தேடுதல்

முதுபெரும்தந்தை கர்தினால் Bechara al-Rahi முதுபெரும்தந்தை கர்தினால் Bechara al-Rahi  

பேராயர் Moussaஐ கைதுசெய்தவர்கள் மீது நடவடிக்கை அவசியம்

பேராயர் Moussa el-Hage அவர்கள், தானாக எதுவும் செய்யவில்லை, மாறாக, மாரனைட் திருஅவை மற்றும், வத்திக்கானின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டார் - கர்தினால் al-Rahi

மேரி தெரேசா: வத்திக்கான்

இஸ்ரேலின் Haifaவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் எருசலேம், மற்றும், புனித பூமியின் மாரனைட் வழிபாட்டுமுறை பேராயர் Moussa el-Hage அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் நாடகம் என்று, லெபனோன் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Bechara al-Rahi அவர்கள் கூறியுள்ளார்.

பேராயர் Moussa el-Hage அவர்கள், அதிகாரிகளால் எட்டு மணி நேரம் கேள்விகளால் நச்சரிக்கப்பட்டபின், விடுதலை செய்யப்பட காரணமான லெபனோன் நாட்டின் நீதித்துறையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கர்தினால் al-Rahi அவர்கள் கூறியுள்ளார்.

ஜூலை 25, இத்திங்களன்று பேராயர் Moussa el-Hage அவர்கள் கைதுசெய்யப்பட்டவுடனேயே, மாரனைட் வழிபாட்டுமுறை ஆயர்களோடு கூட்டம் ஒன்றை நடத்திய கர்தினால் al-Rahi அவர்கள், ஹெஸ்பொல்லா உப இராணுவ அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு வைத்துள்ள நீதிபதி Fadi Akiki அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், மற்றும், அவர் பணியிலிருந்து நீக்கப்படவேண்டும் என மாரனைட் திருஅவை வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார்.

உலகின் சில அரசுகளால் பயங்கரவாத அமைப்பு என கூறப்பட்டுள்ள ஹெஸ்பொல்லா அமைப்பு, இக்கைதுக்குப் பின்புலமாக இருக்கலாம் என்றும் உரைத்துள்ள கர்தினால் al-Rahi அவர்கள், பொருளாதார நெருக்கடியால் துன்புறும் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச்செல்லும் வழியில் அப்பேராயர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

பேராயர் Moussa el-Hage அவர்கள், தானாக எதுவும் செய்யவில்லை, மாறாக, மாரனைட் திருஅவை மற்றும், வத்திக்கானின் வழிகாட்டுதலின்படியே செயல்பட்டார் என்றும் கூறியுள்ள கர்தினால் al-Rahi அவர்கள், மாபெரும் லெபனோன் நாடு உருவாக்கப்படுவதற்கு மாரனைட் திருஅவை ஆற்றியுள்ள பெரும்பங்கு குறித்து எடுத்துரைத்துள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2022, 15:09