தேடுதல்

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து அமைதி ஊர்வலம் (கோப்புப் படம்) கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து அமைதி ஊர்வலம் (கோப்புப் படம்) 

கிறிஸ்தவ வன்முறைக்கு எதிரான மனுவை விசாரிக்க தாமதம்

கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் 20 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 486 வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன : கிறிஸ்தவ ஐக்கிய அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் விசாரணைகள் கோரிய மனு மீதான விசாரணையை இந்திய உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜூலை 11, திங்களன்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி D.Y. Chandrachud தலைமையிலான அமர்வுக் குழு, மனு தொடர்பான ஆவணங்கள் வழக்கின் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இன்னும் வழங்கப்படாததால், வழக்கை பிற்பகுதிக்கு ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, தேசிய ஒற்றுமை அமைப்பு மற்றும் நற்செய்தி அறிவிப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலின் கொன்சால்வஸிடம், "இவ்வழக்கை ஜூலை 15, வெள்ளியன்று, எடுத்துக்கொள்வதாக நீதிபதி Chandrachud கூறியுள்ளார்.  

கடந்த ஜூன் 27, திங்களன்று, கிறிஸ்தவர்களுக்கும் அவர்களின் நிறுவனங்களுக்கும் எதிரான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறி மனு ஒன்றை தாக்கல் செய்து, அதனை அவசர மனுவாக விசாரிக்கக் கோரியிருந்த மூத்த வழக்கறிஞரான கொன்சால்வஸ், ஒவ்வொரு மாதமும் நாட்டில் சராசரியாக 45 முதல் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், கடந்த மே மாதத்தில் மட்டும், 57 வன்முறைச் சம்பவங்கள் நாடுமுழுதும் பதிவாகியுள்ளன என்றும், இதுவே அதிகபட்சமானது என்றும் எடுத்துக்காட்டியுள்ள கொன்சால்வஸ் அவர்கள், இதுபோன்ற தாக்குதல்கள் இன்னும் அதிகம் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

2018 -ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுகளுக்கு, கும்பல் வன்முறை மற்றும் மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட படுகொலைகள் உட்பட அதிகரித்து வரும் வெறுப்புக் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் வழிகாட்டுதல்களை வெளியிட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2022, 12:26