தேடுதல்

இளையோரும் முதியோரும் இளையோரும் முதியோரும்  

தாத்தா பாட்டியுடன் ஒன்றிணைந்து செயல்களைச் செய்வோம்

தென் கொரியா தலைநகரான செயோலில் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் முதியோர் இரண்டாவது உலக நாளை முன்னிட்டு, டிஜிட்டல் புகைப்பட போட்டி நடைபெறுகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இவ்வாண்டு ஜூலை 24ம் தேதி கொண்டாடப்படும், இரண்டாவது உலக தாத்தாக்கள்  பாட்டிகள்  மற்றும் முதியோர் நாளை, டிஜிட்டல் புகைப்பட போட்டி வழியாகச் சிறப்பிக்க, தென் கொரியா நாட்டின் தலைநகரான செயோல் உயர்மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி செயலகம் தொடங்கியுள்ளது.

இப்போட்டியை நடத்துகின்ற அச்செயலகப் பணிக்குழு தலைவர் அருள்பணி Esteban NA Jong-jin அவர்கள் அப்போட்டி குறித்து கூறுகையில், கிறிஸ்தவர்கள், தங்களது தாத்தாக்கள் பாட்டிகளுடன் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிடும் நிகழ்வுகளை புகைப்படங்களாக்கி, இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று, தான் பெரிதும் நம்புவதாக தெரிவித்துள்ளார். 

“தாத்தாக்கள் பாட்டிகளுடன் ஒன்றிணைந்து செயல்களைச் செய்வோம்” என்னும் தலைப்பில், இவ்வாண்டு ஜூலை 1 முதல் 31 வரை செயோலில் நடைபெறும் இப்போட்டியில், தங்களது தாத்தாக்கள் பாட்டிகளுடன் நேரம் செலவிட்டு அந்த நிகழ்வை புகைப்படங்களாக்கி இப்போட்டியில் பங்கேற்கலாம் எனவும்,  அக்டோபர் மாதத்தில் இப்புகைப்படங்கள் அனைத்தும் Myeongdong கண்காட்சியில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி Esteban. 

திருவிவிலியப்படி ஆண்டு நீட்டிப்பு என்பது கடவுளின் ஆசீர்வாதம் எனவும், வயது முதிர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்ல, மாறாக நிறைவான வாழ்வைக் கொடுக்கும் கடவுளின் நன்மைத்தனத்தின் வாழும் அடையாளங்கள் என்னும் திருத்தந்தையின் சொல்லின்படி முதியோருக்கு உதவுவதற்காக இந்த நாள் கொண்டாடப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர்,  அன்புக் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப, தலைமுறைகளுக்கிடையே ஒற்றுமையை உருவாக்க திருத்தந்தை அவர்களால் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நாளின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் தென் கொரியா நாட்டில் செயோல் உயர் மறைமாவட்டத்தில் பேராயர் Peter CHUNG Soon-taick அவர்களால் ஆடம்பரத் திருப்பலியுடன் நடைபெற இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2022, 15:42