறு நாடுகளுக்குச் செல்வது மிகவும் வருத்தமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார் ஆயர் Audo.

போருக்குமுன் 15 இலட்சம் கிறிஸ்தவர்களைக் கொண்டிருந்த சிரியா, தற்போது ஐந்து இலட்சமாகவும், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்களைக்கொண்ட அலெப்போ நகர் தற்போது முப்பதாயிரம் ஆகவும் குறைந்த நிலையில், அருள்பணியாளர்களும் துறவிகளும் மக்களுக்கு மருத்துவ உதவி, உணவு, கல்வி முதியோர் பராமரிப்பு போன்றவறறைக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார் ஆயர்.

கிறிஸ்தவர்கள் இல்லாத சிரியாவை நினைத்துப் பார்க்க இயலாது, எனவே அம்மக்கள் சிரியா நாட்டை விட்டுச் செல்ல வேண்டாம் என ஏராளமான முஸ்லிம்கள் தன்னிடம் கூறியதாக எடுத்துரைத்த ஆயர், எண்ணிக்கையில் நாம் குறைவானவர்களாக இருந்தாலும், நம்முடைய நம்பிக்கை, வரலாறு இவற்றிலிருந்து வெளிப்படும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாக, உறுதியுடன் நிலைத்திருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆயர் Audo. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2022, 15:29