தேடுதல்

திருத்தந்தை  6ம் உர்பன் திருத்தந்தை 6ம் உர்பன் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 6ம் உர்பன்

கர்தினால்கள் அவை கோபமுற்று, திருத்தந்தை 6ம் உர்பானை பதவியிலிருந்து விலக்குவது அல்லது கைது செய்வதைத்தவிர வேறுவழியில்லை எனக் கண்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

   பலகாலமாக தொடர்ந்து பிரெஞ்ச் நாட்டவர்களே திருத்தந்தையர்களாக இருந்து, பிரெஞ்ச் ஆதிக்கத்தை கொண்டிருந்த நிலையில், 1378ம் ஆண்டு திருத்தந்தையானார் இத்தாலியின் Bari பேராயர் Bartolomeo Prignano. இவர் இத்தாலியின் Naplesல் 1318ம் ஆண்டு பிறந்தார். இவர் இளவயதிலேயே பிரான்சின் Avignonக்கு சென்றதால் அங்கு நிறைய நண்பர்களை சம்பாதித்தார். அந்நேரத்தில் திருத்தந்தையர்களின் உறைவிடம் அவிஞ்சோனாகத்தான் இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். 1364ம் ஆண்டு இவர் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். திருத்தந்தை 11ம் கிரகரி காலமானபோது, பேராயராயிருந்த Prignanoவின் பெயரே முன்மொழியப்பட்டது. இதற்கு காரணம் அவரின் அறிவு மற்றும் நிர்வாகத்திறமை மட்டுமல்ல, Naples அரசி Joanna வழங்கிய ஆதரவும்தான். 1378ம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி, அதாவது  திருத்தந்தை 11ம் கிரகரியின் மரணத்தின் ஒன்பது நாட்களுக்குப்பின் கூடிய கர்தினால்கள் அவை, திருத்தந்தையை தேர்ந்தெடுக்க எடுத்துக்கொண்ட காலம் மிகச்சிறியது என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்க கர்தினால்கள் வத்திக்கானிற்குள் நுழைந்தபோது, உரோமைய மக்கள் வத்திக்கானிற்குள் புகுந்து, “எங்களுக்கு இத்தாலிய திருத்தந்தையே வேண்டும்”என கூக்குரலிடத் தொடங்கினர். அப்படியொரு வாக்குறுதியை எவருக்கும் தரமுடியாது என தலைமைக் கர்தினால் உரைக்க, மக்களோ வத்திக்கானைவிட்டு வெளியேறாமல் இரவு  முழுவதும் அங்கேயே தங்கியிருந்து குடித்து, “உரோமை பாப்பிறையே வேண்டும், குறைந்தபட்சம்  இத்தாலிய நாட்டவராவது வேண்டும்” என சப்தம் போட்டுக் கொண்டே இருந்தனர். மக்களின் இப்போக்கு வன்முறையாக மாறும் அபாயம் இருப்பதைப் புரிந்து கொண்ட கர்தினால்கள், பேராயர் Prignanoவைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரை மக்களிடம் அறிவிக்க முடியவில்லை. ஏனெனில் பேராயர் இதற்கு சம்மதம் கொடுப்பாரா என்பது நிச்சயமில்லா நிலை. இதனிடையே, பேராயர் Prignanoவுக்கும், இரகசியமாக வரும்படி செய்தி அனுப்பப்பட்டது.

அடுத்த நாள் காலையில் கர்தினால்கள் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, மக்கள் புனித பேதுரு பசிலிக்கா கோவில் மணியை அடித்து கிளர்ச்சி செய்தனர். கர்தினால்களும், திருத்தந்தையை தேர்ந்தெடுத்து விட்டோம் என மக்களிடம் அறிவித்தார்களே ஒழிய, யார் என்று பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் மக்களின் ஆவேசம் அதிகரிக்கவே, ஏற்கனவே ஒருவரை தேர்ந்தெடுத்திருந்தாலும் அந்த நேரத்தில் சமாளிப்பதற்கென ஒரு வயது முதிர்ந்த இத்தாலிய கர்தினால் Tebaldeschi என்பவரை அரியணையில் அமர்த்தி முடிசூட்டத் துவங்கினர். அந்த வயது முதிர்ந்த கர்தினாலோ, தனக்கு இதில் விருப்பமில்லை என மீண்டும் மீண்டும் கூறினாலும் கர்தினால்கள் விடவில்லை.  

    இத்தகைய ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, நல்லவேளையாக பேராயர் Prignano வத்திக்கானுக்குள் வந்து சேர்ந்து, தான் அடுத்த திருத்தந்தையாக இருப்பதற்கான சம்மதத்தை வழங்கினார். பிரச்சனை சுமுகமான தீர்வுக்கு வந்தது. மக்களும் இந்த இத்தாலிய திருத்தந்தையை ஏற்றுக் கொண்டனர். திருத்தந்தை 6ம் உர்பன் என்ற பெயரை எடுத்துக்கொண்ட இவர், பேராயராக இருந்தபோது கொண்டிருந்த நல்ல பெயரையும் குணங்களையும் திருத்தந்தையானபின் இழந்தார் என்றே கூறவேண்டும். காலப்போக்கில் இவர்மீது அதிருப்தி கொண்ட கர்தினால்கள், இவரின் தேர்வு குறித்த கேள்வியை எழுப்பினர். திருத்தந்தை மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்தன. இதற்கிடையில், Naples அரசி Joannaவும் அவர் கணவர் மீது திருத்தந்தை எடுத்த தேவையற்ற நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்தார். திருத்தந்தைக்கு எதிரான கர்தினால்கள் ஒன்றிணைந்து ஜெனிவாவின் இராபர்ட் என்பவரை எதிர்திருத்தந்தையாக தேர்ந்தெடுத்தனர். திருத்தந்தை 6ம் உர்பான் பதவியேற்ற 6 மாதங்களிலேயே குழப்பம் பெருகிவிட்டது.  மன்னர் ஐந்தாம் சார்லஸின் ஆதரவுடன் சில கர்தினால்கள் ஒன்றிணைந்து எதிர்திருத்தந்தையாக ஜெனிவாவின் இராபர்ட் என்பவரை 1378ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ந்தேதி தேர்ந்தெடுக்க, அவரும் 7ம் கிளமென்ட்  என்ற பெயரை எடுத்துக்கொண்டார். மேற்கு நாடுகளின் திருஅவையில் பிரிவினையும் துவங்கியது. 

    எதிர்திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தில் இத்தாலிய கர்தினால்கள் பங்குபெறவில்லை. எனினும் புதிய திருத்தந்தையின் தேர்வு திருஅவை விதிகளுக்கு உட்பட்டதே என ஏற்றுக்கொண்டனர். ஐரொப்பாவில் இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் இங்கிலாந்தின் கீழ் இருந்த பிரான்ஸ் நிலப்பகுதி தவிர ஏனைய அனைத்தும் எதிர்திருத்தந்தை 7ம் கிளமென்டை ஏற்றுக் கொண்டன. ஜெர்மன், பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, Naples மன்னராட்சி தவிர இத்தாலி ஆகிய அனைத்தும் 6ம் உர்பானை திருத்தந்தையாக ஏற்றுக் கொண்டன. இரு பிரிவுகளாக, இரு திருத்தந்தையர்கள் ஒரே நேரத்தில் ஆட்சி செய்தபோது, திருத்தந்தை உர்பானை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் திருத்தந்தை 7ம் கிளமென்டோ, அரசு ஆதரவுடன் அதிகாரமிக்கவராகச் செயலாற்றினார். 13 பிரெஞ்ச் கர்தினால்களும் எதிர்திருத்தந்தை 7ம் கிளமென்ட் வசம் சென்றுவிட்டதால், ஏனைய காலிஇடங்களையும் நிரப்பும் நோக்கில் 28 புதிய கர்தினால்களை உருவாக்கினார் திருத்தந்தை 6ம் உர்பான். அதிலும் 4பேர் அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டனர். இத்தகைய குழப்ப நிலைகளுக்கெல்லாம் காரணம், திருஅவையின் தலைமைப்பீடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரான்சின் Avignonல் இருந்ததாகும். பிரெஞ்ச் மன்னர் திருஅவை மீதான தன் அதிகாரம் தொடர்ந்து இருக்க வேண்டும் எனக் கொண்டிருந்த பேராசை காரணமாகவே இத்தனைக் குழப்ப நிலைகளும் ஏற்பட்டன.

            திருத்தந்தை 6ம் உர்பானின் செயற்பாடுகள் குறித்து எத்தனைக் குறை கூறினாலும், அவரின் தேர்வானது திருஅவை விதிகளுக்கு இயைந்தவகையிலே நடந்தது. அதேவேளை, எதிர்திருத்தந்தை 7ம் கிளமென்டின் தேர்வோ, முறையற்ற ஒன்றாக இருந்தது. இருப்பினும், திருத்தந்தை 6ம் உர்பான் தன் நிர்வாகத்தில் சில குளறுபடிகளைச் செய்ததையும் நாம் மறுக்க முடியாது. Naplesன் அரசி Joanna திருத்தந்தை 7ம் கிளமென்டை ஆதரித்ததால், அரசியை எதிர்த்தார் உர்பான். இதனால் திருத்தந்தை 6ம் உர்பானின் ஆதரவு Durazzoவின் Charles என்ற சிற்றரசருக்குச் சென்றது. அவரும் Joannaவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தார். சிற்றரசர் சார்லசுடன் ஆன உறவும் அதிக காலம் நீடிக்கவில்லை. திருத்தந்தை உர்பானின் உறவினர் ஒருவருக்கு சிற்றரசர் சார்லஸ் உதவி ஒன்று செய்ய மறுத்ததால், திருத்தந்தைக்கும் அவருக்கும் இடையே மோதல் துவங்கியது. இதற்கிடையில், தென் இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பினார் திருத்தந்தை. கர்தினால்களோ, அத்தகைய விபரீத எண்ணம் வேண்டாம் என்றனர். அதையும் மீறிச் சென்றார் திருத்தந்தை 6ம் உர்பான். Aversa எனுமிடத்தில் திருத்தந்தையை வரவேற்ற மன்னர், அன்றிரவே திருத்தந்தையை சிறைவைத்தார்(1383 அக்டோபர் 30). கர்தினால்களின் தலையீட்டின்பேரில் விடுதலை அடைந்த திருத்தந்தை, Aversa விட்டு வெளியேறி Nocera நோக்கிப் பயணமானார். 

Noceraவிலோ திருத்தந்தை 6ம் உர்பான், மன்னர் சார்லஸின் மனைவி மார்க்ரெட்டால் அவமரியாதையாக நடத்தப்பட்டார். மன்னர் சார்லசுக்கும் திருத்தந்தைக்கும் இடையேயான பகைமை வளர்ந்தது. இதற்கிடையில், மேலும் 14 புதிய கர்தினால்களை உருவாக்கியதால் கர்தினால்கள் அவை கோபமுற்றது. திருத்தந்தை 6ம் உர்பானை பதவியிலிருந்து விலக்குவது அல்லது கைது செய்வதைத்தவிர வேறுவழியில்லை எனக் கண்டது. இது எப்படியோ திருத்தந்தைக்குத் தெரியவர, பழைய கர்தினால்கள் 6 பேர் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சில கர்தினால்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். Naplesன் அரசனும் அரசியும் இந்த கர்தினால்களுக்கு உதவினார்கள் என்பதால் அவர்களும் திருஅவையிலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். இதனால் கோபமுற்ற மன்னர், திருத்தந்தை தங்கியிருந்த Noceraவை முற்றுகையிட்டார். ஐந்து மாதங்கள் இருதரப்பினரிடையே மோதல் இடம் பெற்றது. தோல்வியுற்ற திருத்தந்தை 6ம் உர்பான், தான் சிறைபிடித்து வைத்திருந்த கர்தினால்களுடன் கப்பலில் ஜெனோவாவிற்கு தப்பியோடினார். போகிற வழியிலேயே Aquilaவின் ஆயர் கொல்லப்பட்டார். ஏனைய கர்தினால்கள் அனைவரும், Adam Aston என்ற ஒருவரைத்தவிர, ஜெனோவாவில் கொல்லப்பட்டனர். 

    இதற்கிடையில், சார்லஸ் மன்னர் 1386ம் ஆண்டு பிப்ரவரியில் ஹங்கேரியில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, Naples அரசாட்சியை தனக்கு சார்பாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்தார் திருத்தந்தை. ஆனால் Naples பகுதியோ தற்போது மீண்டும் திருத்தந்தை 7ம் கிளமென்ட்க்கு ஆதரவானவர்கள் வசம் சென்றுவிட்டது. இதனால் எதிர் திருத்தந்தை 7ம் கிளமென்டை முறியடிக்க, சிலுவைப்போருக்கென படை திரட்டினார் திருத்தந்தை 6ம் உர்பான். படைகளைத் திரட்டிய திருத்தந்தையால், வீரர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாததால் படை சிதறியது. திருத்தந்தையும் வேறு வழியில்லாமல் உரோம் நகர் திரும்பினார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளைக் கணக்கில்கொண்டு ஒவ்வொரு 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூபிலி ஆண்டு 1390 முதல் திருஅவையில் கொண்டாடப்பட வேண்டும் என கட்டளைப் பிறப்பித்தார். ஆனால், அந்த யூபிலி ஆண்டைத் துவக்கிவைக்க அவர் உயிரோடு இல்லை. திருத்தந்தை 6ம் உர்பானின் காலம் திருஅவையில் ஓர் இருண்ட காலமாக இருந்தது என்று கூறலாம். பதவிக்கான மோதல்களும், தனிநபர் பகைமைகளும் திருஅவையின் புனிதத்துவத்திற்கு கேள்விக்குறியாக நின்றன. இத்திருத்தந்தை 1389ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தேதி இறைபதம் சேர்ந்தார்.

  நேயர்களே! திருஅவையின் அடுத்த திருத்தந்தையின் ஆட்சி காலம் எப்படியிருந்தது என வரும்வாரம் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2022, 10:17