தேடுதல்

தற்காலிக முகாம்களில் மியான்மர் மக்கள் தற்காலிக முகாம்களில் மியான்மர் மக்கள்  

மனிதமாண்பும் வாழ்வும் மதிக்கப்பட வேண்டும். - பேராயர் டின்வின்

மனித அடிப்படை உரிமைகளான உணவு, உடை, தங்குமிடம், நல ஆதரவு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். - மியான்மார் பேராயர் மார்கோ டின்வின்

மெரினா ராஜ் வத்திக்கான்

கிறிஸ்தவ இல்லங்கள், ஆலயங்கள், உடைமைகள் போன்றவை எரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உணவு, உடையின்றி துன்புறும் நிலை அறிந்து தான் மிகவும் வருந்துவதாகவும், பொதுமக்களை மையப்படுத்தி இத்தகைய தாக்குதல்களை நடத்தும் மியான்மர் இராணுவத்தைக் கண்டிப்பதாகவும்,  அந்நாட்டின் Mandalay பேராயர் மார்கோ டின் வின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூலை 17 அன்று UCA செய்திகளுக்கு அளித்துள்ள காணொளிச்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பேராயர் டின் வின் அவர்கள், வீடு மரம் பறவை இல்லாத, சாம்பல் நிரம்மிய இடங்களாக மக்களின் கிராமங்கள் மாறி இருப்பதும், தாக்குதல்களுக்கு அஞ்சி மக்கள் காடுகளிலும் பிற பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்திருப்பதும் மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மனித அடிப்படை உரிமைகளான உணவு, உடை, தங்குமிடம், நல ஆதரவு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், மனித மாண்பும் வாழ்வும் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் டின்வின்.

தற்போது நடைபேற்று வரும் மோதலின் விளைவாக,  கிறிஸ்தவர்களும் புத்த மதத்தினரும் ஒருவர் ஒருவரைப் புரிந்து இணக்கமாக உதவி செய்து வாழ்வதாகவும், ஒருவர் மற்றவருக்கிடையே வேறுபாடுகள் இருந்த போதிலும் மரியாதையுடன் அமைதியாக இணைந்து வாழ்வதாகவும்  பேராயர்  தெரிவித்துள்ளார். 

மியான்மரில் உள்ள சங்கேய் பகுதியின் மூன்று வரலாற்று சிறப்பு மிக்க கிறிஸ்தவ கிராமங்களை மையப்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படுவதால், மக்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் கடும் பசியோடு வருந்துகின்றனர் என்றும்  எடுத்துரைத்தார் பேராயர் டின்வின்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க கிராமம்தான் கர்தினால் சார்லஸ் போ  மற்றும் பேராயர் மார்கோ டின் வின் அவர்களை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2022, 13:15