கொல்லப்பட்டுள்ள அருள்பணி Cheitnumவின் பணி அர்ப்பணத்திற்கு....
மெரினா ராஜ்: வத்திக்கான்
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஜூலை 15, கடந்த வெள்ளியன்று கடத்தப்பட்டு அதே நாளில் கொலைசெய்யப்பட்ட அருள்பணி John Mark Cheitnum அவர்கள், கடவுளுக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்தவர் என்று, அவரது மரணம் குறித்து, அவரது Kafanchan மறைமாவட்டம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அருள்பணி ஜான் மாற்கு அவர்கள், கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த மறைமாவட்டத்திற்கும் ஆழ்ந்த துயரத்தையும் வேதனையையும் அளிப்பதாக, Kafanchan மறைமாவட்டத்தின் சான்சிலர் அருள்பணி Emmanuel Uchechukwu Okolo அவர்கள் தெரிவித்துள்ளார்.
அனைவரும் சட்டங்களை, தங்கள் கைகளில் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள அருள்பணி இம்மானுவேல் அவர்கள், கொல்லப்பட்டுள்ள அருள்பணியாளரின் மறைவினால் வருந்தும் குடும்பத்தாருக்கு, கடவுளின் ஆறுதல் உடனடியாக கிடைக்கப்பெறவும், அவரது ஆன்மா நிறையமைதியடைய தான் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 15ம் தேதி உள்ளூர் நேரம் மாலை 5.45 மணியளவில், கடுநா மாநிலத்தின் Lere நகரின் கிறிஸ்து அரசர் பங்குத்தளத்தின் அருள்பணியாளர் இல்லத்திலிருந்து அருள்பணியாளர்கள் ஜான் மாற்கு, தெனாதுஸ் கிளேயோப்பா ஆகிய இருவரும் கடத்தப்பட்டனர் என்று, அருள்பணி இம்மானுவேல் அவர்கள் கூறியுள்ளார்.
அருள்பணி கிளேயோப்பா அவர்கள், கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்துவிட, அருள்பணி ஜான் மார்க் அவர்கள் கடத்தப்பட்ட அன்றே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உரைத்துள்ள அருள்பணி இம்மானுவேல் அவர்கள், அருள்பணி ஜான் மார்க் அவர்களது உடல், ஜூலை 19, இப்புதனன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அப்பகுதி கடத்தப்பட்ட இடத்திலிருந்து வெகுதொலைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அருள்பணி ஜான் மாற்கு அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலி, ஜூலை 21, உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்பணி ஜான் மாற்கு அவர்கள், கிறிஸ்து அரசர் ஆலயப் பங்குத்தந்தை, அவரது மறைமாவட்டத்தின் தகவல் தொடர்பு இயக்குனர், மற்றும் கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நைஜீரியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 68 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்