மனந்தளராமல் அமைதியைக் கட்டியெழுப்புங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், அமைதியைக் கட்டியெழுப்புதல், நீதியைத் தேடுதல், மற்றும், வாழ்வைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சோர்வுறாது தொடர்ந்து பணியாற்றுமாறு, குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர் ஆயர்கள்.
அனைத்துச் சூழல்களிலும், மக்களிலும், நீதியைத் தேடுமாறும், மனித வாழ்வைப் பாதுகாக்குமாறும் கடவுள் நமக்கு அழைப்புவிடுக்கிறார் என்று, தங்களின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தின் இறுதியில் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
"அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது" (உரோ.5,5) என்ற தலைப்பில் கூட்டத்தை நடத்திய ஆயர்கள், போர், பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள காலக்கட்டத்தில் வாழ்ந்துவரும் நாம், மனித மாண்பு பாதுகாக்கப்பட உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஊழல், பொறுப்பற்றதன்மை, சுய ஆதாயம், நாட்டின் அனைத்து நிலைகளிலும் இருக்கின்ற அரசியல் தலைவர்களின் குறுகிய கண்ணோட்டம் போன்றவற்றுக்கு எதிரான தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ள ஆயர்கள், நாட்டின் கொள்கைகள், பூர்வீக மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
பங்குத்தளப் பணிகளில் இளையோர் மற்றும், சிறாரையும் ஈடுபடுத்த வேண்டியது முக்கியம் என்பதையும் குவாத்தமாலா ஆயர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்