திருத்தந்தையர் வரலாறு- திருத்தந்தை 5ம் உர்பான்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
பிரான்ஸ் நாட்டில் Grisac எனுமிடத்தில், 1310ல் பிறந்த Guillaume de Grimoard என்பவர், அங்கேயே பயின்று பெனடிக்டன் துறவியாகி, திருஅவைச் சட்டத்தில் மறைவல்லுனராகி, கர்தினாலாக இல்லாமலேயே திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தையான பின்னரும் பெனடிக்டன் துறவு உடையை அணிந்து, Avignonல் இருந்து திருத்தந்தையரின் இல்லத்தை உரோமுக்கு மீண்டும் மாற்றுவதில் ஓரளவு வெற்றியும் கண்ட திருத்தந்தை 5ம் உர்பான் குறித்து இன்று நாம் நோக்குவோம்.
1310ம் ஆண்டு பிறந்த இத்திருத்தந்தை 1342ம் ஆண்டில் திருஅவைச் சட்டத்தில் மறைவல்லுனராகி, அக்காலத்தின் புகழ் வாய்ந்த மறைவல்லுனராகத் திகழ்ந்தார். 1352ம் ஆண்டு Notre-Dame du Pré என்ற துறவு இல்லத்தின் அதிபராக திருத்தந்தை 6ம் கிளமென்டாலேயே நியமிக்கப்பட்டார். இவர் திருத்தந்தையின் தூதுவராக பல இடங்களுக்கும் சென்று அரசியல் மற்றும் அமைதிப்பணிகளை மேற்கொண்டார்.
முதலில் மிலான் பேராயர் Giovanni Visconti அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த திருத்தந்தையால் அனுப்பப்பட்டார். பின்னர், நேப்பிள்ஸ் இளவரசி ஜொவான்னா அவர்களின் அரசவையிலும் திருப்பீடப் பிரதிநிதியாகச் செயலாற்றியுள்ளார். இத்தாலியில் இவர் திருத்தந்தையின் தூதுவராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது திருத்தந்தை 6ம் இன்னசென்ட் 1362ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ந் தேதி காலமானார். இவ்வேளையில் அடுத்த திருத்தந்தைக்கான தேர்தலில் கர்தினால்களிடையே பெருங்குழப்பம் ஏற்பட்டதால், கர்தினாலாக இல்லாத, Marseillesன் புனித விக்டர் துறவுமட அதிபரும், திருத்தந்தையின் தூதுவருமான இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நற்குணங்களையும், கல்வித் திறனையும், திருஅவை விவகாரங்களில் அனுபவத்தையும் கொண்ட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது பலராலும் வரவேற்கப்பட்டது. தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இத்தாலியில் இருந்த இவர், அதே ஆண்டு(1362) அக்டோபர் 28ம் தேதி பிரான்சின் Marseilles வந்து, மூன்று நாட்களுக்குப்பின் Avignon நகர் வந்தடைந்து, நவம்பர் 6ம் தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் உர்பான் என்ற பெயரை எடுத்ததற்கான காரணமாகக் கூறியது என்ன தெரியுமா? 'உர்பான் என்ற பெயரில் இதுவரை இருந்துள்ள அனைத்து திருத்தந்தையர்களும்(நான்கு) புனிதர்களாகியுள்ளனர்' என்பதேயாகும். இவரும் திருஅவையில் அருளாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய திருத்தந்தை 5ம் உர்பான் 1362ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ந்தேதி பிரான்சின் Avignonல் திருத்தந்தையாக பொறுப்பேற்ற இரண்டு வாரங்களிலேயே திருத்தந்தையை சந்திக்க வந்த பிரான்ஸ் மன்னர் ஜான், திருத்தந்தையிடமிருந்து பல சலுகைகளை எதிர்பார்த்தார். நேப்பிள்சின் இளவரசி Joannaவை தன் மகன் பிலிப்புவுக்கு திருமணம் செய்துவைக்க திருத்தந்தையின் உதவியை நாடினார். மற்றும், தனக்கு வேண்டிய 4 பேரை கர்தினால்களாக அறிவிக்கும்படி வேண்டினார். திருத்தந்தை 5ம் உர்பான் எதற்கும் இசைவு அளிக்கவில்லை. ஆட்சிபுரிய இடமில்லாமல் மன்னர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வந்த Majoraca வின் மன்னர் ஜேம்ஸ் என்பவரை இளவரசி மணம்புரிய விரும்பியதை அறிந்து அதற்கு ஆதரவளித்தார்.
இத்திருத்தந்தை அமைதி நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டிச் செயல்பட்டார். Avignonலிருந்து திருத்தந்தை செயல்படுவதைவிட உரோம் நகருக்குச் செல்வதே திருஅவைக்கு நல்லது என்பதை உணர்ந்த திருத்தந்தை, இதனை வெளிப்படையாக அறிவித்தபோது, பிரெஞ்ச் நாட்டவரைத்தவிர மற்ற அனைவரும் இதனை பலமாக வரவேற்றனர். திருஅவை மீதான பிரெஞ்ச் நாட்டின் ஆதிக்கம் இதனால் குறைவுபடும் என்பதை உணர்ந்த பிரெஞ்ச் மன்னர் இதனை பலமாக எதிர்த்தார். இருப்பினும், 1367ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ந்தேதி Avignonஐ விட்டு உரோம் நோக்கி பயணமானார் திருத்தந்தை 5ம் உர்பான். இத்தாலியில் இவருக்கு பலமான வரவேற்பு வழங்கப்பட்டது.
இவர் முதலில் இத்தாலியின் வித்தெர்போ நகரில் சில காலம் இருந்தார். உரோம் நகருக்குச் செல்வதற்குத் துணையாக இவருக்கு இராணுவம் தேவைப்பட்டது. சில இளவரசர்களின் துணையுடன் அக்டோபர் மாதம் 16ந்தேதி உரோம் நகருக்குள் நுழைந்தார் திருத்தந்தை 5ம் உர்பான். பல கோவில்கள் இவர் வந்தபின் சீரமைக்கப்பட்டன. இதுவரை அசிசி நகரில் பாதுகாக்கப்பட்டு வந்த திருப்பீடக் கருவூலம் உரோம் நகருக்குக் கொண்டுவரப்பட்டு கோவில்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டது. பேரரசர் சார்லசும் ஜெர்மனியிலிருந்து வந்து திருத்தந்தைக்குப் பணிந்து, உரோம் நகரின் வழிபாட்டுச் சடங்குகளில் கலந்து கொண்டார். இருப்பினும், இத்தாலியின் அரசியல் பதட்டநிலைகளும், அமைதியற்ற செயல்பாடுகளும் திருத்தந்தையை Avignon நகருக்குத் திரும்பவேத் தூண்டின. Avignonக்குத் திரும்ப வேண்டாம் என்ற புனித பிரிஜித்தின் விண்ணப்பங்களும் செவிமடுக்கப்படவில்லை. இதற்கிடையே, பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே போர் மூண்டது. திருத்தந்தையும் அமைதிக்கான முயற்சிகளில் ஈடுபட பிரான்ஸ் திரும்பினார். பிரான்ஸ் மன்னரும் பெரிய கப்பற்படையை அனுப்பி திருத்தந்தையை பிரான்சுக்கு அழைத்து வந்தார். ஆனால் விரைவிலேயே திருத்தந்தை மரணமடைந்தார். Avignonல் 1370ம் ஆண்டு டிசம்பர் 19ல் இறைபதம் சேர்ந்தார் திருத்தந்தை 5ம் உர்பான்.
இத்திருத்தந்தை ஐரோப்பிய சமுதாயத்தின் அமைதிக்காக அயராது உழைத்தார். சிலுவைப்போரிலும் ஆர்வம் காட்டினார். தன் உறவினர்களுக்கு எவ்வித சலுகை வழங்கப்படுவதையும் விரும்பவில்லை. இவர் திருத்தந்தையானபின் இவரின் தந்தைக்கு பிரெஞ்ச் மன்னர் வழங்க முன்வந்த ஓய்வூதியப் பணத்தையும் வாங்க வேண்டாம் என திருப்பி அனுப்பி விட்டார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியாகவே இருந்தார். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு இவர் என்றுமே மறுத்ததில்லை. இவ்வுன்னத திருத்தந்தை ஐந்தாம் உர்பான்,1870ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி திருத்தந்தை 9ம் பயஸால் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்