தேடுதல்

கடுனாவில் அருள்பணியாளர்கள் அமைதிப் பேரணி  கடுனாவில் அருள்பணியாளர்கள் அமைதிப் பேரணி  

நைஜீரிய அருள்பணியாளர்கள்: நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல

நைஜீரியாவின் உள்நாட்டுப்போரின்போதுகூட அருள்பணியாளர்கள் படுகொலைகள் இடம்பெறவில்லை. இப்போது நடைபெறுவது, நாட்டின் தலைமைத்துவத்தில் எங்கோ தவறு நடப்பதைக் குறித்துக் காட்டுகிறது - கடுனா பேராயர் Ndagoso

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணியாளர்கள், பயங்கரவாதிகள் அல்ல, அரசு நைஜீரிய மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும், மற்றும், நாட்டில் நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்ற விளம்பரத் தட்டிகளுடன், 700க்கும் மேற்பட்ட நைஜீரிய அருள்பணியாளர்கள் அமைதிப் பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஜூன் 25, சனிக்கிழமையன்று நைஜீரியாவின் கடுனாவில் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட அருள்பணியாளர் Vitus Borogo அவர்களுக்கு ஜூலை 01, இவ்வெள்ளியன்று நிறைவேற்றப்பட்ட அடக்கச்சடங்கு திருப்பலியில் பங்குபெற அந்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தி, இன்னும் எமக்கு ஓர் அரசு இருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்பினர்.

இத்திருப்பலியில் மறையுரையாற்றிய கடுனா பேராயர் Matthew Man-oso Ndagoso அவர்கள், நைஜீரியாவில் உறுதியற்றதன்மை அதிகரித்து வருகின்றது என்றும், வன்முறைத் தாக்குதல்களுக்குப் பலியாகுவோம் என்ற அச்சத்தில் அந்நாட்டினர் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், நடுவண் அரசும், இவ்வன்முறை விவகாரத்தைத் தடுத்துநிறுத்த இயலாமல் இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.  

நைஜீரியாவில் தாக்குதல்களும் கொலைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் அந்நாட்டினர், தங்களின் சொந்த நாட்டிற்குள்ளேயே கைதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்றுரைத்த பேராயர் Ndagoso அவர்கள், இவ்வாண்டில் தனது உயர்மறைமாவட்டத்தில் குற்றக்கும்பல்களால் மூன்று அருள்பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று கவலை தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களுக்குமுன்னர், கொல்லப்பட்ட அருள்பணி Aketeh Bako அவர்களின் சடலத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், அவரது உடலின்றியே அடக்கச்சடங்கு, நிறைவேற்றப்பட்டது மிகுந்த வேதனையளிக்கின்றது என்றும், பேராயர் Ndagoso அவர்கள் தன் மறையுரையில் கூறியுள்ளார்.

ஜூன் 25, சனிக்கிழமையன்று, கடுனாவில் அருள்பணியாளர் Vitus Borogo மற்றும், ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமையன்று அருள்பணியாளர் Christopher Odia Ogedegbe ஆகிய இருவரும் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2022, 14:31