தேடுதல்

ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் கலந்தாய்வு கூட்டம் பிலிப்பீன்ஸ் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் கலந்தாய்வு கூட்டம் பிலிப்பீன்ஸ் 

சமத்துவமின்மையைக் கட்டுப்படுத்துவதே திரு அவையின் நோக்கம்

ஏழைகள் மற்றும் தேவையிலிருப்பவர்களுக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள, அடையாளம் காண, ஒன்றிணைந்து பயணிக்கும் திரு அவை அழைக்கின்றது.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்கே உள்ள கெவாய்ட் மாநிலத்தின் டாகெய்டே(Tagaytay) என்னும் இடத்தில் ஜுலை 4 முதல் 7 வரை நடைபெறும் தேசிய அளவிலான ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் கலந்தாய்வு கூட்டத்தில் ஏறக்குறைய 200 ஆயர்களும் ஏராளமான அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் பங்கேற்கின்றனர்.

நவீன காலத்தில் திருஅவை சந்திக்கும் சவால்கள் குறித்து இக்கலந்தாய்வு கூட்டம் விவாதிக்க உள்ள நிலையில், ஏழைகள் மற்றும் தேவையிலிருப்பவர்கள் குறித்த திருஅவை அங்கத்தினர்களின் பாராமுகத்தை நாம் புரிந்துகொள்ளவும், அடையாளம் காணவும் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவை நம்மை அழைக்கின்றது என்று பிலிப்பீன்ஸ் ஆயர்கள் மாநாட்டின் தலைவரும் கலூக்கன் மறைமாவட்டத்தின் ஆயருமான பாப்லோ விர்ஜிலியோ டேவிட் கூறியுள்ளார்.

தங்களது கூட்டத்தின் நோக்கம் தெளிவானது, எளிமையானது என்று கூறிய ஆயர், பிலிப்பீன்சில் நிலவும் மூன்று வகை பிரச்சனைகளான அச்சங்கள், கடந்த காலக் காயங்கள், பாராமுகங்கள் போன்றவற்றை உறுதியுடன் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கோண்டார்.

கத்தோலிக்கர்களை அதிகமாகக்கொண்ட பிலிப்பீன்சில் தற்போது மக்களிடையே பொருளாதார இடைவெளி அதிகமாக உள்ளதாகவும், 2018ஆம் ஆண்டில் 21.1 விழுக்காடாக இருந்த வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளோரின் எண்ணிக்கை பெருந்தொற்று காரணமாக 23.7 விழுக்காடாக உயர்ந்துள்ளாதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்திலும் சமூகத்திலும் நடக்கும் தீமைகளை நேரில் கண்டும் அமைதி காப்பவர்கள் போல் இல்லாது அதற்கு எதிர் குரல் கொடுப்பவர்களாக நாம் மாறவேண்டுமென்று 2021ஆம் ஆண்டு ஆயர் Broderick Pabillo கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த, மணிலாவிலிருந்து கலந்தாய்வில் பங்கேற்ற ரபேல் குரூஸ் அவர்கள், வறுமைக்கும் அநீதிக்கும் எதிராகப் போராடும் ஆயர்கள் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் எனவும், அவர்களின் காதுகளுக்கு ஏழை மக்களின் அழுகுரல் நிச்சயம் கேட்கும் என்றும் UCA செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2022, 14:42