புனித தோமா பெருவிழா : ஆண்டவரில் ஆழமான நம்பிக்கைக் கொள்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. திப 10: 24-35 II. எபே 2: 19-22 III. யோவா 20: 24-29)
இன்று நாம் இயேசுவின் சீடர்களில் ஒருவரும், இந்தியாவின் திருத்தூதருமான புனித தோமாவின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று இவரைத் தவிர வேறு எந்தச் சீடரும் அறிக்கையிடவில்லை. இயேசுவின் சீடர்களில் ஒருவராக அவருடன் மூன்று ஆண்டுகள் பயணித்த தோமா, உயிர்த்த ஆண்டவரை நேரில் பார்த்தால்தான் நம்புவேன் என்று அடம்பிடித்து ஆண்டவரைக் கண்டுகொள்கிறார். அந்நற்செய்தியை இப்போது வாசிக்கக் கேட்போம்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர், அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
இந்தப் பகுதியை வாசிக்கும்போதே தோமாவைப் பற்றி ஒரு கணிப்பு நம் உள்ளத்தில் நிச்சயம் எழுந்திருக்கும். அதாவது, அவரைச் ‘சந்தேகத் தோமையார்’ என்று சொல்லியிருப்போம். இது இன்று நேற்றல்ல, காலம் காலமாக நடக்கும் ஒன்றுதான். “அவரு சரியான சந்தேகப் பேர்வழிங்க, உயிர்த்த ஆண்டவரையே இப்படிப் போய் சந்தேகிக்கிறாரே...” என்றெல்லாம் நம் மனதிற்குள் அவரைப் பற்றி தீர்ப்பு எழுதி முடித்திருப்போம். என்னைப் பொறுத்தளவில் மகதலா மரியாவை தவிர மற்ற எல்லா சீடர்களுமே சந்தேகப் பேர்வழிகள்தாம். ஆனால் நாம் வசதியாக புனித தோமாவை மட்டுமே பற்றிக்கொண்டோம். காரணம், மற்ற எல்லா சீடர்களுக்கும் இந்தச் சந்தேகம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் பூட்டிய அறைக்குள் இருந்திருக்க மாட்டார்கள் அல்லவா? மற்றெல்லாரும் சந்தேகங்களைத் தங்கள் மனதிற்குள் வைத்திருந்தார்கள். ஆனால், தோமை மட்டும் வாய் திறந்து கேட்டுவிட்டார். அவ்வளவுதான் வித்தியாசம்.
இன்றைய நம் மனித வாழ்வில் கடவுள்மீதான சந்தேகங்களும், மனப்போராட்டங்களும், துயரங்களும், தோல்விகளும், ஏமாற்றங்களும் எண்ணிலடங்கா வகையில் ஊற்றெடுக்கும்போது, நாமும் கடவுளின் இருப்பைக்குறித்து கேள்விகள் எழுப்பத் தொடங்கிவிடுகிறோம். “கடவுள் உண்மையில் இருக்கிறாரா? அவர் இருந்திருந்தால் எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குமா? எல்லாம் என் தலைவிதி படிதான் நடக்கிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்றெல்லாம் கூறி நமது நம்பிக்கையற்ற தனத்தை வளர்த்துக்கொள்ளவே விழைகின்றோம்.
கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து அறிந்துகொள்ள ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். எல்லா ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள் என்றார். அதற்கு அந்தப் பக்தர், “அப்படியென்றால், ஏன் என்னால் அவரை உணர முடியவில்லை?” என்று வினவினார். அதற்கு அந்த மகான், “உன் எண்ணங்களில் அவர் இருக்கிறார், ஆனால், உன் எண்ணங்கள் முழுவதும் உலகக் காரியங்களில் மூழ்கியிருப்பதால் உன்னால் அவரை உணர முடியவில்லை” என்று பதிலளித்தார். இப்படி பல வழிகளில் அந்த மகான் உண்மையை அவருக்குப் புரியவைக்க முயன்றார். ஆனால் அவரோ அதை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தார். இதனால் அந்தப் பக்தரை புனிதநதி ஒன்றிற்குச் செல்லுமாறும், அங்கு அபூர்வமான வண்ணத்தைக் கொண்ட ஒரு மீனைச் சந்திக்குமாறும் அறிவுறுத்தினார் அந்த மகான். மேலும், மனிதர்கள் போலவே பேசும் குரல் அந்த மீனுக்கு இருப்பதால் அவர் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்றும் கூறினார். மகானின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அப்பக்தர், அந்நதியை நோக்கி உடனே புறப்பட்டார். நதியை வந்தடைந்த அவர், அபூர்வமான மீனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த மீன், “எங்கிருந்து வந்திருக்கிறாய்?” என்று கேட்டது. அதற்கு அந்தப் பக்தர், “மகான் ஒருவர் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள என்னை உன்னிடம் அனுப்பி வைத்தார்” என்று கூறினார். அதற்கு அந்த மீன், எனக்கு ஏழு நாள்களாக ஒரே தாகம். எங்குத் தண்ணீர் கிடைக்கும்?” என்று கேட்டது. அதற்கு பக்தர், “ஏய், பைத்தியக்கார மீனே, வலது, இடது, மேலே, கீழே என்று எல்லாப் பக்கங்களிலும் உன்னைச் சுற்றித் தண்ணீர் தானே இருக்கிறது. வேண்டிய அளவிற்குக் குடித்துக்கொள்ள வேண்டியதுதானே” என்று பதிலளித்தார். உடனே மீன் கொஞ்சம் கடுமையாக, “நீ தேடிக் கொண்டிருக்கும் கடவுளும் அப்படிதான். எல்லா பக்கங்களிலும் இருக்கிறார்” ஆனால் உன்னால் அவரைக் காணமுடியவில்லையே” என்று கூறியது. “அப்படியானால் கடவுளை உணர முடியாமல் ஏன் இப்படித் தவிக்கின்றேன்?” என்று கேட்டார். அதற்கு அந்த மீன், “இதே கேள்வி தான் எனக்கும். எப்பக்கமும் தண்ணீரால் சூழ்ந்திருக்கும் எனக்கு, ஏன் தாகம் தணியவில்லை என்பது தான். மீனின் வடிவமைப்பு குறித்து அந்தப் பக்தர் நன்கு அறிந்திருந்ததால், மீன் எப்படி நீந்தினால் அதன் வாயில் தண்ணீர் சென்று அதன் தாகம் தணியும் என்பதை அவர் அம்மீனிற்கு எடுத்துரைத்தார். உடனே மீன், “நான் எப்படி நீந்தினால் என் தாகம் தணியும் என்று நீ கூறியது போல, முயற்சி செய்தால் நீயும் கடவுளை உணரலாம். உலக ஆசைகளைத் திசை திருப்பி கடவுளின் மேல் செலுத்த வேண்டும். உலகக் காரியங்களின் மேல் இருக்கும் எண்ணங்களைக் கடவுள் மேல் திருப்பினால் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்கும், கடவுள்மீதான நம்பிக்கை வளர்ந்து, சந்தேகங்கள் தீரும் என்றார்.
ஒரு சீடர் காட்டிக்கொடுத்தார், மற்றொருவர் மறுதலித்தார், இன்னொருவர் இயேசுவை கைது செய்தபோது ஆடை போனாலும் பரவாயில்லை ஆள் தப்பித்தால் போதும் என்று ஓடிப்போனார். இப்படியாக ஒவ்வொரு சீடருமே தன் பங்கிற்கு இயேசுவின் மீது சந்தேகப் பார்வையோடுதான் இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார். அவர் காட்டும் வழியில் செல்வேன் என்று கூறி, அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்கள் அன்றுமுதல் இன்றுவரை நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். இதற்கு ஆதாரமாகத் திருவிவிலியத்தில் வரும் சில நபர்களை இப்போது நினைவு கூர்வோம்.
தீமை நிறைந்த இவ்வுலகை வெள்ளத்தால் கடவுள் அழிக்க முனைந்தபோது, அவர் கண்களுக்கு நோவா மட்டுமே இறைநம்பிக்கை நிறைந்தவராக இருப்பதைக் கடவுள் கண்டார். தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார் (தொநூ 6:9). அவ்வாறே ஆபிரகாம் கடவுளின் நம்பிக்கைக்குரிய மனிதராக வாழ்ந்தார். அவர்மீது ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தார். இதன்பொருட்டே கடவுள் ஆபிரகாமின்மீது அன்பு கொண்டிருந்தார். அவரை நிறைவாக ஆசீர்வதித்தார். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” (தொநூ 12:2). யோபுவின் வாழ்விலும் இதுதான் நிகழ்கிறது. இன்பம், துன்பம், நெருக்கடிகள், வேதனைகள், கொடிய மரணம் என எல்லா நிலைகளிலும் அவர் ஆண்டவர்மீதான தனது நம்பிக்கையில் மட்டும் தளரவில்லை. ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார் (யோபு 1:1).
மரியா கடவுள்மீது கொண்ட ஆழமான நம்பிக்கையால், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார் (லூக் 1:38). யோசேப்பு மரியாவைக் குறித்து கலக்கமடைந்த நிலையில் அவரை ஏற்றுக்கொள்ளுமாறு வானதூதர் யோசேப்பிடம் கூறியபோது, அவர் மறுப்பேதுமின்றி மரியாவை ஏற்றுக்கொண்டார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார் (மத் !:24). யோவான் நற்செய்தியில் இலாசர் இறந்த பிறகு அங்கே செல்கிறார் இயேசு. அப்போது மரியா அவரை எதிர்கொண்டு சென்று, தனது வருத்தத்தைப் பதிவு செய்கிறார். அப்போது, இயேசு. கூறும் வார்த்தைகளில் மரியா நம்பிக்கை வைப்பதைப் பார்க்கின்றோம். இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார். (யோவா 11:25-27))
குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுடன் காட்டு வழியே பயணம் போய்க்கொண்டிருந்தார். அப்போது அவர் தன்னுடைய சீடர்களில் ஒருவரிடம், "எனக்குத் தாகமாக இருக்கிறது, போய் குடிக்கத் தண்ணீர் கொண்டுவா” என்றார். அச்சீடரும் தன்னிடம் இருந்த பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். சிறிது நேரத்தில் ஒரு சிறிய நீர் நிலையைக் கண்ட அவர், அப்பாத்திரத்தில் தண்ணீர் எடுக்க முனைந்தபோது, மாட்டு வண்டி ஒன்று அந்நீர்நிலைக்குள் இறங்கி சென்றதால் அது சேறும் சகதியுமாகக் கலங்கி விட்டது. இந்தக் கலங்கிய நீரை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று சிந்தித்தார். எனவே, தண்ணீரின்றி திரும்பி வந்து, நடந்ததைத் தன் குருவிடம் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, குரு அச்சீடரை மீண்டும் அந்நீர்நிலைக்குச் சென்று தண்ணீர் கொண்டுவர பணித்தார். அவர் நீர்நிலை அருகே சென்று பார்த்தார். அப்போது தண்ணீர் பாதியளவுதான் தெளிந்திருந்தது. எனவே இந்த முறையும் தண்ணீரின்றி திரும்பி வந்து நிலைமையைக் குருவிடம் கூறினார். மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து திரும்பவும் குரு அவரை அனுப்பினார். இப்போது அந்த நீர்நிலையில் இருந்த தண்ணீர் முழுவதுமாகத் தெளிந்திருந்தது. அதனைக் கொண்டுவந்து தனது குருவிடம். கொடுத்தார். அப்போது குரு அச்சீடரிடம், “தண்ணீர் தெளிவதற்கு நீ என்ன செய்தாய்..?” என்று கேட்டார். “நான் ஒன்றும் செய்யவில்லை குருவே! அது தெளியும் வரை பொறுமையோடு அமைதியாகக காத்திருந்தேன்” என்றார். “நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது, அல்லது, கடவுள்மீதான நமது நம்பிக்கை குறையும்போது, நாம் ஒன்றும் செய்யத் தேவை இல்லை. அமைதியாக மனதை அப்படியே கடவுளிடம் விட்டுவிட்டால் போதும். சிறிது நேரத்திற்குப் பின் அந்த மனது கடவுளின் அருளால் தெளிந்துவிடும்” என்றார் குரு.
இன்று நாம் பெருவிழாக் கொண்டாடும் தோமாவும் உயிர்த்த ஆண்டவர்மீது சந்தேகம் கொண்டவராய் மிகவும் குழப்பமான மனதுடன் இருந்தார். எனவேதான், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றெல்லாம் கூறி தோமா ஆண்டவர்மீது அவநம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் ஆண்டவர் அவர் முன்னால் வந்தபோது, தோமா தான் விரும்பியவாறெல்லாம் அவரைத் தொட்டுப்பார்கவில்லை, மாறாக, அவரைக் கண்டதுமே “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று அறிக்கையிட்டு, தனது அவநம்பிக்கையைப் போக்கி நம்பிக்கை நிறைந்த வாழ்விற்குத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். ஆகவே, புனித தோமையைப் போன்று நாமும் நம்பிக்கை குறைந்த நிலையிலிருந்து நம்பிக்கை நிறைந்த நிலைக்குக் கடந்து செல்வோம். அதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்