ஆசிய விசுவாசம் குறித்து சிங்கப்பூர் புதிய கர்தினால்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆகஸ்ட் 27ஆம் தேதி புதிய கர்தினாலாக நியமிக்கப்பட உள்ள சிங்கப்பூர் உயர்மறைமாவட்ட பேராயர் வில்லியம் கோ அவர்கள், ஆசியா, ஆழமான மத நம்பிக்கை உள்ள கண்டம் என்றும், அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் கடவுளுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் மிகப்பெரிய இடம் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் உயர்மறைமாவட்டம் தனது 200வது ஆண்டினைக் கொண்டாடி சிறப்பித்த நிலையில், இந்த ஆசிய நாட்டில் கிறிஸ்தவம்பற்றி அந்நாட்டு வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஆசியர்களுக்கு என்று ஒரு வழி உண்டு என்றும், அவர்கள் யாரிடமும் தேவையற்ற விவாதங்களோ சண்டைகளோ போடுவது கிடையாது எனவும், மத நம்பிக்கைகளில் அதிக ஈடுபாடும், மத வழிபாட்டுகளில் அதிக ஆர்வமும் கொண்டவர்களாக ஆசிய மக்கள் திகழ்வதாகவும் சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ அவர்கள் கூறினார்.
ஆசிய நாடுகளில் மிகவும் சிறியதும் பணக்கார நாடுமாகிய சிங்கப்பூர் வாழ் கிறிஸ்தவ மக்கள் பற்றி கேட்டதற்கு பதிலளித்த பேராயர், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று சொல்வதை, தான் விரும்பவில்லை என்றும், கிறிஸ்தவர்கள் வலிமையானவர்கள், 35 இலட்சம் கிறிஸ்தவ மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஏறக்குறைய 15 இலட்சம் கிறிஸ்தவர்கள் திருப்பலிகளில் தவறாமல் கலந்து கொள்வதாகவும், புத்தம், இந்து கிறிஸ்தவம், இஸ்லாம், தாவோயிசம் என பல மதங்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொருவரும் அவரவர் மதத்தை மதிக்கும் பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.
பிறர் மதத்தை இழிவுபடுத்தக் கூடாது என்ற சட்டம் நாட்டிலுள்ளபோதிலும், எல்லா மதங்களையும் போற்றும் பழக்கம், அங்குள்ள மக்களிடத்தில் இயல்பாகவே இருப்பதாகவும், மத நல்லிணக்கத்தைக்கொண்ட சிங்கப்பூரில், பல்வேறு மதத்தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பிரச்சனைகளைப் பேசி தீர்த்து ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வருவதாகவும், பேராயர் வில்லியம் கோ தெரிவித்தார்.
இறுதியாக, ஒவ்வொருவரும் திருஅவைக்குத் தேவை என்ற திருத்தந்தையின் வலியுறுத்தலின்படி இரக்கத்தோடு வாழ, அருள்பணியாளர்களுக்காக, இறைநம்பிக்கையில் வாழமுடியாத பலவீனமான மக்களுக்காக நாம் தொடர்ந்து செபிக்கவும், செல்வமும் வணிகமும்கூட கடவுளைத்தேட வழிவகுக்கும் என்பதை உணர்ந்தவர்களாக, எல்லா நிலையில் உள்ள மக்களிடத்தில் இருந்தும் இறையழைத்தல் பெருக நாம் சிறப்பாக செபிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், ஆகஸ்ட் 27 அன்று புதிய கர்தினாலாக நியமிக்கப்படவுள்ள பேராயர் வில்லியம் கோ
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்